
காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ஐந்தில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் மூன்றாவதாகவும் உள்ள தலம் ஓணகாந்தன்தளி.
சிவஸ்தலம் பெயர்: ஓணகாந்தேஸ்வரர் கோயில்
இறைவன் பெயர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்
இறைவி: காமாட்சி அம்மன்
எப்படிப் போவது?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கே உள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு எதிரில் இந்த கோயில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்,
ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை (துணை மின்நிலையம் அருகில்), பெரிய காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 502.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், கச்சிக் காமகோட்டம், கச்சி மேற்றளி ஆகிய ஆலயங்களைத் தரிசித்த சுந்தரர், அசுரர்களான ஓணன் மற்றம் காந்தன் இருவரும் பூஜித்துப் பேறுபெற்ற ஓணகாந்தன்தளி என்ற ஆலயத்துக்குச் சென்றார்.
இறைவனிடம் உரிமையுடன் அடிமைத் திறம் பேசி, "நெய்யும் பாலும் தயிரும் கொண்டு" என்று தொடங்கும் பதிகம் பாடி, அளவில்லாத பொன் பெற்றார் என்பது வரலாறு.
இப்பதிகத்தில், ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்துகொண்டதாகவும், அதை அறிந்த சுந்தரர் அங்கு சென்று பதிகத்தை தொடரவே, அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு இறைவன் உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
சுந்தரர் பாடிய பதிகத்தை தினமும் ஓதுபவர், தேவையான காலத்தில் இறைவன் திருவருளால் தேவையான பொன்னும் பொருளும் பெறுவார்கள் என்பது உறுதி. அத்துடன், அவர்களுக்கு திருஓணகாந்தன்தளி இறைவன் வாழ்வில் மனநிறைவையும், பணப் பிரச்னை தீர்த்து ஆனந்தத்தையும் அளிப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால், இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் காட்சி தருகிறது. ஆலயத்தில் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்புமிக்க ஆலயம் இது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும், அடுத்தடுத்து தனித்தனி சன்னதிகளாக உள்ளன.
முதல் சன்னதியில், ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம், கருவறைச் சுற்றில் சிவன் - உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சன்னதி அர்த்த மண்டபத்தில், சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம்.
அடுத்து, இரண்டாவது சன்னதியில், காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். மூன்றாவது கருவறையில், சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும்.
இத்தலத்தில் உள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சன்னதி குறித்து, சம்பந்தர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிடுகிறார். இதுதவிர, மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சன்னதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில், பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் "ஓம்" என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
இத்தலத்தில், சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். முருகன் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி, தனது இரு தேவியரான வள்ளி - தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால், இத்தலத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சன்னதி இல்லை. திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சன்னதி தனியாக இல்லை.
கோயிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது. வன்னி மரமும், புளிய மரமும் இத்தலத்தின் தல விருட்சங்களாகும்.
சுந்தரர் பதிகம் 7-ம் திருமுறை
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தல் பூசை செய்யல் உற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லைக்
கழல் அடி தொழுது உய்யின் அல்லால்
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி
ஆழ்குழிப்பட்டு அழுந்து வேனுக்கு
உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர்
ஓணகாந்தன்தளி உளீரே.
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கொற்று அட்டியாளார்
உங்களுக்கு ஆட் செய்யமாட்டோம்
ஓணகாந்தன்தளி உளீரே.
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்றிலர் என்று இரங்கி
மதி உடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத்து அடிகேள் உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணால் ஆமோ
ஓணகாந்தன்தளி உளீரே.
வல்லது எல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பது என் நீர்
பல்லை யுக்கப் படுதலையில்
பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன்தளி உளீரே.
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைபடாமே
ஆடிப் பாடி அழுது நெக்கு அங்கு
அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்து எய்த்தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றும் தாரீர்
ஓணகாந்தன்தளி உளீரே.
வார் இருங்குழல் வாண் நெடுங்கண்
மலைமகள் மது விம்மு கொன்றைத்
தார் இருந்தடமார்பு நீங்காத்
தையலாள் உலகு உய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊர் இடும் பிச்சை கொள்வதென்னே
ஓணகாந்தன்தளி உளீரே.
பொய்ம்மையாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதும் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை என்றே எம்பெருமான்
ஓணகாந்தன்தளி உளீரே.
வலையம் வைத்த கூற்றம் ஈவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தையாலே
திருவடி தொழுது உய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவல் ஊடு ஐ
உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்
ஓணகாந்தன்தளி உளீரே.
வாரம் ஆகித் திருவடிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவது என்னே
ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர்
ஒற்றியூரேல் உம்மது அன்று
தாரமாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உம்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓணகாந்தன்தளி உளீரே.
ஓ வணம் மேல் எருது ஒன்று ஏறும்
ஓணகாந்தன்தளி உளார்தாம்
ஆவம் செய்து ஆளும் கொண்டு
அரை துகிலொடு பட்டு வீக்கிக்
கோவணம் மேற்கொண்ட வேடம்
கோவை ஆக ஆரூரன் சொன்ன
பா வணத் தமிழ்பத்தும் வல்லார்க்குப்
பறையும் தாஞ்செய்த பாவந்தானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.