2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது?: ஜன.24? டிச.26?

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலைக் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அனைத்து..
2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது?: ஜன.24? டிச.26?

கிரகப் பெயர்ச்சி என்றால் என்ன?

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலைக் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகின்றன. இதனைக் கோள் சாரம் என்றும் கூறுவார். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் காலம் ஒரு மாதம். சந்திரன் ஒரு ராசியில் இருக்கும் காலம் 2 1/4 நாட்கள் ஆகும். செவ்வாய் ஒரு ராசியில் இருக்கும் காலம் 1 1/2 மாதம் ஆகும். புதன் ஒரு ராசியில் இருக்கும் காலம் ஒரு மாதம்  ஆகும். குரு ஒரு ராசியில் இருக்கும் காலம் ஒரு வருடம் ஆகும். சுக்கிரன் ஒரு ராசியில் 23 1/2 நாட்கள் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும்.

சனி ஒரு ராசியில் இருக்கும் காலம் 2 1/2 வருட காலம் ஆகும். ராகு, கேதுக்கள் ஒரு ராசியில் இருக்கும் கால அளவு 1 1/2 வருடங்கள் ஆகும். இதில், அதிக காலம் ஒரு ராசியில் அதாவது 2 1/2 வருடங்கள் தங்கிச் செல்வது சனி கிரகம் மட்டுமே. கிரகப் பெயர்ச்சியில் ஒரு ஜாதகருக்கு குருப் பெயர்ச்சியையும், சனிப் பெயர்ச்சியையும் மட்டும் தான் அதிமுக்கியமாகக் கருதப்படுகிறது. அதற்கு அவ்விரு கிரஹங்களும் ஜாதகர்களுக்கு தரும் மங்களங்களும், சரியான கர்ம பலன்களும் என்றால் அது மிகை ஆகாது. இவ்விரு கிரகங்களும் மேலோட்டமாக இவ்வாறு கூறினாலும் சில ஜாதகர்களுக்கு அந்த கிரஹங்களின் நிலைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப் படவேண்டும்.

சனிப் பெயர்ச்சியின் போது ஏற்படும் நிலைகள்:-

நவக்கிரகங்களில், மிகவும் முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி பகவான், சர்வ முட்டாள்களையும் கூட பெரிய பட்டம் பதவி போன்றவைகளை அளித்து பெருமை படவைத்துவிடுவார். ஒரு ஜாதகருக்கு அவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப, பூர்வ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நன்மை தீமைகளை அளிப்பதில் சனிக்கு நிகர் வேறெந்த கிரகமும் இல்லை என்றே சொல்லலாம். குரு போன்ற இதர கிரகங்கள் அவைகள் அமரும் இடங்களை மட்டும் வைத்து அதன் பலன்களைத் தீர்மானிக்க முடியும். ஆனால், சனி மட்டும் அவ்வாறு அல்லாமல், சனி இருக்கும் ராசியையும் அதற்கு முந்தைய ராசியையும், பிந்தைய ராசியையும் (இந்த மூன்றும் அதாவது 12 - 1- 2) சேர்த்தே பலன்களைக் காணவேண்டி உள்ளதால் அனைவரும் இதனைக் கண்டு அஞ்சவே செய்கின்றனர். அதேபோல் ஒரு ஜாதகரின் ராசிக்கு (சந்திரனுக்கு) 8ல் வருகிற போது அட்டமச்சனியாகவும், 4ல் வருகிறபோது அர்த்தாஷ்டம சனியாகவும் 7ல் வருகிறபோது கண்டக சனியாகவும் இருந்து தக்க பலன்களை அளிக்க வல்லவர். அனைத்து பெயர்ச்சிகளைவிடவும் அதிகம்  அனைவரும் பயப்படுகிறார்கள் என்றால், அது சனிப் பெயர்ச்சி மட்டுமே ஆகும். 

இந்த ஆண்டு (2020) சனிப் பெயர்ச்சி எப்போது?

முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி அதாவது ஜனவரி 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அடுத்ததாக வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விம்சோத்தரி தசா முறையையும், வர்க்கச்சக்கரங்களையும் தந்த மகரிஷி பராசரரும், வராஹமிஹிரரும், கிரக ஆதிபத்தியம், ஆத்மகாரகர் போன்றனவற்றை அறியச்செய்த மகாகவி காளிதாசரும் பயன்படுத்திய முறை திருக்கணித முறை தான். இவற்றுள் அனைத்திலும் பாகை முறை வைத்தே அனைத்தையும் காண இயலும். வாக்கிய முறையில் பாகை முறையே கிடையாது. அப்படி இருக்கும் போது வேதஜோதிடம் ஷோடச சக்கரங்களையும் பலவகை ஜோதிட கணக்குகளைப் பாகை முறையில் தான் கணித்து பலன் கூற இயலும். வாக்கியத்தைப் பயன்படுத்தும் ஜோதிடர்கள் யாவரும் ராசி, அம்சம் இவ்விரண்டையும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த வாக்கிய பஞ்சாங்க பயன்பாட்டால் திருமணப் பொருத்தத்தைப் பார்க்கும் போது சரிவர இல்லாததால் அதிகப்படியான விவாகரத்துகள் நடைபெறுகின்றன என்றால் அது மிகையாகாது. மேலும் ஒரு ஜாதகருக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் பொருத்தம் நிகழ்ந்தாலும் ஒன்று கூட சரியில்லை என்பதும் அதனைப் பொருத்திய பின்னர் அவர்கள் விவாகரத்து பெறுவதும் இயல்பாகிவிட்ட நிலை இன்று அதிகமாகவே உள்ளது.

சரியான சனிப் பெயர்ச்சியாக எதனை எடுத்துக்கொள்ளலாம்?

காஞ்சி மகா முனிவர் காஞ்சி மடத்தில் வாக்கியத்தை நிறுத்தி, திருக்கணித்ததை பின்பற்ற ஆணையிட்டு அன்று முதல் ஸ்ரீ மடத்தில் திருக்கணிதம் தான் செயல்பாட்டில் இருக்கிறது. எனவே இதனை எல்லாம் உணர்ந்து தெள்ளத்தெளிவாக இன்றைய விஞ்ஞான உலகியல் நடவடிக்கைக்கு ஏற்ப திருக்கணிதம் கூறும் பாதையில் செல்வதே சிறப்பானதாக இருக்கும். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி விகாரி வருடம் தை மாதம் 10 ஆம் தேதி அதாவது ஜனவரி 24 ஆம் தேதி பகல் 12.05க்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். இதனையே ஏற்று நடப்பது சரியானதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சூரியன், சனியின் மகர ராசியில் பிரவேசிப்பது இருந்தாலும், இம்முறை நடக்கும் சனிப் பெயர்ச்சியானது தமது சொந்தவீட்டுக்கு 30 வருடங்கள் கழித்து தமது தந்தையான சூரியன் உடன் கர்ம சனி இணைவது மிக விஷேசமானதும் சில பல மாற்றங்களை நிகழ்த்தப் போவதையும் ஜாதகர்கள் உணர்வார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. கர்ம வினைகளுக்கு ஏற்பவும் நியாயத்திற்கு ஏற்பவும் பலன் அளிக்கக்கூடியவர் சனியாவார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இதில் என்ன விசேஷம் என்றால் சனியானவர் கர்ம வினை மற்றும் நீதி, நியாயத்திற்குக் காரகர் எனில் அதே சமயம் சூரியன் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆத்மகாரகரும் ஆவதால் தமது செயல்களினால் விளைந்த பயன்களை தற்போது ஜாதகர் அடைவார் என்பது தான் ஆகும். இதுவரை செய்த நமது தவறுகளிலிருந்து அறிந்துகொள்வதிலும், திருத்திக்கொள்வதிலும் தான் சரியாகும் இல்லையேல் சனியின் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது. 

