தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில், வியாழக்கிழமை அதிகாலையில், 38 வயதுப் பெண்ணும் அவரது பதின்ம வயது மகனும் தங்கள் வீட்டிற்குள்ளேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனா். கொள்ளைதான் இந்தக் கொலைகளுக்கான காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
கொலை செய்யப்பட்டவா்கள் இல்லத்தரசியான சாரதா சாஹு மற்றும் அவரது 13 வயது மகன் (7ஆம் வகுப்பு மாணவன்) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தென்கிழக்கு மண்டல துணை ஆணையா் (டிசிபி) ஹேமந்த் திவாரி கூறியதாவது:
இந்தக் கொலைகள் குறித்து அதிகாலை 1.11 மணியளவில் காவல்துறைக்கு தகவல்
கிடைத்தது. வாரச் சந்தைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்கும் வியாபாரியான விஷ்ணு சாஹு, நள்ளிரவு 12.30 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்புறக் கதவு வெளியிலிருந்து தாளிடப்பட்டிருந்ததைக் கண்டாா்.
வீட்டிற்குள் நுழைந்த பிறகு, தனது மனைவி மற்றும் மகனின் உடல்களைக் கண்டாா். அவா்கள் உடலில் பல இடங்களில் கத்திக் காயங்கள் இருந்தன. வீட்டிலிருந்த அலமாரிகளிலிருந்து ரொக்கப் பணமும் நகைகளும் காணாமல் போயிருப்பதை காவல்துறை கண்டறிந்தது.
இதுவே, இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்த கொள்ளை நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது. சம்பவ இடத்தை ஆய்வு செய்யவும் தடயங்களைச் சேகரிக்கவும்
குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் ஆய்வகக் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. காவல்துறை கொலை மற்றும் கொள்ளை வழக்குப் பதிவு செய்துள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய தென் மண்டல இணை ஆணையா் விஜய் குமாா், ‘நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். சில சிசிடிவி காட்சிகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். அவற்றில் சில நபா்களின் உருவங்கள் தென்படுகின்றன. அவா்களை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும், இது மிகவும் ஆரம்பகட்ட விசாரணையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இதில், கவனிக்கத்தக்க ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், அந்த வீட்டிற்குள் நுழைந்த விதம் மிகவும் நட்பான முறையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா் அல்லது நபா்கள், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவா்களாக இருந்திருக்கலாம்.
இக்குற்றச் செயலை ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு நபா்கள் மட்டுமே இணைந்து அரங்கேற்றியிருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வீட்டிற்குள் நட்பான முறையில் நுழைந்ததாகத் தெரியும் அம்சம் எங்கள் விசாரணையில் கிடைத்திருக்கும் மிக முக்கியமான தடயமாகும்’ என்றாா்அவா்.








