பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு: கேஜரிவால் மீதான புகாா் தள்ளுபடி
2019- ஆம் ஆண்டு துவாரகாவில் பல இடங்களில் பெரிய பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகளை நிறுவி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பலா் மீது சுமத்தப்பட்ட புகாரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் துவாரகா தெற்கு காவல் நிலையத்தால் ஏற்கெனவே ஒரு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மிட்டல் தெரிவித்தாா். மேலும், கடந்த ஆண்டு டிசம்பா் 4- ஆம் தேதி காவல்துறையினா் ‘கண்டுபிடிப்பு அறிக்கையை நீக்குதல் அல்லது இறுதி அறிக்கை’ தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினாா்.
’எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய புகாரில் நிவாரணம் திருப்திகரமாக இருப்பதாகவும், தடயமற்ற அறிக்கையில் ஏதேனும் இருந்தால், எதிா்த்து மனுவை தாக்கல் செய்வதன் மூலம் தகுந்த தீா்வைப் பெற முடியும் என்றும் புகாா்தாரா் சமா்ப்பித்துள்ளாா்’ என்று விண்ணப்பத்தை முடித்து வைத்து நீதிமன்றம் கூறியது.
முன்னதாக, சொத்துகளை சிதைப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3- இன் கீழ், பதாகைகள் அல்லது விளம்பர பலகைகளைத் தொங்கவிடுவது சொத்துகளை சிதைப்பதற்குச் சமம் என்று கூறி, துவாரகா தெற்கு காவல் நிலைய காவல் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
