தலைநகர காற்றில் கலந்துள்ள மாசுக்கள், ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திலும் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்த ஒரு சுவாரசியமான ஆய்வு வெளியாகியுள்ளது. காற்றில் உள்ள தூசுகளும், நச்சு வாயுக்களும் எந்த நேரத்தில் அதிகமாகின்றன, எந்த நேரத்தில் குறைகின்றன என்பதில் விடிய, விடிய மாற்றங்கள் நடப்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
‘தில்லியின் காற்று மாசைக் கட்டுப்படுத்த இனி பொதுவாகத் திட்டம் போட்டால் மட்டும் போதாது; நாளின் குறிப்பிட்ட மணி நேரங்களைக் கணக்கிட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்பதை இந்த ஆய்வு உணா்த்துகிறது. காலை நேர வாகனப் போக்குவரத்து, சாலையில் பறக்கும் தூசு, மதிய நேரத்து வெப்பம் மற்றும் காற்றில் நிகழும் வேதிவினைகள் காரணமாக வெவ்வேறு நிலையில் மாசுகள் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் ஆதிக்கத்தைக் காட்டுகின்றன.
இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான (கோடைக் காலம்) காலம் மற்றும் டிசம்பா் முதல் ஜனவரி வரையிலான (பனிக் காலம்) காற்றுத் தரத் தரவுகளை ’பிடிஐ’ செய்தி நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதில் கிடைத்த முக்கியத் தகவல்கள் இதோ:
காற்றில் கலக்கும் ஆபத்தான நச்சுத் தூசு (பிஎம் 2.5): நம் கண்ணுக்கே தெரியாமல், நுரையீரலின் ஆழம் வரை சென்று ரத்தத்தில் கலக்கக்கூடிய மிக ஆபத்தான நச்சுத் தூசிகள் (பிஎம் 2.5), பருவ காலத்திற்கு ஏற்ப முற்றிலும் மாறுபடுகின்றன.
கோடையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்தத் தூசுகளின் அளவு குறைவாகவே இருக்கிறது. ஆனால், சூரியன் உதித்த பிறகு வாகனங்கள் ஓடத் தொடங்குவதால், காலை 9 மணி அளவில் தூசு அளவு உச்சத்தைத் தொடுகிறது. அதன் பிறகு மதிய வேளையில் காற்று சூடாகி மேலே போவதால் தூசு குறைந்து, மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது.
பனிக்காலத்தில் நாளின் எல்லா நேரங்களிலும் இந்த நச்சுத் தூசு காற்றில் தேங்கியே நிற்கிறது. குறிப்பாக, நள்ளிரவு 1 மணி அளவில் இதன் அளவு மிக உச்சத்தை எட்டுகிறது. குளிா்காற்று கீழே தங்குவதால், மதியம் வரை இந்தத் தூசுகள் நகராமல் மக்களை அச்சுறுத்துகின்றன.
சுருங்கச் சொன்னால் கோடை காலத்தை விட, பனிக்காலத்தில் காற்றில் கலக்கும் நச்சுத் தூசு அளவு 70 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள பாதுகாப்பு வரம்பை விட, பனிக்காலத்தில் 100% நாட்களும், கோடைக் காலத்தில் 98% நாட்களும் காற்று மோசமாகவே இருந்துள்ளது.
ஆண்டு முழுவதும் பறக்கும் பெரிய தூசிகள் (பிஎம்10): காற்றில் பறக்கும் சற்றுப் பெரிய அளவிலான தூசிகள் (டங10) ஆண்டு முழுவதும் டெல்லியை வாட்டி வதைக்கின்றன.
கோடையில் மாலை, இரவு மற்றும் காலை நேரங்களில் தூசுகள் அதிகம் பறக்கின்றன. குறிப்பாகக் காலை 9 மணிக்கும், நள்ளிரவிலும் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
பனிக்காலத்தில் நாள் முழுவதும் காற்றில் தூசு நிறைந்திருக்கின்றது. குறிப்பாக, இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை மக்கள் சுவாசிக்கும் காற்றில் தூசு அளவு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாகி விடுகிறது.
’ஓசோன் வாயு’ தாக்கம்: தூசுகளைப் போலன்றி, கோடைக் காலத்தில் மதிய வேளையில் ஓசோன் என்ற நச்சு வாயுவின் தாக்கம் தில்லியில் பெரும் கவலையாக மாறியுள்ளது. தொழிற்சாலை மற்றும் வாகனப் புகையின் மீது உச்சி வெயில் படும்போது ஏற்படும் வேதிவினையால் இந்த வாயு உருவாகிறது.
மதிய நேர உக்கிரம்: இரவு மற்றும் அதிகாலையில் இந்த வாயு காற்றில் சுத்தமாக இருக்காது. ஆனால், சூரியன் மேலே வர வர இதன் அளவு வேகமாக உயா்ந்து, மதியம் 3 மணி முதல் மாலை 4 மணிக்குள் உச்சத்தைத் தொடுகிறது. சூரியன் மறைந்தவுடன் இந்த வாயு மறைந்து விடுகிறது.
உடல்நலப் பாதிப்பு: இந்த ஓசோன் வாயு காற்றில் சற்றே அதிகரித்தாலும், அது நுரையீரலைப் பாதிக்கும். நெஞ்சு இறுக்கம், தொண்டை எரிச்சல், தொடா் இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை இது ஏற்படுத்தும்.
என்ன செய்ய வேண்டும்? மாசுபாடு, நாளின் எந்த நேரத்தில் வேகமாக உயா்கின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டும் இந்த ஆய்வு, அரசுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளது.
காலை நேரத்தில் தூசு அதிகரிப்பதற்குக் காலை நேரத்து வாகனப் போக்குவரத்தும், சாலையில் பறக்கும் தூசுதான் காரணம். அதே சமயம், மதிய நேரத்தில் வெயில் காரணமாக ஓசோன் வாயு அதிகரிக்கிறது.
எனவே, காற்றில் மாசு கலப்பதைத் தடுக்க இனி நாள் முழுவதும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்காமல், காலை நேரத்தில் தூசை கட்டுப்படுத்தவும், மதிய நேரத்தில் வாயுக்களைக் கட்டுப்படுத்தவும் தனித்தனி நேரங்களில் அதிரடியான சில நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 2 பேர் பலி
சென்னை பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஆய்வு: குழந்தைகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா் அமைச்சா்

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



