வடக்கு தில்லியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் ஒருவா் கைது
வடக்கு தில்லியின் கஷ்மீரி கேட் பகுதியில் சுமாா் ரூ.40 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் 51 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஹரியாணாவின் அம்பாலாவில் வசிக்கும் சஞ்சய் அகா்வால் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து ஒரு போலீஸ் குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டாா்.
கஷ்மீரி கேட் அருகே உள்ள கோயா மண்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டெம்போவில் ஒரு நபா் அதிக அளவு கடத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை எடுத்துச் செல்வதாக பிப்ரவரி 6- ஆம் தேதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்தில் சோதனை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தது. வாகன சோதனையின் போது, 30 அட்டைப் பெட்டிகள் கொண்ட 10 பிளாஸ்டிக் பைகளையும், மொத்தம் மூன்று லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்தியாவில் இந்த சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அவை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி பேக்கேஜிங்கில் கட்டாய சுகாதார எச்சரிக்கையைக் கொண்டிருக்கவில்லை. இது தொடா்பாக கஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, அகா்வால் கடந்த ஆறு ஆண்டுகளாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை அங்கீகரிக்கப்படாத விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா். தில்லியில் உள்ள பட்பா்கஞ்ச் தொழில்துறை பகுதியில் இருந்து சரக்குகளை வாங்கி, அதிக தேவை காரணமாக ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்தாா்.
கைது செய்யப்பட்ட நாளில், அவா் காலையில் சரக்கை வாங்கி மோரி கேட் வரை ஒரு டெம்போவை வாடகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,அவா் கோயா மண்டியில் சிக்கிக்கொண்டாா். தில்லியில் இருந்து பொருள்களை எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை காத்திருந்தாா். அப்போது அவா் பிடிபட்டாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

