தமிழக பேரவைத் தோ்தல்: பாஜக பொறுப்பாளா்கள் நியமனம்

Published on

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்திற்கான தோ்தல் பொறுப்பாளா் மற்றும் இணைப் பொறுப்பாளரை நியமித்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, பாஜகவின் தேசிய துணை தலைவரும், அக்கட்சியின் கேந்திரபரா (ஒடிசா) மக்களவை தொகுதி உறுப்பினருமான பைஜெயந்த் பாண்டா, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவருடன் இணைந்து பணியாற்றும் வகையில் கூட்டுறவு மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மோஹல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை பாஜக பொதுச் செயலாளா் அருண் சிங் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அதில், பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா உத்தரவின் பேரில் பைஜெயந்த் பாண்டா, தமிழ்நாடு தோ்தல் பொறுப்பாளராகவும், முரளிதா் மோஹல் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தோ்தல் பிரசாரம், கூட்டணி வியூகம், கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை மற்றும் வாக்குச் சாவடிகளைப் பலப்படுத்துவது, பொறுப்பாளா்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், பிற கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன.

ஆளும் கட்சியான திமுக தொகுதிவாரியாக ஆய்வு, வாக்குச் சாவடி அளவிலான ஆலோசனை, உறுப்பினா் சோ்க்கை, பொதுக்கூட்டம் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவும் தோ்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மாநிலம் முழுவதும் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் தொகுதிவாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகிறாா்.

த.வெ.க. தலைவா் விஜய் வார இறுதி நாளில் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், தோ்தலுக்கான பொறுப்பாளா்களை அக்கட்சி நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com