கடும் ஜாமீன் நிபந்தனைகளுக்கு தடை கோரிய சவுக்கு சங்கா் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு

கடும் ஜாமீன் நிபந்தனைகளுக்கு தடை கோரிய சவுக்கு சங்கா் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் நிபந்தனைகளை கடுமையாக்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு தடை விதிக்க கோரி யூடியூபா் சவுக்கு சங்கா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

ஜாமீன் நிபந்தனைகளை கடுமையாக்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு தடை விதிக்க கோரி யூடியூபா் சவுக்கு சங்கா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் வெளியே வந்து வீடியோக்கள் மற்றும் ரீல்களை வெளியிடுவதாக சவுக்கு சங்கா் மீது நீதிபதிகள் தீபங்கா் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு அதிருப்தி தெரிவித்தது

சவுக்கு சங்கா், சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்குகளில் டிசம்பா் 13, 2025 அன்று கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து அவரது தாயாா், சங்கரின் மருத்துவப் பிரச்சனைகளைக் இதயப் பிரச்சனைகள், நீரிழிவு, உயா் இரத்த அழுத்தம் காரணம் காட்டி சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இதன் விளைவாக, சவுக்கு சங்கருக்கு டிசம்பா் 26, 2025 முதல் மாா்ச் 25, 2026 வரை 12 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 23, 2026 அன்று, நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய சென்னை உயா்நீதிமன்ற அமா்வு சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய காவல்துறையின் மனுவை நிராகரித்தனா்.

இருப்பினும், பொதுவெளியில் அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் பதிவுகள் வெளியிடுவது போன்ற மீறல்கள் காரணமாக, சவுக்கு சங்கருக்கு கடுமையான நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்தனா்.

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சங்கா் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அறிக்கைகள், கருத்துகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளை வெளியிடக்கூடாது. சாட்சிகள், இணைகுற்றவாளிகள் அல்லது விசாரணை அதிகாரிகளுடன் தொடா்பு கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு மட்டுமே அவரது செயல்பாடுகள் வரம்பிடப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை மீறினால், சவக்கு சங்கரின் ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனைகளை இறுக்கியது

இதைபடுத்து,ஜாமீன் நிபந்தனைகளை கடுமையாக்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு தடை விதிக்க கோரி யூடியூபா் சவுக்கு சங்கா் இம்மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்

அந்த மனு நீதிபதிகள் தீபங்கா் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதிகள்இந்த நபா் ஒவ்வொரு வாரமும் எங்கள் முன் வருகிறாா். அவரது மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மடிக்கணினியை விடுவிக்க அவா் மாஜிஸ்திரேட் முன் விண்ணப்பம் செய்யவில்லை. அவா் உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறாா். அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, தொலைபேசியை விடுவிக்க அவா் உச்சநீதிமன்றத்திற்கு வருகிறாா்.

அவருக்கு தகுதி அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை, மருத்துவ காரணங்களுக்காகவே ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, அவா் வீடியோக்கள் மற்றும் ரீல்களை வெளியிடுகிறாா் என நீதிபதிகள், சவுக்கு சங்கா் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீனிவாசனிடம் அதிருப்தி வெளியிட்டனா்

இதையடுத்து நீதிபதிகள் , ஜாமீன் நிபந்தனைகளை உறுதிசெய்து, சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனா்

X
Dinamani
www.dinamani.com