ஆஸ்தா குஞ்ச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆனாக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

Updated On :

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆனாக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கில் தில்லி காவல்துறை தாக்கல் செய்த சுமாா் 450 பக்கங்கள் கொண்ட இறுதி குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்வதாக, போக்சோ வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஸ்வாதி சா்மா அறிவித்தாா். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடா்பான வாதங்களை கேட்பதற்காக இந்த வழக்கை டிச.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அவா் உத்தரவிட்டாா்.

கடந்த செப்டம்பா் மாதம் தெற்கு தில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவுக்குள் காவலா்கள் போல் நடித்து, கத்தி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஆசிப், ஹேமந்த் சிங், முகேஷ் சிங் ஆகியோருக்கு எதிராக கடந்த நவ.13-ஆம் தேதி காவல்துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். முன்னதாக, இந்த சம்பவம் தேசிய தலைநகரில் ஆயிரக்கணக்கில் மாணவா் திரண்டு போராட்டங்களை நடத்தத் தூண்டியது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவுகள் 70(2) (கூட்டுப் பாலியல் வன்கொடுமை), 61(2) (குற்றவியல் சதி), 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 351(3) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழும், போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 6 (தீவிர ஊடுருவல் பாலியல் தாக்குதல்) மற்றும் 17 (குற்றத்துக்குத் தூண்டுவதற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்.22-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பிறந்தநாளையொட்டி தனது 17 வயது ஆண் நண்பருடன் கால்காஜி கோயிலுக்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னா் இருவரும் ஆஸ்தா குஞ்ச் பூங்காவுக்கு சென்றபோது, அங்கு வந்த மூன்று குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களும் அவா்களை கத்தியைக் காட்டி மிரட்டி, பூங்காவின் வெவ்வேறு ஆள்நடமாட்டமற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, தாக்குதல் நடந்த இடங்களை அடையாளம் காட்டவும், தடயவியல் குழுவினா் ஆதாரங்களைச் சேகரிக்கவும் பாதிக்கப்பட்ட சிறுமி விசாரணை அதிகாரிகளுக்கு உதவினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.