யார் யாருக்கு இந்த சனிப் பெயர்ச்சி என்ன செய்யும்?

ஏழரைச் சனி :- ஒரு ஜாதகரின் ராசிக்கு 12ல்  விரையச்சனியாகவும், ராசியில் ஜென்ம சனியாகவும், ராசிக்கு 2ல் பாத சனியாகவும் வரும். எல்லோருக்கும் சாதாரணமாக அவர்தம் வாழ்வில் 3 முறை 7 1/2 சனி ஏற்பட வாய்ப்பு உண்டு. வெகு சிலருக்கே 4 முறை வரும்.

முதல் முறையாக 7 1/2 சனி நடப்பவர்களுக்கு அது மங்கு சனியாகும். அது ஜாதகருக்கு கஷ்டம், தொல்லை, ஞாபகமறதி போன்றவற்றை அளிக்கும்.

இரண்டாவது முறையாக 7 1/2 சனி நடப்பவர்களுக்கு அது பொங்கு சனியாகும். அது ஜாதகருக்கு மேன்மை, முன்னேற்றம் அளிக்கும்.

மூன்றாவது முறையாக 7 1/2 சனி நடப்பவர்களுக்கு அது மரணச் சனியாகும். அது ஜாதகருக்கு மரணம், கண்டம் ஏற்படுத்தும்.

நான்காவது முறையாக 7 1/2 சனி நடப்பவர்களுக்கு அது மோட்ச சனியாகும். அது ஜாதகருக்கு மோட்ச பாக்கியத்தை அளிக்கும்.

அஷ்டம சனியும் அர்த்தாஷ்டமச் சனியும்:-

ராசிக்கு 8ல் சனி வரும்போது அஷ்டமச்சனி எனப்படும், இந்த காலம் மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும். இக்கால கட்டத்தில் எந்த ஒரு புது தொழிலைத் தொடங்குவதும் நல்லதல்ல. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி , ஓடிப் போனவனுக்கு 9 ல் குரு எனும் ஒரு வழக்குச் செய்தி இதனை விளக்கும். அர்த்தாஷ்டம சனி என்பது ராசிக்கு 4ல் சனி வரும் காலம் ஆகும். மன நிம்மதி இல்லாமை, உறவினருடன் பகைமை முதலியன ஏற்படும்.

கண்டகச் சனி:- ராசிக்கு 7ல் வரும் காலம் கண்டகச் சனியாகும். இந்த காலத்தில் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. 

சனியின் பாதிப்பு பெற்றிருப்போர் :-

மேற்கூறியவர்கள் தவிர சனியின் பார்வை பெற்றோர் (பார்வை 3 , 7 , 10) மீனம், கடகம், துலாம் போன்ற ராசியினரும், அவர் தம் ஜாதக அமைப்பின் படி வலிமை குன்றி இருப்பின், அவர்களும் சனியின் ஆளுமைக்கு உட்படுபவர் ஆவர்.

பரிகாரம் என்ன செய்யலாம்?

பரிகாரம் - கிரகத்திற்கா? அதிதேவதைக்கா? கிரகத்தின் அதி தேவதைக்குத்தான் செய்யணும். கிரகம் என்றால் வீடு. இருப்பிடம் இருப்பிடத்துக்குப் பரிகாரம் அவசியமல்ல. வீட்டில் இருப்பவர்க்குச் செய்தால் வீட்டிற்கும் சேர்ந்துதான். அதனால் கிரகத்தின் அதிதேவதைக்குப் பரிகாரம் செய்வதே சிறப்பு. எனவே, சனியின் அதிதேவதைகளான, சாஸ்தா, அனுமன் போன்ற தெய்வ வழிபாடே சாலச் சிறந்தது.

