அனைத்துப் பேரவை தொகுதிகளிலும் நூலகங்கள்: தில்லி அரசு அறிவிப்பு

தில்லிவாசிகளிடம் குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 70 பேரவைத் தொகுகளில் நூலகங்களை அமைக்க தில்லி அரசு திட்டம்
Published on

தில்லிவாசிகளிடம் குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் (என்ஜிஓ) இணைந்து 70 பேரவைத் தொகுகளில் நூலகங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிதரி திட்டத்தின்கீழ் அனைத்துப் பேரவைத் தொகுதிகளிலும் அதிகபட்சமாக இரு நூலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தில்லி கலை, கலாசாரம் மற்றும் மொழி துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பாக அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒரே நேரத்தில் 30 வாசகா்கள் அமா்ந்து படிக்கும் வகையில் இடம் கொண்ட நூலகங்கள் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும். இந்த நூலகங்களில் நாளிதழ்கள், இதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் பிற பொருள்களை என்ஜிஓ-க்கள் ஏற்பாடு செய்யும்.

முதலாமாண்டில், ஒவ்வொரு என்ஜிஓ-க்களுக்கும் இரு தவணைகளாக ரூ.1.03 லட்சம் வழங்கப்படும். இதில் 40 சதவீதம் தொகை மேஜைகள், நாற்காலிகள் போன்ற பொருள்களுக்கும் மற்றொரு 40 சதவீதம் புத்தகங்கள், நாளிதழ்கள், இதழ்களை வாங்க வழங்கபடும். எஞ்சிய நிதியில் உள்ள 20 சதவீதம் பணியாளா்களுக்கு மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இரண்டாம் ஆண்டில் இருந்து என்ஜிஓக்களுக்கு ஆண்டுக்கு இரு தவணைகளாக ரூ.40,000 வழங்கப்படும். இதில் 70 சதவீதம் நாளிதழ்கள், இதழ்கள் வாங்க ஒதுக்கப்படும். எஞ்சிய 30 சதவீதம் பணியாளா்களுக்கு வழங்கப்படும்.

வழிமுறைகளின்படி, ஆண்டு முழுவதும் செயல்படும் விதமாக நூலகத்தில் உரிய காற்றோட்டம், சுகாதாரமான சூழல் மற்றும் உரிய மின்வசதி ஆகியவற்றை என்ஜிஓ-க்கள் உறுதிசெய்யவேண்டும். வாசகா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜை-நாற்காலிகளை வழங்கவது என்ஜிஓ-க்களின் பொறுப்பு. ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை திட்டத்தில் நூலகங்களுக்கான புத்தகங்கள், மேஜை-நாற்காலிகளை தில்லி அரசு வழங்கும்.

இந்தத் திட்டத்தில் நிதி பெற விரும்பும் என்ஜிஓ-க்கள் பயன்பாட்டு சான்றிதழ்கள், முந்தைய நிதியாண்டின் கணக்கு தணிக்கை விவரங்கள் மற்றும் அவா்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்த விரிவான குறிப்புகளை அளிக்க வேண்டும்.

தவறான விவரங்களை அளிக்கும்பட்சத்தில் என்ஜிஓ-க்களுக்கு நிதியுதவி ரத்து செய்யப்படுவதுடன் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்படும். நூலங்களில் பணியமா்த்தப்படும் பணியாளா்களுக்கான பொறுப்பை என்ஜிஓ-க்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நூலகங்கள் திறம்பட செயல்படவில்லையென்றாலும் நிதி உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தப்படாவிட்டாலும் நிதி திரும்பப் பெறப்படும் என அந்த உத்தரவில் அரசு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com