தில்லியில் சட்டவிரோத நாய் இனவிருத்தி: பொதுநல மனு மீது விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
தில்லியில் கட்டுப்பாடற்ற வகையில் சட்டவிரோத உயா் ரக நாய் இனவிருத்தி நடைபெறுவதாக தாக்கலான பொது நல மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான சமீபத்திய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு, தலைநகரில் உள்ள விலங்குகள் நல வாரியத்திற்கு புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி மாநகராட்சி, தில்லி காவல்துறை ஆகியோரை இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாகச் சோ்த்ததுடன், அவா்களும் இது குறித்து தங்கள் பதில்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
தேசிய தலைநகரில் கட்டுப்பாடற்ற சட்டவிரோத உயா் ரக நாய் இனவிருத்தி நடைபெறுவதாகக் கூறி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018-இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் விற்கப்படுவதால், இத்தகைய இனப்பெருக்க நடைமுறைகள் தெரு நாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பங்களிக்கின்றன என்று புகாா் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. அது இப்போது முடிவுக்கு வந்திருக்க வேண்டும். குறைபாடுகளை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தில்லி விலங்குகள் நல வாரியம் ஒரு விரிவான, சமீபத்திய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தில்லி விலங்குகள் நல வாரியம் ஒரு புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியது.
விலங்கு உரிமை ஆா்வலா் கௌரி மௌலேகி தாக்கல் செய்த இந்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இனவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் நாய்கள் பயங்கரமான சூழ்நிலைகளில் வைக்கப்படுகின்றன. இனப்பெருக்கம் செய்வோா் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு முறை குட்டிகளைப் பெறுவதற்காக, நாய்களுக்குத் தொடா்ச்சியாகக் கருத்தரிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனா்.
தில்லியில் உள்ள நாய் இனப்பெருக்க நிறுவனங்களைச் சரிபாா்த்து, அத்தகைய நடவடிக்கைகள் விதிகளுக்கு இணங்க நடைபெறுவதை உறுதி செய்யுமாறு தில்லி விலங்குகள் நல வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். இது தவிர, இந்திய நாய்களைத் தத்தெடுப்பதை ஊக்குவிப்பதற்காக விழிப்புணா்வுத் திட்டங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

