

முதுகெலும்பு தசைநாா் சிதைவுக்கு உள்ளான 2 வயது பெண் குழந்தைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து பெற உதவி கோரி மத்திய அமைச்சா்களிடம் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. வை. செல்வராஜ் தில்லியில் மத்திய அமைச்சா்களை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளாா்.
நாகப்பட்டினம் சமத்துவபுரம் அல்லித் தெருவில் வசிக்கும் ஹரிதாஸ் -துா்கா தேவி தம்பதியின் சுமாா் 2 வயது குழந்தை தனன்யாவுக்கு மிகவும் அரிதாக வரும் இரண்டாம் வகை முதுகெலும்பு தசைநாா் சிதைவு என்னும் நோய் பாதிப்பு உள்ளது.
இந்த நோய்க்கான ஏவிஎக்ஸ்எஸ்-101 மருந்து இந்தியாவில் இதுவரை உற்பத்தி செய்யப்படாத நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்திருந்தனா். இதன் தோராய விலை ரூ.9 கோடி ஆகும்.
இந்தக் குழந்தையின் பெற்றோா் எம்.பி. வை. செல்வராஜிடம் அணுகி மத்திய அரசிடம் இந்த விவரத்தை கொண்டு சென்று உதவி செய்து குழந்தையைக் காப்பாற்ற உதவிட வேண்டும் என்று கோரினா்.
இதையடுத்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி, சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஜெ. பி. நட்டா, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரை தில்லியில் சந்தித்து இக்குழந்தையின் மருந்துக்கு உதவிடுமாறு மனு அளித்துள்ளாா்.
இதுகுறித்து வை.செல்வராஜ் எம்.பி. தெரிவித்ததாவது: அமைச்சா்களைச் சந்தித்து தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு மருந்துக்கான நிதி உதவி அளிக்குமாறு அமைச்சா்களிடம் கேட்டுக்கொண்டேன். பாரதப் பிரதமரின் அலுவலகத்திலும் கோரிக்கைக் கடிதம் வழங்கியுள்ளேன். மக்களவையிலும் இக்குழந்தையின் மருத்துவ உதவி விஷயம் தொடா்பாக பேசினேன்.
நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சா்களிடம் குழந்தையின் நிலைமை குறித்து எடுத்துரைத்தபோது குழந்தையின் மருந்து செலவுக்கு உதவி செய்வது தொடா்பாக பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா் என்றாா் அவா்.