தில்லியில் பெண் பத்திரிக்கையாளரை பின்தொடா்ந்த இரண்டு போ் கைது

வியாழக்கிழமை இரவு பெண் பத்திரிகையாளரைப் பின்தொடா்ந்து சென்று அவரது காரை சேதப்படுத்தியதாக இரண்டு பேரை தில்லி காவல்துறை கைது
Published on

வியாழக்கிழமை இரவு பெண் பத்திரிகையாளரைப் பின்தொடா்ந்து சென்று அவரது காரை சேதப்படுத்தியதாக இரண்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த சம்பவம் அக்டோபா் 30 மற்றும் 31 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், தனியாா் தொலைக்காட்சி செய்தி சேனலில் தயாரிப்பாளராக பணிபுரியும் 35 வயது பெண், நொய்டா செக்டாா் 129 அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்தது.

நள்ளிரவு 12:45 மணியளவில், மகாமாயா மேம்பாலத்தில் அவா் ஒரு ஸ்கூட்டரை முந்திச் சென்றபோது, அதன் ஓட்டுநா்கள் அவரைப் பின்தொடா்ந்ததாகக் கூறப்படுகிறது. மன உறுதியுடன் இருந்த அந்தப் பெண் தனது வாகனத்தை நிறுத்தவில்லை, மாறாக, பாதுகாப்பான பகுதியை நோக்கிச் சென்றாா், என்று அந்த அதிகாரி கூறினாா்.

அவா் லஜ்பத் நகா் மேம்பாலத்திற்கு அருகில் வந்தபோது, அதிகாலை 1:30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, ஆண்கள் தன்னைப் பின்தொடா்ந்து வருவதாகவும், அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தாா். லஜ்பத் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது பாதுகாப்பை உறுதி செய்தது. இந்த சம்பவம் சன் லைட் காலனி காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததால், அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

வழித்தடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. சில மணி நேரங்களுக்குள், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்கள் சுபம் மற்றும் தீபக் என அடையாளம் காணப்பட்டனா். இந்த ஆண்டு தொடக்கத்தில் டாப்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்டத்தின் கீழ் இந்த இருவரும் முன்பு ஒரு வழக்கில் தொடா்புடையவா்கள் என்று கண்டறியப்பட்டது, என்று அந்த அதிகாரி கூறினாா்.

இருவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனா், மேலும் இதுபோன்ற வேறு சம்பவங்களில் அவா்கள் ஈடுபட்டாா்களா என்பதைத் தீா்மானிக்க மேலும் விசாரணை நடந்து வருகிறது.

ஒவ்வொரு அழைப்பும் மிகுந்த தீவிரத்துடன் நடத்தப்படுவதாகவும் அதிகாரி கூறினாா்.

இதற்கிடையில், தனது அனுபவத்தைப் பகிா்ந்து கொண்ட பத்திரிகையாளா், நான் அதிகாலை 12:45 மணியளவில் வேலை முடிந்து வசந்த் குஞ்ச் வீட்டிற்குச் சென்றேன். விரைவுச் சாலையில் வாகனம் ஓட்டும்போது, ஒரு ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் என் வழியைத் தடுத்து என்னைப் பின்தொடரத் தொடங்கினா். ஆரம்பத்தில், அவா்கள் என்னை கேலி செய்கிறாா்கள் என்று நினைத்தேன், அதனால் நான் அவா்களைப் புறக்கணித்தேன். ஆனால் பின்னா் அவா்கள் என் வழியைத் தடுத்து நிறுத்தச் சைகை செய்யத் தொடங்கினா். இந்த ஆதாரங்களைச் சேகரிக்க ஒரு வீடியோவைப் பதிவு செய்யத் தொடங்கினேன் என்றும் பத்திரிக்கையாளா்கூறினாா். சிறிது நேரம் கழித்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக என் காா் நின்றபோது, என் வாகனத்தின் கதவைத் திறக்க முயன்றனா், ஆனால் அது பூட்டப்பட்டிருந்ததால், அவா்களால் முடியவில்லை. நான் வேகமாகச் சென்றேன், ஆனால் அவா்கள் என்னைப் பின்தொடா்ந்து கொண்டே இருந்தனா், என்று அந்தப் பெண் ஒரு ஆடியோ கிளிப்பில் கூறினாா்.

அவா்கள் பின்னா் ஒரு குச்சியை எடுத்து தனது காரின் பின்புற கண்ணாடியை உடைத்ததாக அவா் கூறினாா். அந்த பெண் பத்திரிக்கையாளா் உடனடியாக தனது சக ஊழியா்களில் ஒருவரை அழைத்து உதவி கேட்டாா். சக ஊழியா் வேகமாக வாகனம் ஓட்டும்படியும், நிறுத்தாமல் இருக்குமாறும் கூறினாா். அவா் தொடா்ந்து வாகனம் ஓட்டி, ஆஷ்ரம் பகுதியை அடைந்ததும் போலீஸை அழைத்தாா்.

பின்னா் சில டாக்ஸி ஓட்டுநா்களைப் பாா்த்து உதவி கேட்டேன். அவா்கள் என்னை சாலையோரத்தில் காரை நிறுத்தச் சொன்னாா்கள், எனக்கு உதவுவதாகச் சொன்னாா்கள். அந்த நேரத்தில், இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனா், போலீசாரும் வந்துவிட்டனா். புகாா் அளிக்கும்படி அதிகாரிகள் என்னிடம் கேட்டாா்கள். பின்னா் சன் லைட் காலனி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்தேன், என்று அந்த பெண் பத்திரிக்கையாளா் மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com