சிறந்த பரிகாரம், நமது செயல்களைக் கண்காணித்துத் தவறு எதிலும் இழைக்காமல் இருப்பது ஒன்றே ஆகும். இது ஒன்றே சனி பகவானை சமாதனப் / திருப்திப்படுத்தும். ஏழை எளியோருக்கு, தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்வித்தால் அது சனி கிரகத்தின் கருணையைப் பெற வாய்ப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்வது மற்றும் அவர்களுக்கு மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வது சனியின் ஆசீர்வாதத்தினை பெற ஏதுவாகும்.

தமக்குக் கீழ் பணிபுரியும் அனைவரையும் மதிப்பதாலும் நட்பு பாராட்டுவதாலும் சனியின் ஆசி பெறமுடியும். அரிசி / கோதுமை / தானியங்கள் போன்றவற்றின் மாவினை எறும்பு புற்றுக்கு அளிப்பதால் சனி மனமிறங்குவார் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் வேண்டாம். சனியைப் போல் கொடுப்பவரும் இல்லை தவறிழைத்தவருக்குத் தக்க தண்டனையைத் தவறாமல் அளித்தவரும் இல்லை எனலாம்.  

எந்த கிரகப் பெயர்ச்சி ஆயினும் பொது பலன்களைக்காட்டிலும் ஒரு ஜாதகரின் ஜாதக ரீதியான பலனை அறிந்துகொள்வதே சரியான தீர்வாகவும், சரியான பலன்களாகவும் இருக்க முடியும் இதில் சந்தேகம் மற்றும் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. 

தோத்திரப் பிரியரான சனியின் தோத்திரம் எது?

வடமொழி தெரிந்தவர்கள் வடமொழி ஸ்லோகங்களைக் கூறலாம். அல்லது கீழ் வரும் தமிழிலான சனி பகவான் போற்றியைக் கூறினால், நிச்சயம் சனிபகவான் சகாயம் செய்யத் தயங்க மாட்டார். இது சத்தியம். 

சனி கிரக தோத்திரம்

மந்தன், கரியவன், கதிர்மகன், சௌரி 
நீலனெனும் சனி கிரக சகாயா போற்றி !                             

மானிடரின் ஆணவத்தை மாற்றி அருள்
மயமாக்கும் சனி கிரக சகாயா போற்றி !                             

மிகு உச்ச, ஆட்சி பலமிருந்திடில் நலம் 
சேர்க்கும் சனிகிரக  சகாயா போற்றி !                                  

மீளாத வறுமைக்கு ஆளாகாமல் காக்கும்  குருவுக்கு   
நிகரானவனே சனிகிரக  சகாயா போற்றி !                                 

முக ரோகி , கால் முடவன் , முது மகன்
காரியன் எனும் சனிகிரக  சகாயா போற்றி !                                   

மூர்க்க குணம், கல் நெஞ்சம் முழுதும்  அழித்து   
அருள் புரியும் சனிகிரக  சகாயா போற்றி !                                  

மெதுவாக நடந்து ஒன்பது கோளில்
ஆயுள் தரும் சனிகிரக  சகாயா போற்றி !                                  

மேல் நாட்டு மொழி கற்று மேதையாக
மிளிர வைக்கும் சனிகிரக  சகாயா போற்றி !                          

மை போன்ற கரிய நிறமாம் காக வாகன 
சனிகிரக  சகாயா போற்றி !                              

மொழியாலே தோத்தரிக்கும் - வழியாலே
வாழ்த்த வரும் சனிகிரக  சகாயா போற்றி !                               

மோட்சம் தரும் வேதாந்த முறை பயில
முன் வினை தீர் சனி கிரக சகாயா போற்றி !                               

மௌனமாகி நினை தொழுதால் நலம்
யாவும் தரும் சனி கிரக சகாயா போற்றி !   

மேலே சொன்னது அல்லாமல், ஏதேனும் ஒரு மகான் / சித்தர் வழிப்பாட்டும், செய்யும் சேவையினால் சனியின் பாதிப்பைக் குறையச்செய்யலாம்.

சாயியின் பாதம் பணிவோம், எல்லா நலமும் அடைவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு :  98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.