திருப்பாவை - பாடல் 24

அன்று நெடுமாலாக நிமிர்ந்து, மாவலி அளித்த
Published on

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி


விளக்கம்

நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தான் என்பதை உணர்ந்த ஆயர் சிறுமிகள், நாராயணனின் திருவடிகளையும் அவனது குணங்களையும் போற்றிப் பாடுவதாக ஆண்டாள் பிராட்டியார் இந்த பாடலில் கூறுகின்றார். கண்ணபிரானும் தங்களுடன் வர வேண்டும் என்ற விருப்பத்துடன் கண்ணனை துயிலெழுப்பிய ஆயர் சிறுமிகள், தங்கள் விருப்பத்திற்கு இணங்கி கண்ணன் நடந்தால் அவனது திருவடிகள் வலிக்குமே எண்ணினார்கள் போலும். அவர்களுக்கு அந்த திருவடிகள் செய்த சாகசச் செயல்கள் நினைவுக்கு வருகின்றன. மூவுலகை அளந்தது, இலங்கை சென்றது, சகடத்தை உதைத்து, குன்றினை எடுத்து நின்றது ஆகியவை நினைவுக்கு வரவே அந்த செயல்களை நினைவுகூர்ந்து போற்றும் பாடல்.

பொழிப்புரை

அன்று நெடுமாலாக நிமிர்ந்து, மாவலி அளித்த மூன்றடி மண்ணினை அளக்கும் பொருட்டு, உனது திருவடியின் இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தவனே உன்னை நாங்கள் போற்றுகின்றோம். எவரும் நெருங்காவண்ணம், கடலினையே அரணாகக் கொண்டு திகழ்ந்த தென்னிலங்கை சென்றடைந்து, இலங்கை நாட்டினை வென்றவனே உனது வலிமையை நாங்கள் போற்றுகின்றோம்; சகடாசுரன் வண்டியில் புகுந்ததை அறிந்து வண்டி நொறுங்குமாறு உனது காலால் உதைத்து சகடனை அழித்த உனது புகழினை நாங்கள் போற்றுகின்றோம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை, அவனது காலினைப் பிடித்துச் சுழற்றி தடியினை எறிவது போன்று, விளாமரத்தில் ஒளிந்துகொண்டிருந்த கபித்சாசுரனை அந்த தடியால் அடித்துக் கொன்றவனே, உனது வீரக் கழல்களை நாங்கள் போற்றுகின்றோம்.

இந்திரன் பெய்வித்த மழையிலிருந்து மக்களையும் பசுக்களையும் காக்கும் பொருட்டு, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவனே, உந்தன் குணத்தினை நாங்கள் போற்றுகின்றோம். பகைவர்களை வெற்றிகொள்ளும் வகையில் உனது திருக்கையில் ஏந்திய வேலினை நாங்கள் போற்றுகின்றோம். என்றென்றும் உனது குணங்களையும் செயல்களையும் போற்றிப் புகழும் நாங்கள், உன்னிடம் பறை இசைக் கருவியினை கொள்வதற்காக இன்று வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com