குத்துவிளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
பாடியவர் - பவ்யா ஹரி
விளக்கம்
நப்பின்னை பிராட்டியுடன் கண்ணன் இருப்பதை அறிந்துகொண்ட ஆயர் சிறுமிகள், அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருக்கும் திருமாளிகைக்கு சென்று அவர்களை எழுப்பும் பாடல். கோட்டுக்கால் = யானைத் தந்தங்களைக் கொண்டு அழகு செய்யப்பட்ட கட்டில்.
பொழிப்புரை
குத்து விளக்கு பிரகாசத்துடன் எரிந்து ஒளி வீசும் அறையினில், யானைத் தந்தங்களால் அழகு செய்யப்பட்ட கட்டிலினில் மேல் உள்ள மெத்தென்று இருப்பதும் அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம் மற்றும் வெண்மை குணங்களைக்கொண்டதால் பஞ்ச சயனம் என்று அழைக்கப்படும் படுக்கையின் மேல் படுத்துக்கிடங்கும் கண்ணபிரானே, கொத்து கொத்தாக பூத்துக் கிடக்கும் மலர்களை அணிந்துள்ள கூந்தலை உடைய நப்பின்னை பிராட்டியின் மார்பினைத், தனது அகன்ற மார்பினில் வைத்தவாறு உறங்கும் கண்ணபிரானே, மலர் போன்ற மார்பினை உடையவனே, நீ உனது திருவாய் மலர்ந்து அருள்வாயாக. மை தீட்டிய அகன்ற கண்களை உடைய நப்பின்னை பிராட்டியே, நீ உனது கணவன் துயிலெழுந்து படுக்கையினை விட்டு எழுந்துசெல்ல எப்போதும் சம்மதிக்கமாட்டாய் போலும்; அவனது ஒரு நிமிடப் பிரிவினையும் உன்னால் தாங்கமுடியாது போலும்; கண்ணன் உன்னை விட்டு பிரிந்திருப்பதை தடுக்கும் வண்ணம், எங்களது தலைவனாகிய கண்ணபிரானை நாங்கள் காண்பதற்குகூட அனுமதிக்காமல் இருப்பது, தலைவியாகிய உனது இயல்புக்கும் உனது தன்மைக்கும் பொருத்தமன்று. எனவே நீ துயிலெழுந்து, பின்னர் கண்ணனைத் துயிலெழுப்பி, நாங்கள் அவனைக் கண்டு மகிழ வகை செய்வாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.