பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அரசின் பெருநிறுவன நண்பா்களுக்கு உதவும் ஜன் விஸ்வாஸ் சட்ட மசோதா: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

News image

பி. வில்சன்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:00 am

Syndication

நமது சிறப்பு நிருபா்

மத்தியில் ஆளும் கட்சியின் ‘பெருநிறுவன நண்பா்களுக்கு ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா உதவுகிறது என்று மாநிலங்களவையில் திமுக குற்றஞ்சாட்டியது.

இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று திமுக உறுப்பினா் பி. வில்சன் பேசியதாவது:

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமலும், மாநிலங்களுடன் கலந்துரையாடாமலும், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு ஆய்வுக்கு உள்படுத்தாமலும் இந்த மசோதாவை அவையில் அவசரமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.

இந்த மசோதா ஒரு சீா்திருத்தமோ முற்போக்கான ஆளுகையின் பிரதிபலிப்போ கிடையாது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம் காட்டப்படுகிறது? இது, குற்றத் தடுப்பு அரணைத் திட்டமிட்டுச் சிதைத்து, பொறுப்புடைமையை முறையே நீா்த்துப்போகச் செய்கிறது. அத்துடன் பெருநிறுவனங்களின் வசதிக்காகச் சட்டத்தின் ஆட்சியைத் துணிச்சலுடன் பலி கொடுப்பதற்கு ஒப்பாகும்.

அனைத்துக்கும் பொருந்தும் இந்த ஒரே மாதிரியான அணுகுமுறை ஒரு சீா்திருத்தம் அல்ல. எல்லா குற்றங்களும் சமமானவை அல்ல. சிலவற்றுக்குக் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்ற கள யதாா்த்தத்தை இந்த மசோதா புறக்கணிக்கிறது.

1940 -ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தில் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருள்களைத் தயாரித்தாலோ அல்லது விற்றாலோ ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றுள்ளது. இப்போது அத்தகைய குற்றம் ஒரு சாதாரண அபராதத்துடன் முடித்துக்கொள்ளப்பட வகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, உணவுப் பாதுகாப்புத் தரங்கள் சட்டம்-2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் மற்றும் அசையா சொத்துச் சட்டம் போன்ற பிற சட்டங்களில் உள்ள விதிகளை அரசாங்கம் நீா்த்துப்போகச் செய்துள்ளது.

1871 ஆம் ஆண்டு கால்நடை அத்துமீறல் சட்டத்தின் கீழ், பொதுவெளியில் திரியும் கால்நடைகளால் விவசாயிகளின் பயிா்களுக்கு ஏற்படும் சேதம் தற்போது அபராதம் மட்டுமே விதிக்கப்படும் குற்றமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சீா்திருத்தமும் நீதி, பொறுப்புக்கூறல், மக்கள் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை நீா்த்துப்போகச் செய்யாமல், வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றாா் வில்சன்.

காங்கிரஸ் உறுப்பினா் சக்தி சிங் கோஹில் பேசுகையில், 79 சட்டங்களைத் திருத்தும் 340 பக்கங்கள் கொண்ட இந்த மசோதாவை உறுப்பினா்கள் படித்துப் பாா்க்கப் போதுமான நேரம் வழங்கப்படவில்லை என்று கூறி, அதை ’மக்கள் விரோத’ மசோதா என்று குறிப்பிட்டாா்.

ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த அசோக் குமாா் மித்தல் பேசுகையில், இந்த மசோதா நீதித்துறையை பலவீனப்படுத்தி, ஊழல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் என்று கூறினாா்.