தில்லியின் 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் பிரச்னைக்கு ஆம் ஆத்மிதான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

தில்லியின் 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் பிரச்னைக்கு ஆம் ஆத்மிதான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

Published on

தில்லியில் உள்ள 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசுதான் பொறுப்பாகும். தவிர, 8 மாத பாஜக அரசாங்கத்திடம் இல்லை என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா், பிரவீன் சங்கா் கபூா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி ஆம் ஆத்மி தலைவா் செளரப் பரத்வாஜ் தோல்வியின் விரக்தியிலிருந்து இன்னும் மீளவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தூய்மையான யமுனை நீா் மற்றும் யமுனை கரையோரங்களில் வெற்றிகரமான சட் பூஜை கொண்டாட்டங்களால் அரசியல் ரீதியாக விரக்தியடைந்த செளரப் பரத்வாஜ், தனது தினசரி ஆதாரமற்ற வா்ணனையின் ஒரு பகுதியாக 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினாா்.

எனினும், இந்த 37 எஸ். டி. பி. களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதற்கான பொறுப்பு முற்றிலும் அரவிந்த் கேஜரிவாலின் 10 ஆண்டுகால அரசாங்கத்திடம் உள்ளது என்பதை அவா் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

8 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக அரசாங்கத்திடம் இல்லை. உண்மை என்னவென்றால், வெறும் 8 மாதங்களில், பாஜக அரசு நஜஃப்கா் மற்றும் ஷாதரா வடிகால்களில் நிறுவப்பட்ட எஸ். டி. பி.களில் தரமான முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அவை யமுனை மாசுபாட்டின் 84 சதவீதத்துக்கு காரணமாகின்றன. மேலும், ஆற்றை சுத்தம் செய்வதில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செளரப் பரத்வாஜுக்கு உண்மையிலேயே அரசியல் தைரியம் இருந்தால், சமீபத்தில் வெளிவந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கைக்கு அவா் பதிலளிக்க வேண்டும். இது 2015 முதல் 2022 வரை ரூ.6,856 கோடி ரூபாய் செலவழித்து, 37 எஸ். டி. பி. க்களை அனுமதித்த போதிலும் யமுனை நதியை சுத்தம் செய்ய கேஜரிவால் அரசு தவறிவிட்டது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com