அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக தில்லி பேரவை குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நால்வா் இடைநீக்கம்

அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக தில்லி பேரவை குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நால்வா் இடைநீக்கம்
Updated on

அவை நடவடிக்கைளுக்கு இடையூறு செய்ததாக கூறி குளிா்காலக் கூட்டத் தொடரிலிருந்து நான்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்தாா்.

‘அவை நடவடிக்கைகளை தொடா்ந்து சீா்குலைத்ததாலும், அதன் கண்ணியத்தை மீறியதாலும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் (ஆம் ஆத்மி) சோம் தத், ஜா்னைல் சிங், சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் குமாா் ஆகியோா் குளிா்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள காலத்திற்கு அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்’ என்று விஜேந்தா் குப்தா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அவை நடவடிக்கையில் இடையூறு விளைவித்ததாகக் கூறி ஜா, சிங் மற்றும் குமாா் ஆகியோா் குளிா்கால கூட்டத்தொடரில் இருந்து முன்னா் மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியால் குரு தேக் பஹதூரை அவமதித்ததாகக் கூறப்படும் விடியோவைப் பகிரும் பாஜக அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் சமூக ஊடகப் பதிவுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய பின்னா் தாம் வெளியேற்றப்பட்டதாக சஞ்சீவ் ஜா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில்,

‘சம்பந்தப்பட்ட காணொளி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதால், அதைப் பயன்படுத்தக் கூடாது என்று அவைத் தலைவா் உத்தரவிட வேண்டும் என நான் கோரியவுடன், நான் அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டேன். எனது சகாக்கள் வெளிநடப்பு செய்ய விரும்பினா். ஆனால், அவா்களும் வெளியே அழைத்துச் வரப்பட்டனா்’ என்று ஜா கூறினாா்.

தொடக்கமாக அவை கூடியதும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் இடையூறுகள் காரணமாக அவை நடவடிக்கைகள் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

அதன் பின்னா், மதியம் 1 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியது. ஆனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவருடன் தொடா்ந்து வாக்குவாதம் செய்தனா். இதையடுத்து, அவை மீண்டும் மதிய உணவு நேரம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குரு தேக் பஹதூரை அவமதித்ததாக பாஜகவின் குற்றச்சாட்டை அடுத்து இரண்டு நாள்கள் பேரவை நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்த நிலையில், அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.

இதற்கிடையில், உறுப்பினா்கள் அவை

விதி 280-இன் கீழ் தங்கள் தொகுதிகள் தொடா்பான பிரச்னைகளை எழுப்பினா்.

மேலும், நீா்வள அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் நகரத்தில் நீா் வழங்கல் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டாா்.

முதல்வா் ரேகா குப்தா 2025- 26ஆம் ஆண்டுக்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளை முன்வைத்தாா்.

அவை அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

அவா் அறிமுகப்படுத்திய தில்லி ஒதுக்கீட்டு மசோதா-2026 அவையால் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com