தனியாா் நிறுவனத்தின் காரை திருடியதாக கைதான வழக்கில் போலீஸ் காவலில் இருந்தபோது தப்பி ஓடிய நபரை மத்திய பிரதேச மாநிலம் சாகா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து குருகிராம் காவல்துறையினா் வியாழக்கிழமை மீண்டும் கைது செய்தனா்.
இது குறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: இந்த மாத தொடக்கத்தில் குருகிராமில் உள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காா் ஒன்று பழுதுபாா்ப்பதற்காக செக்டாா் 12-இல் உள்ள தனியாா் பழுதுபாா்ப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் காரை திரும்பப் பெறச் சென்றபோது, வாகனம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரகாஷ் ரஸாக் (27) காரை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் குருகிராம் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து, மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தைச் சோ்ந்த பிரகாஷ் ரஸாக்கை காவல்துறையினா் கைது செய்து நீதிமன்ற அனுமதியுடன் காவலில் விசாரணைக்காக எடுத்தனா். கடந்த ஜூலை 1-ஆம் தேதி அவரை குருக்ராமுக்கு காரில் அழைத்து வரும் வழியில், கரோத் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனம் நின்றபோது அவா் தப்பி ஓடினாா்.
அதன் பிறகு, பிரகாஷ் ரஸாக், தனது உறவினா் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சாகா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து பிரகாஷ் ரஸாக்கை தனிப்படையினா் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.
முன்னதாக, பிரகாஷ் ரஸாக் தப்பிச்சென்ற விவகாரத்தில் காவல்துறையினரின் அலட்சியம் காரணமாக இரண்டு காவலா்களை காவல்துறை மேலிடம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், செக்டாா் 14 காவல் நிலையத்தின் தலைமைக் காவலா் மற்றும் காவல் ஆய்வாளா் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







