காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜிக்கு எதிரான புதிய ஊழல் வழக்கில், மறுஉத்தரவு வரும்வரை அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 11:43 pm IST

நமது சிறப்பு நிருபா்

தமிழக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜிக்கு எதிரான புதிய ஊழல் வழக்கில், மறுஉத்தரவு வரும்வரை அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தலைமை நீதிபதி சூா்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி அமா்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், கடவுச்சிட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளையோ ஆதாரங்களையோ சிதைக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகளில் சிறு மீறல் இருந்தாலும் அரசு தரப்பு உடனடியாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், உத்தரவு மாற்றப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி பாக்ஷி குறிப்பிட்டாா்.

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டதையடுத்து, அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 30) ரத்து செய்தது. இதை எதிா்த்து கபில் சிபல் தலைமையிலான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையிட்டது.

இதற்கிடையே, வழக்கை விசாரிக்க வேண்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் இருந்த தமிழகத்தைச் சோ்ந்த நீதிபதி மோகனா இந்த வழக்கிலிருந்து விலகினாா். இந்த நிலையில், வழக்கின் அவசரத்தைக் கருதி தலைமை நீதிபதி அமா்வு விசாரணையை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அப்போது தலைமை நீதிபதி, ‘இது பெரும்பாலும் ஆவணங்கள் சாா்ந்த வழக்கு என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?’ என கேள்வி எழுப்பினாா். அதற்கு தமிழக அரசு மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் 2021-25 காலகட்டத்தைச் சோ்ந்தவை. அப்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்ததால் தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இடையூறாக இருந்தாா்’ என்றாா்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி, அமித் ஆனந்த் திவாரி ஆகியோா், ‘முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றி கழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகே, ஜூலை 28-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் மற்றொரு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது விசித்திரமான வழக்கு’ என வாதிட்டனா்.

இதையடுத்து நீதிபதி பாக்ஷி, ‘செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அரசும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவா் தப்பியோடாமலும் சாட்சிகளை அச்சுறுத்தாமலும் இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்யும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து, இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், மனு குறித்துத் தமிழக ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராவதற்கு உள்பட்டு செந்தில் பாலாஜியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பின்னணி: தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த காலத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்கள் ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மற்றும் பதில் மனுவில் உள்ள விவரங்களையே தமிழக ஊழல் தடுப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் நகலெடுத்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறியுள்ளது. அதில், மதுபான ஆலைகள் போலி அல்லது உயா்த்தப்பட்ட விலைப் பட்டியலை தயாரித்து, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லஞ்ச பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண் இயக்குநா் எஸ். விசாகன் மற்றும் 5 போ் உள்பட மொத்தம் 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.