திருப்பாவை  -பாடல் 20

துயில் கலைந்து எழுந்திராத நப்பின்னை
Published on
Updated on
1 min read

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி



விளக்கம்

துயில் கலைந்து எழுந்திராத நப்பின்னை பிராட்டி மற்றும் கண்ணன் இருவரும் உடனே எழுந்திருக்க வேண்டும் என்று அனைத்து ஆயர் சிறுமிகளும் இணைந்து பாடும் பாடல். கப்பம் = நடுக்கம். கலி = வல்லமை உடையவன். பாசுரத்தின் இரண்டாவது பாடலில், நோன்பு நோற்கும் சமயத்தில் தங்களது கூந்தலுக்கு மையிட்டும் மலரிட்டும் அழகு செய்துகொள்ளமாட்டோம் என்று உணர்த்திய ஆயர் குலத்துச் சிறுமிகள், நோன்பு முடிந்த பின்னர் தங்களது கூந்தலைத் திருத்திக்கொள்ளும் வகையில், கண்ணாடி கொடுத்து அருளுமாறு நப்பின்னை பிராட்டியிடம் கோருவதை நாம் இந்த பாட்டில் உணரலாம்.

பொழிப்புரை

முப்பத்து முக்கோடி தேவர்களை துன்பங்கள் ஏதேனும் அணுகும் முன்னமே, அவர்களது நடுக்கத்தைத் தவிர்த்து அவர்களது இடர்களைக் களையும் வல்லமை வாய்ந்த பெருமானே, நீ உனது உறக்கம் களைந்து எழுந்திருப்பாயாக. செம்மையான குணங்களை உடையவனே, வல்லமை வாயந்தவனே, உனது பகைவர்கள் உன்னிடம் உள்ள பயத்தினால் காய்ச்சல் அடையச்செய்யும் வீரம் பொருந்தியவனே, குற்றங்கள் ஏதும் இல்லாதவனே, நீ எழுந்திராய். செப்புக் குடங்கள் போன்று அழகினை உடையதும் மென்மையும் உடையதும் ஆகிய முலைகளையும், சிவந்த உதடுகளையும், சிறிய இடையினையும் உடைய நப்பின்னை பிராட்டியே, எங்களின் செல்வமாக விளங்கும் நங்கையே, நீ துயில் எழுவாயாக. உனது மணாளனான கண்ணனையும் துயிலெழுப்பி, அவனிடம் ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் கொடுத்து அனுப்புவாயாக. நாங்கள் கண்ணனையும் அழைத்துக்கொண்டு நீராடச் செல்வதற்காக காத்திருக்கின்றோம். கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நீராடுவதற்கு வழி வகுப்பாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com