திருப்பாவை - பாடல் 30

இந்த பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால்
Published on

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

இந்த பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் விளையும் பலன் கூறப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் தன்னை ஆயர் குலச் சிறுமியாக உருவகித்துக்கொண்டு பாடிய பாடல்கள் என்ற விவரம் இந்த பாடலில் தெரிவிக்கப்படுகின்றது.

பொழிப்புரை

கப்பல்கள் உடைய கடலினைக் கடந்து தேவர்கள் அமுதம் பெறுவதற்கு வழிவகுத்த மாதவனை, கேசி என்ற அரக்கனை அழித்த கண்ணபிரானை, சந்திரன் போன்று அழகிய முகத்தினையும் செம்மையான ஆடைகளையும் உடைய ஆயர் குலத்துச் சிறுமிகள் சென்றடைந்து அவனை வேண்டிப் பறை கொண்ட தன்மையை, அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும், பசுமையும் குளிர்ச்சியும் உடைய தாமரை மலர்களால் புனையப்பட்ட மாலையினை உடையவளும் பெரியாழ்வார் என்று அழைக்கப்படும் பட்டர்பிரானின் மகளுமாகிய ஆண்டாள் அருளிச்செய்த இந்த முப்பது பாடல்களைக் கொண்ட பாசுரத்தை, சங்கத் தமிழ் மாலையை, தப்பாமல் ஓதுவார்கள், பெரிய மலை போன்ற நான்கு தோள்களை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், ஒப்பற்ற செல்வதை உடையவனும் ஆகிய திருமாலின் அருளினால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வினில் இன்பங்களை அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com