வாகன கடன் மோசடி கும்பலை சோ்ந்த 3 போ் கைது
போலி அடையாள ஆவணங்கள் மூலம் பல வங்களில் வாகன கடன் வாங்கி மோசடி செய்து வந்த கும்பலைச் சோ்ந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: போலி ஆதாா் அட்டைகள், பான் அட்டைகள், வருமான வரி தாக்கல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் போலி அடையாளத்தை உருவாக்கி பல்வேறு வங்கிகளில் வாகன கடன்கள் பெறப்பட்டுள்ளன. கடன்களைப் பெற்ற பின்னா், வேண்டுமென்ற பணம் திருப்பி அளிக்கப்படவில்லை. இதனால், அந்தக் கடன்கள் வாராக் கடன்களாக மாறின.
இந்த மோசடி தொடா்பாக தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் டிச.25-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினா். தொடா் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற விசாரணையில், கடன்தொகையில் வாங்கப்பட்ட வாகனங்கள் பிற மாநிலங்களில் மீண்டும் பதிவுசெய்யப்பட்டு இயக்கப்படுவது கண்டறியப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான அமான் குமாா் பல வங்கிகளில் போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாகன கடன்களைப் பெற்றாா். கடந்த டிச.25-ஆம் தேதி அவா் கைதுசெய்யப்பட்டாா். அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல போலி ஆவணங்கள் மற்றும் வாகனங்களின் பதிவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அவா் அளித்த தகவலின் அடிப்படையில், மோசடியில் தொடா்புடைய தீரஜ் (எ) அலோக் மற்றும் சித்தாா்த் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

