குறுந்தொகை உரை நெறிகள் - ஆ.மணி; பக். 304; ரூ.113; தமிழன்னை ஆய்வகம், 56, அன்பு இல்லம், 4-ஆவது குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப் பாளையம், புதுச்சேரி - 605 009.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைக்கு இதுவரை 19க்கும் மேற்பட்ட உரைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் இன்றியமையாத உரைகளாகக் கருதப்படும் தி.செü. அரங்கனார், உ.வே.சாமிநாதையர், ரா.இராகவையங்கார் ஆகியோரின் உரைகளைத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். கிடைக்கப்பெறாத உரைகளான பேராசிரியர் உரை, நச்சினார்க்கினியர் உரை பற்றிய குறிப்புகளும் உள்ளன.
குறுந்தொகையின் முதல் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமான தி.செü.அரங்கனாரே பின் வந்த உரையாசிரியர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். அந்த வகையில் திணை வகுக்கப்படாமல் இருந்த குறுந்தொகைக்கு முதன் முதலில் திணை வகுத்தவர் இவர்தான்.
குறுந்தொகை உரைகளின் தோற்றம் வளர்ச்சியும் என்பதை முதலில் விளக்கி, மேற்குறிப்பிட்ட உரையாசிரியர் மூவரின் வாழ்க்கைக் குறிப்புகளோடு அவர்களின் உரையில் உள்ள வேறுபாடுகள் பலவற்றையும் விளக்கி, இறுதியில் உரைகளை ஒப்பீடும் மதிப்பீடும் செய்திருக்கிறார்.
நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் 18க்கும் மேற்பட்ட குறுந்தொகைப் படைப்புகள் இவர் குறுந்தொகையில் ஆழங்காற்பட்டவர் என்பதை மெய்ப்பிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.