காவு (சிறுகதைத் தொகுப்பு) - பால்நிலவன்; பக். 128; ரூ. 140; ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606 806; ✆ 9159933990.
சிற்றிதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்த 15 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நிகழிடங்களாகக் கொண்டிருப்பவை.
தொகுப்பின் முதல் கதையான இன்னும் ஒரு கணக்கில் சண்முகத்தின் மனவோட்டமாக சொல்லப்படுகிற கதை அவனைப் பற்றியது மட்டுமல்ல, பல இளைஞர்களுடையவை.
உறவுகளின் சிறுமையுடன் முதுமையின் சிரமங்களையும் தாத்தா - பச்சியம்மா சந்திப்பில் சித்திரிக்கிறது செம்மண் பார்டர்.
தலைப்புக் கதையான காவு, இளைஞன் கோபாலின் நன்றியுணர்வுக்கும் பொது நலனுக்கும் இடையிலான மோதலாக மாறி இட்டுச் செல்கிறது. மேய்ச்சல் மனசின் கதை உள்ளபடியே எருமைகளுடன் இணைந்து தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறது. பெரிய ஒழிச்சலுக்கு இடையே தாமோதரன் வாழ்வில் மின்னலாக வந்துசெல்கிறாள் தரங்கிணி.
பவுனு வளையல் கதையில் வெல்வெட் பாத்திரம் நன்றாக உருவாகி வந்திருக்கிறது.
தொகுப்பில் மிகவும் சிறிய, ஆனால், மிகவும் சிறப்பான கதை, ராஜகுமாரி. நுங்கை வைத்துக்கொண்டு போகிறபோக்கில் அழகாகச் சொல்லி முடிக்கப்படுகிறது. தற்காலிகங்கள் கதையும் மிகச் சிறப்பு.
இன்னும் சற்றுச் செப்பனிட்டு முயன்றிருந்தால் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகள் ஆகச் சிறந்த சிறுகதைகளாக மாறியிருக்கும். எழுத்தாளரைப் பற்றியோர் அறிமுகம் தந்திருக்கலாம். சிறுகதை பிரியர்கள் வாசிக்க உகந்த நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.