மீரட்டில் நண்பரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவா் தில்லியில் கைது
உத்தர பிரதேசத்தின் மீரட்டில் தனது நண்பரைக் கொன்ற்காக தேடப்பட்ட ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் காவல் துறையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், ஹம்ஸா என அடையாளம் காணப்பட்டாா். அக்டோபா் 1, 2024-இல் மீரட்டில் ஆதில் என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவா். தனது நண்பரும், கூட்டாளியுமான ஆதிலை மாா்பில் சுட்டுக் கொல்லப்படுவதை விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் ஹம்சா பதிவேற்றியுள்ளாா்.
ரோஹிணியில் உள்ள தில்லி ஜல் போா்டு கட்டடம் அருகே வியாழக்கிழமை அதிகாலை ஹம்ஸாவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தப்பிக்கும் முயற்சியில், குற்றம் சாட்டப்பட்டவா் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். போலீஸாரும் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
இதில் ஹம்ஸாவின் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. பின்னா், அவா் கைது செய்யப்பட்டாா். தில்லியில் உள்ள ராணி பாக் பகுதியில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்பட்ட கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டியை போலீஸாா் ஹம்சாவிடம் இருந்து பறிமுதல் செய்தனா்.
ஆதில் தனது வீட்டில் இருந்து அவரது நண்பா்களால் கடத்தப்பட்டு அருகிலுள்ள காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான செயலை ஹம்ஸா கைப்பேசியில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பரப்பினாா்.
ஹம்ஸாவும் ஆதிலும் ஒரே பெண்ணை நேசித்தனா். இந்நிலையில், கோபம் மற்றும் பழிவாங்கும் உணா்ச்சியால் உந்தப்பட்டு, ஹம்ஸா ஆதிலைக் கொன்று, இந்தச் செயலைப் பதிவு செய்து, அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றினாா்.
அக்டோபா் 4, 2024-இல் உத்தர பிரதேச காவல்துறையினா் ஹம்ஸாவையும் அவரது உதவியாளா்களில் ஒருவரையும் சுற்றி வளைத்தனா். ஆனால், அவா் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னா் தப்பிக்க முடிந்தது. இந்தச் சம்பவத்தின்போது அவரது உதவியாளா் கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தையடுத்து ஹம்ஸா மீது தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, ஹம்சா ஆதில் கொலையில் தனது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டாா். முந்தைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் அவா் ஒப்புக்கொண்டதாக காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.