காலநிலை மாற்றத்தால் மூழ்கும் டெல்டா மாவட்டங்கள்
காலநிலை மாற்றத்தால் மூழ்கும் டெல்டா மாவட்டங்கள் -அக்னிபாரதி;

காலநிலை மாற்றத்தால் மூழ்கும் டெல்டா மாவட்டங்கள் -அக்னிபாரதி; பக்.430; ரூ.400; கனவுத் தமிழ் பதிப்பகம், சென்னை- 600 131. ✆ 98403 21522.
இயற்கை, சுற்றுச்சூழல், உயிர்கள், தண்ணீர், காடுகள், மரங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சூழல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அக்னிபாரதி பல்வேறு தருணங்களில் எழுதிய 90 கட்டுரைகள், கவிதை, பாடல்களைக் கொண்ட நூல் தொகுப்பு.
காலநிலை மாற்றத்தால் கடலில் மூழ்கப் போகும் மாவட்டங்களில் தொடங்கி, ஈர நிலங்கள் எவ்வாறு நகர்களின் நுரையீரல்களாகத் திகழ்கின்றன, நெகிழி விழிப்புணர்வு, சூரிய சக்திப் பயன்பாடு, பருவநிலை மாற்றம், ஒலி மாசு, காற்று மாசு, மருத்துவக் கழிவுகளாலான சூழல் பிரச்னைகள் எனப் பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
கற்றல், கல்வி குறித்த கட்டுரைகளுடன் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோரின் கேள்விகளும் ஐஏஎஸ் அலுவலர் இளம் பகவத்தின் பதில்களும் தனி இயலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அமுதா ஐஏஎஸ், மஞ்சப்பை மனோகரன், வனம் கலைமணி, இயற்கைப் பாதுகாப்பில் விருது பெற்ற மாரியப்பன், சதுப்புநிலக் காடுகள் ஆராய்ச்சியாளரான தமிழ்ப் பெண் தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி, சூழல் விருது பெற்ற சுப்ரியா சாஹு போன்றோரின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அஸ்ஸôமில் தனி மனிதனாக 39 ஆண்டுகளில் 1,360 ஏக்கரில் காடுகள் வளர்த்த ஜாதவ் பயேங் போன்றோரும் பேசப்படுகின்றனர். நூலில் காடுகளுக்கும் மரங்களுக்கும் தனிச் சிறப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. புயலில் பனை மரங்கள் தாக்குப் பிடித்தது எப்படி? எனத் தனிக் கட்டுரை. பொதுவாகத் தமிழ்நாட்டின் அலையாத்திக் காடுகள் பற்றியும் முத்துப்பேட்டை, பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் பற்றியும் புயல் பாதுகாப்பில் அவற்றின் பங்களிப்பு பற்றியும் விவரித்துள்ளார்.
ஒருகாலத்தில் சிதம்பரம் கோயில் திருக்குளத்தில் குளித்தால் தோல் நோய்கள் தீரக் குளத்தில் விழுந்து ஊறிய மருத்துவக் குணம் கொண்ட தில்லை மரங்களின் சருகுகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்.
கார்பன் உமிழ்வு இல்லாத தண்ணீரில் இயங்கும் ரயிலென ஹைட்ரஜன் ரயில் என்ஜின் பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. பெரும்பாலான கட்டுரைகளின் அடிநாதம் சமுதாயத்தின் மீதான, சூழலின் மீதான அக்கறையைக் கொண்டிருக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

