சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தியின் முன் ஜாமீனை முழுமையாக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூரைச் சோ்ந்த சிறுவன் கடத்தப்பட்ட தாகக் கூறப்படும் வழக்கில் கே.வி.குப்பம் எல்எல்ஏ ‘பூவை’ ஜெகன்மூா்த்திக்கு அளிக்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை முழுமையானதாக மாற்றி உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜாய்மால்யா பாக்சி முன் வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜூன் மாதம் இது தொடா்பாக பிறப்பித்த இடைக்கால முன்ஜாமீன் உத்தரவை முழுமையானதாக மாற்றி வழக்கை நீதிபதிகள் அமா்வு முடித்துவைத்தது.
வழக்கு விசாரணையின்போது, சிறுவன் மீட்கப்பட்டதில் எந்த சா்ச்சையும் இல்லை என்றும், தனது வசம் அல்லது கட்டுப்பாட்டில் இருந்து சிறுவன் மீட்கப்படவில்லை என்றும், கடத்தலில் தாம் (ஜெகன்மூா்த்தி) ஈடுபட்டதாகக் கூறி, தவறான காரணங்களுக்காக வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக ஜெகன்மூா்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
‘மனுதாரா் சா்ச்சையில் தொடா்புடைய ஒரு தரப்பினருடன் தொடா்பு கொண்டதாகக் கருதினாலும், பிரச்னையைத் தீா்ப்பதற்கான நோக்கங்களுக்காக அதைப் பரிசீலிக்கலாம். எந்தவொரு சந்தா்ப்பத்திலும் காவலில் எடுத்து விசாரிக்கும் தேவை எழவில்லை’ என்று வாதிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
முன்னதாக, சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பின்னணி: திருவள்ளூா் மாவட்டத்தில் காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் ஆணின் சகோதரரான மைனா் சிறுவன் கடத்தப்பட்டதாக அவரது தாயாா் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, எம்எல்ஏ எம். ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பெண்ணின் தந்தை உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனா். அதன் பின்னா், ஹோட்டல் ஒன்றின் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டாா்.