மார்கழி வழிபாட்டில் மறைந்துள்ள பண்டைய வாழ்க்கை முறை!

டாக்டர் சுதா சேஷய்யனின் மார்கழி மாதத்திற்கான அறிமுகம், விளக்கமும்..
margazhi
மார்கழி
Updated on
1 min read

அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கோ குளத்திற்கோ நீராடச் செல்லும் பெண்கள், அங்கே மணலில் பாவை வடிவம் அமைத்து, அதையே அம்மையாகக் கருதி வழிபட்டு, பின்னர் நீராடித் தங்கள் விரதத்தைத் தொடர்ந்தனர். காலைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னரே கடவுளை வழிபடுவதும், மணலிலும் இயற்கையிலும் இறைமையைக் காண்பதும், அறத்தோடும் இயற்கையோடும் இயைந்து வாழ்ந்த வாழ்க்கை முறையைக் காட்டுகின்றன.

பண்டைக் காலத்தில் இருந்த இப்பழக்கம், பாவை நோன்பாக மலர்ந்தது. சைவத்தில் மாணிக்கவாசகரும், வைணவத்தில் ஆண்டாள் நாச்சியாரும் இம்முறையைப் பயன்கொண்டனர். இருவரின் பாடல்களும், "எம்பாவாய்' என்றே நிறைவடைவதால், இவற்றைப் பாவை பாட்டு என்றழைக்கிறோம். ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காட்டவே, ஆண்டாளின் பாசுரங்கள் திருப்பாவை (திரு+ பாவை) என்றும், மாணிக்கவாசகரின் பாசுரங்கள் திருவெம்பாவை (திரு+எம்+பாவை) என்றும் வழங்கப் பெறுகின்றன.

மார்கழி மாதத்தில், நாளுக்கு ஒன்றாகத் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களை ஓதுவது (அல்லது பாடுவது) மரபு. ஒவ்வொரு நாளுக்குமான பாசுரம், அந்தந்த நாளுக்கான "நாள் பாசுரம்' என்றே வழங்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், மார்கழி மாதத்தின் தேதிகளைக் குறிக்காமல், நாள் பாசுரத்தின் நாள் என்று குறிப்பதே வழக்கம். எடுத்துக்காட்டாக, மார்கழி முதல் நாள் என்று கூறாமல், "ஆதியும்அந்தமும் நாள்' என்றும், மார்கழி மூன்றாம் நாள் என்று கூறாமல், "ஓங்கி உலகளந்த நாள்' என்றும் கூறுகிறோம்.

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்துள்ள திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. மாதம் முழுவதும், நாளுக்கு ஒன்றாக இவை ஓதப்பெறும். மாணிக்கவாசகர் அருளிச்செய்துள்ள திருவெம்பாவையில் இருபது பாசுரங்களே உள்ளன. முதல் இருபது நாள்களுக்கு இவற்றையும், அடுத்துள்ள பத்து நாள்களுக்கு மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களையும் ஓதுவது முறை. திருவாதிரைத் திருநாள் வரை திருவெம்பாவைப் பாடல்களை ஓதி, பூர்த்தி செய்துவிட்டு, திருவாதிரைக்கு மறுநாளிலிருந்து திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை ஓதுகிற முறையும் உண்டு. திருப்பாவையின் முப்பது பாசுரங்களை மூன்று பகுப்புகளாக வகைப்படுத்தலாம்.

  •  பாசுரங்கள் 1 முதல் 5 வரை - பாயிரம்

  •  பாசுரங்கள் 6 முதல் 15 வரை - துயிலெடை (ஒருவரை எழுப்புதல்)

  • பாசுரங்கள் 16 முதல் 30 வரை - நோக்கம் மற்றும் கண்ணன் பெருமை

  • திருவெம்பாவையிலும் இப்படியொரு வகைப்பாட்டைக் காணக்கூடும்

  •  பாசுரங்கள் 1 முதல் 9 வரை - துயிலெடை

  •  பாசுரங்கள் 10 முதல் 20 வரை

நோக்கம் மற்றும் சிவபெருமான் பெருமை நோன்பு விரதத்தைத் தொடங்கும் பெண்கள், தங்களின் உணர்வுகளை இறைவனிடம் ஈடுபடுத்தி, இயற்கையோடு இயைவதானது, இப்பாடல்களின் பொதுச் சிறப்பு.

Summary

Dr. Sudha Seshayyan's introduction and explanation for the month of Margazhi...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com