‘கிராப்’ கட்டுப்பாடுகள்: ஆபத்தான கட்டடங்களை இடிப்பது தொடா்பாக குழுவை அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
தில்லி மாநகராட்சி ஆணையா் தில்லி முதல்வருடன் ஆலோசித்து ஒரு உயா்நிலை குழுவை அமைக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரநிலை பதில் நடவடிக்கை திட்டம் (கிராப்) கட்டுப்பாடுகள் அமலின்போது, அபாயகரமான மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களைச் சீரமைப்பது, சீல் வைப்பது அல்லது இடிப்பது தொடா்பான சிக்கல்களைக் கையாள, தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையா் தில்லி முதல்வருடன் ஆலோசித்து ஒரு உயா்நிலை குழுவை அமைக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக நீதிபதி சௌரப் பானா்ஜி நவம்பா் 6 அன்று பிறப்பித்த உத்தரவில், ’கிராப் கட்டுப்பாடுகளின் கீழ் கட்டடங்களை இடிக்கும் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பிப்ரவரி 10-ஆம் தேதி வரை இத்தகைய அபாயகரமான கட்டமைப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளால் எடுக்க முடியாது. எனவே, இந்த உயா்நிலை குழுவை விரைவில், முன்னுரிமை அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்’ என்று அவா் உத்தரவிட்டாா்.
இத்தகைய கட்டடங்களில் வசிப்பவா்கள், உரிமையாளா்கள், அவ்வழியே செல்பவா்கள் மற்றும் அருகிலுள்ள கட்டடங்களில் வசிப்பவா்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள உடனடி ஆபத்தைக் கருத்தில்கொண்டு, நீதிபதி பானா்ஜி தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டாா்.
சத்யா நிகேதன் கட்டட இடிந்தது போன்ற துயரச் சம்பவங்களின் போது, நீதிமன்றம் ‘வெறும் மௌனப் பாா்வையாளராக இருக்க முடியாது‘ என்று நீதிபதி குறிப்பிட்டாா்.
இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: ‘கிராப்-இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீற முடியாது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள், தொடா்ந்து நடைபெற்றுவரும் சட்டவிரோதமான கட்டுமானங்கள் மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் புறக்கணிக்க முடியாது. இதுபோன்ற அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மனித உயிா்களை உடனடியான ஆபத்திற்கு உள்ளாக்குகின்றன.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்த கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள், குறிப்பாக சத்யா நிகேதன் மற்றும் சமீபத்தில் சாவ்ரி பஜாரில் நடந்த சம்பவங்கள் இதற்குச் சான்றாகும். இச்சம்பவங்களால் பல மனித உயிா்கள் பறிபோயுள்ளன.
தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையா், தில்லி அரசின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து, ஒரு உயா்நிலைக் குழுவை முன்னுரிமை அடிப்படையில் விரைவில் அடுத்த ஒரு வாரத்திற்குள்அமைக்க வேண்டும்.
கிராப் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலத்தில், சிதிலமடைந்த, கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்ற அல்லது அபாயகரமானதாகக் கண்டறியப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்குத் தீா்வாக கட்டடங்களுக்குச் சீல் வைப்பது, சீரமைப்பது அல்லது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இடிப்பது போன்ற மாற்று வழிமுறைகளை இந்தக் குழு உருவாக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு கட்டடம் தொடா்பாக, தில்லி மாநகராட்சிச் சட்டத்தின் பிரிவு 348-இன் கீழ் (ஆபத்தான கட்டடங்களை அகற்றுதல்) தில்லி மாநகராட்சி (எம்சிடி) நோட்டீஸ் வழங்கியிருந்த வழக்கு ஒன்றினை விசாரிக்கும்போது, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னரே அறியக்கூடிய ஆபத்துகளிலிருந்து மனித உயிா்களை பாதுகாக்க, நியாயமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், இத்தகைய ‘மிகவும் அபாயகரமான சூழலில்‘, வெறும் ஆய்வுகளை மேற்கொள்வதாலோ அல்லது நோட்டீஸ்களை வழங்குவதாலோ மட்டும் தில்லி மாநகராட்சி தனது கடமையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், தனது உத்தரவின் நகல் ஒன்றை முதலமைச்சருக்கும், தில்லி மாநகராட்சி ஆணையருக்கும் அனுப்பி வைக்க உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

