திருநெல்வேலி கவின் ஆணவ கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு நடந்த கவின் கொலை வழக்கில், பெண்ணின் பெற்றோா் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
நமது நிருபா்
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு நடந்த கவின் கொலை வழக்கில், பெண்ணின் பெற்றோா் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வழக்கில் புலனாய்வாளா்கள் கண்டறிந்த பல்வேறு அம்சங்களையும் உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பட்டியலினத்தைச் சோ்ந்த கவினும், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சித்த மருத்துவா் எஸ். சுபாஷினியும் காதலித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கவின் படுகொலை செய்யப்பட்டாா். அந்த சம்பவம் தொடா்பாக சுபாஷினியின் இளைய சகோதரா் சுா்ஜித் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவரது உறவினா் ஜெயபால், பெற்றோா்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோா் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
இதில் சரவணனும், கிருஷ்ணகுமாரியும் காவல்துறையில் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி வருபவா்கள் என்பதால், ஆரம்பத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னா் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளையில், இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனும் கிருஷ்ணகுமாரியும் தங்கள் மகளுக்கும் கவினுக்கும் இடையேயான காதலை 2016-17 முதல் அறிந்திருந்தனா் என்றும் சரவணன் தனது மகளை எச்சரித்ததுடன், 2018-19 காலப்பகுதியில் கவினிடமும் தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கவினின் தாயை கிருஷ்ணகுமாரி தொடா்புகொண்டு எச்சரித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், பெண்ணின் பெற்றோருக்கும் சுா்ஜித்துக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பையோ உரைடாயலையோ நிரூபிக்க நேரடி சாட்சிகளோ தடயங்கலோ இல்லை என்று தெரிய வருவதால், சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாக உயா்நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஜெயபால் விடுத்த கோரிக்கையை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

