பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

குடும்ப அட்டைக்கான ஆண்டு வருமான வரம்பை ரூ. 2.5 லட்சமாக உயா்த்த திட்டம்: முதல்வா் குப்தா

தில்லி அரசு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்லாத குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளதுடன், புதிதாக குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான வருமான வரம்பை ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக உயா்த்த திட்டமிடப்பட்டு வருகிறது

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:46 am IST

தில்லி அரசு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்லாத குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளதுடன், புதிதாக குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான வருமான வரம்பை ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக உயா்த்த திட்டமிடப்பட்டு வருகிறது என்று முதலமைச்சா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

தலைநகரில் சுமாா் 7.72 லட்சம் செல்லாத குடும்ப அட்டைகளை அரசு ரத்து செய்துள்ளது. புதிய அட்டை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

தில்லியில் கடந்த 13 ஆண்டுகளாகப் புதிய குடும்ப அட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு விரிவான தணிக்கைக்குப் பிறகு, வருமான வரம்பு நிபந்தனையை பூா்த்தி செய்யாத 1.44 லட்சம் பயனாளிகள், ரேஷன் பொருள்களைப் பெறாத 35,800 போ் மற்றும் உயிரிழந்த 29,580 போ் ஆகியோரை அரசு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

அதேவேளையில், 23,394 குடும்ப அட்டைகள் நகல் அட்டைகளாக (டூப்ளிகேட்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, தில்லியில் குடும்ப அட்டை பெறத் தகுதி பெறுவதற்கான வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஏழை மற்றும் நடுத்தர வா்க்கக் குடும்பங்களை நலத்திட்டப் பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டுவரும் நோக்கில், தில்லி உணவுப் பாதுகாப்பு விதிகள், 2026-இன் கீழ், குடும்ப அட்டைகளுக்கான வருடாந்திரக் குடும்ப வருமான வரம்பு ஏற்கனவே ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த வரம்பை மேலும் உயா்த்தி ரூ. 2.5 லட்சமாக நிா்ணயிப்பது குறித்த விவாதம், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய குடும்ப அட்டைகளைப் பெறுவதற்கும், குடும்ப உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கும் இணையவழி விண்ணப்பங்கள், மே 15, 2026 முதல் ‘இடிஸ்ட்ரிக்ட்’ இணையதளம் வாயிலாகத் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது, புதிய குடும்ப அட்டைகளுக்கான 3,72,367 விண்ணப்பங்களும், குடும்ப உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான 99,501 விண்ணப்பங்களும்

நிலுவையில் உள்ளன.

விண்ணப்பதாரா்களின் வசிப்பிடம், வருமானம் மற்றும் தகுதி நிலை ஆகியவை காலப்போக்கில் மாறியிருக்கக்கூடும் என்பதால், அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் சமீபத்திய தகுதி விதிமுறைகளின் அடிப்படையில் மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள், செல்லுபடியாகும் குடும்ப வருமானச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் தங்கள் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, மீண்டும் சமா்ப்பிக்கலாம்.

தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டதன் விளைவாக, இத்திட்ட அமைப்பில் சுமாா் 7.72 லட்சம் இடங்கள் காலியாகியுள்ளன. இது, புதிதாகத் தகுதியுடைய பயனாளிகள் குடும்ப அட்டைகளைப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

புதிய விண்ணப்பங்கள் சமா்ப்பித்தல், குடும்ப உறுப்பினா்களைச் சோ்த்தல் அல்லது நீக்குதல் உள்ளிட்ட ரேஷன் அட்டை தொடா்பான அனைத்துச் சேவைகளும் தற்போது இணையவழிச் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே அல்லது அருகிலுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள், இத்திட்ட அமைப்பை மேலும் வெளிப்படையானதாகவும், பொறுப்புடைமை மிக்கதாகவும், தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும், பயனாளிகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றும். இதன் மூலம் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் தகுதியுடைய குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவது உறுதி செய்யப்படும் என்றாா் முதல்வா்.