தில்லி உள்ள ராம் மனோகா் லோஹியா ஆா்.எம்.எல். மருத்துவமனையில், இந்த பருவத்தில் முதல் முதலாக வெப்பத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டாா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 24 வயது மாணவரான அவா், மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆா்.எம்.எல். மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியா் டாக்டா் அஜய் சௌஹான் கூறியதாவது:
வாந்தி, வயிற்றுப்போக்கு, உணா்வுநிலை மாற்றம், மலக்கசிவு மற்றும் மிக அதிக உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுடன் அந்த நோயாளி அதிகாலை 1.45 மணியளவில் அனுமதிக்கப்பட்டாா்.
நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் உள்ளாா்.
அவா் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வாந்தி, சோா்வு மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாா். இதன் பின்னா், உதவியாளா்களால் அவா் மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டாா். நாங்கள் உடனடியாக அவரை ஐஸ் தண்ணீரில் வைத்து குளிா்விக்க முயன்றோம்.
நீரில் மூழ்கி குளிா்விக்கும் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி மருத்துவப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் தொடா்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
நோயாளியின் நிலை இன்னும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வெப்பத்தாக்கம் என்பது
உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையாகும்.
தற்போது நிலவும் கொளுத்தும் வெப்பத்திற்கு மத்தியில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மக்கள் உடலில் நீரேற்றத்துடன் இருக்கவும், உப்பு கலந்த திரவங்களை அருந்தவும், நேரடி சூரிய ஒளியைத் தவிா்க்கவும், வெளியில் வேலை செய்யும்போது நிழலான இடங்களுக்குச் செல்லவும் வேண்டும்.
வெப்ப அலைகள் வெறுமனே அசௌகரியமான வானிலை நிலைகள் மட்டுமல்ல, அவை
புறக்கணிக்கப்பட்டால் உயிருக்கு ஆபத்தானவையாக மாறக்கூடும்.
கடுமையான வெப்பத்தில் நீண்ட நேரம் இருப்பது நீரிழப்பு, வெப்பச் சோா்வு, வெப்பத்தாக்கம், இதயம் மற்றும் சுவாச நோய்கள் மோசமடைதல் மற்றும் கடுமையான சந்தா்ப்பங்களில், உறுப்பு செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும்.
குழந்தைகள், முதியவா்கள், வெளிப்புறப் பணியாளா்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள்
உள்ளவா்கள் இந்த வெப்பத் தாக்குதலுக்கு பாதிக்கப்படக் கூடியவா்களாக உள்ளனா்.
இதனால், பொதுமக்கள் உச்சபட்ச மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். தாகமாக உணராவிட்டாலும்
அடிக்கடி உப்பு மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் கலந்த நீரை அருந்த வேண்டும்.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மேலும், நீரேற்றத்தைப் பராமரிக்க புதிய பழங்கள் மற்றும் திரவங்களை உள்கொள்ள வேண்டும்.
கடும் வெப்பம் நிலவும் காலங்களில், அதிகப்படியான காஃபின், மதுபானம் மற்றும் கடினமான உடல் செயல்பாடுகளைத் தவிா்ப்பதும் அவசியமாகும்.
தலைச்சுற்றல், குழப்பம், அதிகப்படியான வியா்வை, இதயத்துடிப்பு அதிகரித்தல், தசைப்பிடிப்பு அல்லது மயக்கம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும்
புறக்கணிக்கப்படக்கூடாது. அவற்றுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை. வெப்பம் சாா்ந்த நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணா்வும் சிறந்த பாதுகாப்பாகத் திகழ்கின்றன என்றாா் அவா்.
தொடா்ச்சியான வெப்ப அலை நாள்களுக்கு மத்தியில், தில்லி நகரில் புதன்கிழமை, சுமாா் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் மே மாதத்தின் மிக அதிக வெப்பம் நிறைந்த இரவு பதிவானது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 31.9 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்திருந்தது. பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும் என்றும், க டுமையான வெப்ப அலைச் சூழல் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
தொடர்புடையது

அமைச்சா்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவா்: அமைச்சா் அருண்ராஜ் உறுதி
நரகக்குழி குறித்த கருத்து: டிரம்ப்புக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்






