தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புராணங்கள் போற்றும் மதுராந்தகம்!

பரந்தாமனின் அவதாரங்களில் ஒன்று ராமாவதாரம். ராமாவதாரத்தில் ஸ்ரீராமன் ராவண சம்ஹாரத்துக்குப் பின் அயோத்திக்குச் செல்லும் வழியில் "வகுளாரண்ய க்ஷத்திரம்' எனப்படுகிற மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணம் கூறுகிறது.

News image
Updated On :20 ஜூன் 2016, 10:10 pm

பரந்தாமனின் அவதாரங்களில் ஒன்று ராமாவதாரம். ராமாவதாரத்தில் ஸ்ரீராமன் ராவண சம்ஹாரத்துக்குப் பின் அயோத்திக்குச் செல்லும் வழியில் "வகுளாரண்ய க்ஷத்திரம்' எனப்படுகிற மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணம் கூறுகிறது.

முந்தைய காலத்தில் மகிழமரம் நிறைந்த காடாக மதுராந்தகம் இருந்தது. மதுராந்தகம் ஏரி சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டது. சமுத்திரராஜனை அடக்கி ஆண்ட ஸ்ரீ ராமபிரான் ஏரியில் வெள்ளத்தைத் தடுத்து நம்மைக் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இங்கு கோதண்டராமர் கோயிலைக் கட்டினார்கள். இதேபோல ஏரிக்கரையில் கட்டப்பட்ட கோயில் திருநின்றவூரிலும் உள்ளது.

வைணவ ஆச்சார்யரான ராமானுஜர் மதுராந்தகத்தில் அவரது குரு ஸ்ரீ பெரிய நம்பிகள் மூலமாக பஞ்ச சம்ஸ்கார உபதேசம் பெற்றார். அவரது உபதேசத்தில் அஷ்டாடஷரம், த்வயம் சரம சுலோகம் போன்றவை தெரிவிக்கப்பட்டிருந்தது.

த்வயம் என்ற மந்திரம் சிறப்புடன் உபதேசிக்கப்பட்டதால் "த்வயம் விளைந்த திருப்பதி' என்றும், சதுர்வேதி மங்கலம், வகுளாரண்யம் என்றும் சிறப்பு பெயர்களால் மதுராந்தகம் அழைக்கப்படுகிறது.

தமிழக வரலாற்றிலும் மதுராந்தகத்துக்கு நீங்கா இடமுண்டு. சோழர்கால வரலாற்றில் ராஜராஜ சோழனுக்கு முன் உத்தம சோழன் என்னும் மதுராந்தக சோழனால் வேதம் ஓதும் அந்தணப் பெருமக்களுக்காக மானியமாக வழங்கப்பட்ட நகரமே மதுராந்தகம். அதற்கு "மதுராந்தக சதுர்வேதிமங்கலம்' என்ற பெயர் வழங்கப்பட்டது.

எங்கும் இல்லாத காட்சியாக விபாண்டக மகரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியின் திருக்கரத்தைப் பிடித்தபடி திருக்கல்யாண கோலத்தில் கோயிலின் கருவறையில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்கி வருகிறது.

சுகர், விபாகண்டர் போன்ற ஆச்சாரிய பெருமக்கள் தவம் செய்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. ஆச்சாரியரான ராமானுஜருக்கு இந்தக் கோயிலின் உள்வளாகத்தில் உள்ள வகுளாமரத்தின் கீழ் அவருக்கு பஞ்ச சம்ஸ்கார மந்திர உபதேசம் செய்யப்பட்ட இடத்தை இன்றும் நாம் காணலாம்.

ஸ்ரீ ராமானுஜர் மந்திர உபதேசம் பெற்ற தினத்தை ஆனி மாதம் சுக்கில பஞ்சமியன்று கொண்டாடுகிறார்கள். அச்சமயம் ஸ்ரீ ராமானுஜர், பெரிய நம்பிகள் ஆகியோர் படித்துறைக்கு எழுந்தருளுவார்கள். அப்போது

நிகழ்த்தப்படும் திருமஞ்சனம் காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருவர். ராமானுஜர் வெள்ளுடை தரித்து கிரஹகஸ்தராகக் காட்சி அளிப்பது இங்கு மட்டுமே.

இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் விழா கொண்டாட்டம் தான். சித்திரை மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, வசந்த உற்சவம், ராமானுஜ ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, மதுரகவி ஆழ்வார் சாத்துமுறை, ஆனி மாதத்தில் நம்மாழ்வார் சாத்துமுறை, பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆவணி மாதத்தில் ஸ்ரீ ராமானுஜர் பஞ்ச சம்ஸ்கார உற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஆண்டாள் திருக்கல்யாணம், பரிவேட்டை, மாசிமகத்தில் தெப்போற்சவம், பங்குனி மாதத்தில் ராமநவமி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முக்கிய விழாக்களாக இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய புண்ணிய பூமியில் புஷ்கரணியாக ஸ்ரீ ராமபாத தீர்த்தக் குளமும், கிளியாறும் நீர்த் தடாகங்களாக உள்ளன. ஸ்தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது.

ஏரிகாத்த ராமர் கோயிலுக்கு எதிரில் ராமபாத தீர்த்தக் குளக்கரையில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இங்கு சனிக்கிழமைதோறும் வெண்ணெய்க் காப்பும், வெற்றிமாலையும் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் செய்யப்படுகின்றன.

சோழர்காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், திருமணம் ஆகாதவர்களும் ஏரிகாத்த ராமபிரான் அருளால் நிறைவு பெறுகிறார்கள்.

இன்று காலை தேரோட்டம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் பெரிய தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) காலை நடைபெறுகிறது.

மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் என்கிற அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலின் பிரமோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சந்திர பிரபை, சூரிய பிரபை, அனுமன், யாளி, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகரப் பெருமான் நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து காட்சி அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை பெரிய தேரில் சீதையுடன் கோதண்டராமர் எழுந்தருளி பவனி வருகிறார். காலை 9 மணிக்கு தேரோட்டத்தை மதுராந்தகம் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி தொடங்கி வைக்கிறார். மதுராந்தகம் நகர்மன்றத் தலைவர் மலர்விழி குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

-எம்.குமார், மதுராந்தகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.