தெய்வ தரிசனம்... சகல தோஷங்களையும் நீக்கும் பவானி சங்கமேஸ்வரர்!

சகல தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது இத்தலம்.
Sangameshwarar
சங்கமேஸ்வரர்
Published on
Updated on
4 min read

தமிழகத்தின் சிறந்த பரிகாரத் தலங்களில் பவானியும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் இத்தலத்துக்கு வந்து நிறைய பேர் பரிகாரங்கள் செய்வதுகொள்வதை நாம் காணமுடியும்.

இறைவன் பெயர்: சங்கமேஸ்வரர்

இறைவி பெயர்: வேதநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவிலும் பவானி உள்ளது. சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. பவானிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம், ஈரோடு.

ஆலய முகவரி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்,

பவானி,

ஈரோடு மாவட்டம் – 638 301.

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காவிரி ஆறும் பவானி ஆறும் கூடும் சங்கமத் துறையில், காயத்ரி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இறைவனுக்கு காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர். இக்கோவில் அருகே தினமும் பரிகார பூஜைகள் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்துச் சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணுக்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில், வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மட்டுமின்றி, ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து, சைவ - வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால், இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளான முருகனுக்கு, அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.

அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு, வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாகத் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில், வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ, தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து, அதன்மூலம் அம்பிகையை காரோ காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினமும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.

ஒருமுறை, காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி, கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ, பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804-ம் வருடம் ஜனவரி 11-ம் நாள் ஆகும்.

இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் ஜ்வரஹரேஸ்வரர் திருஉருவம் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது, அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு, அவர்கள் நோய் நீங்கப்பெற்றார்கள் எனக் கூறப்படுகிறது.

கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்களின் திருஉருவங்கள் உள்ளன. கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தலவிருட்சம் இலந்தை மரம் தனிச் சிறப்பு கொண்டது. வேதமே மர வடிம் எடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இங்குதான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாகத் தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்துக்கு சுவைமிக்க பழங்களைத் தருகிறது.

கொங்கு நாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனீஸ்ர பகவானுக்கு தனிச் சந்நிதி இருக்கும். இத்தலத்திலும் சனீஸ்வர பகவானுக்கு தனிச் சந்நிதி உண்டு. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும், இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக்கொண்டு ஆவுடையாரை வலம் வர, குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

இக்கோயிலில் காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8 மணிக்கு காலை சாந்தி, உச்சிக்காலம் 12 மணி, இடைக்காலம் மாலை 4.30 மணி, சாயரட்சை 5.15 மணி, அர்த்த ஜாமம் 7.30 மணி என ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com