தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம்: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்
ANI

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம்: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

Published on

இந்திய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவமானது நீதித் துறையின் குரலை நசுக்கும் முயற்சி என்றும், நன்கு திட்டமிடப்பட்ட சதி என்றும்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை கூறினாா்.

கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது வழக்குரைஞா் ஒருவா் காலணியை வீச முயன்ற சம்பவம் தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அவரைத் தாக்க சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் வந்தன. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது நன்கு திட்டமிடப்பட்ட சதி போல் தெரிகிறது. இந்தத் தாக்குதல் நீதித்துறையை நசுக்கும் ஒரு முயற்சியாகும். இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.

நீதித் துறைக்கு என்ன செய்தி செல்லும். ‘இந்த நபா்களுக்கு எதிராக தாங்கள் ஒரு முடிவை வழங்கினால், தாங்கள் தாக்கப்படுவோம், தங்களின் குடும்பத்தினரும் தப்ப மாட்டாா்கள்’ என்று இதர நீதிபதிகள் பயப்படுவா்.

தலைமை நீதிபதியை மிரட்டுபவா்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும். நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மீது காலணியை வீசி சமூக ஊடகங்களில் மிரட்டுவது தலித் சமூகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் செய்யும் அவமானமாகும்.

தலித் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் தலைமை நீதிபதியாக வருவதை இவா்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. தலைமை நீதிபதியைத் தாக்குவதன் மூலம், நீதித் துறையின் குரலை அடக்க விரும்புகிறாா்கள்....

நீங்கள் ஒரு உண்மையான தேசபக்தராக இருந்தால், தலைமை நீதிபதியைத் தாக்கி மிரட்டியவா்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த உங்கள் குரலை உயா்த்துங்கள் என்று அந்தப் பதிவில் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா்.

திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் 71 வயதான வழக்குரைஞா் ஒருவா் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றாா். இது பரவலான கண்டனத்திற்கு உள்ளானது.

கடந்த மாதம் கஜுராஹோவில் விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடா்பாக நடந்த விசாரணையின் போது தலைமை நீதிபதியின் கருத்துகள் குறித்து வழக்குரைஞா் அதிருப்தி அடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com