தெய்வ தரிசனம்... இழந்த செல்வம், பதவியை மீட்டுத் தரும் தேவூர் தேவபுரீஸ்வரர்!

இந்திரனுக்குப் பதவியையும் மீண்டும் அருளிய தலம் என்ற பெருமையைப் பெற்றது இத்தலம்.
Devur Devapureeswarar
தேவூர் தேவபுரீஸ்வரர்
Published on
Updated on
3 min read

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 85-வது தலமாக இருப்பது திருதேவூர். குபேரனுக்கு அவனது செல்வத்தையும், இந்திரனுக்கு அவனது இந்திர பதவியையும் மீண்டும் அருளிய தலம் என்ற பெருமையைப் பெற்றது இத்தலம்.

     இறைவன் பெயர்: தேவபுரீஸ்வரர், கதலிவனேசர்

     இறைவி பெயர்: மதுரபாஷினி, தேன்மொழியம்மை

எப்படிப் போவது?

திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலை வழியில் கீவளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். திருவாரூர் - வலிவலம் நகரப் பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால், கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.

ஆலயத்தின் வெளிப் பிரகாரம்
ஆலயத்தின் வெளிப் பிரகாரம்

ஆலய முகவரி
அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேவூர், தேவூர் அஞ்சல்,
வழி கீவளூர், கீவளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611 109.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாடக் கோயில் கருவறை விமானம்
மாடக் கோயில் கருவறை விமானம்


இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராச சபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால், கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தல விநாயகர், வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்ணு காட்சி கொடுக்கிறார்.

தேவகுருநாதர்
தேவகுருநாதர்

நவகிரகங்களில் வியாழ பகவான், தேவர்களின் குரு என்று போற்றப்படுகிறார். தேவர்களின் குருவான வியாழன் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றுள்ளார். ஆகையால், இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி தேவகுருநாதர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். இவரின் காலடியில் முயலகன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலவிருட்சம்

இத்தலத்து தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழை மரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது, தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழை மரத்துக்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழை மரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.

கொடிமரம் மற்றும் மாடக் கோயில்
கொடிமரம் மற்றும் மாடக் கோயில்

தலத்தின் சிறப்பு

குபேரனுடன் ராவணன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற செல்வக் கலசங்களை எடுத்துச் சென்றான். குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன், இந்தத் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். இத்தலத்து இறைவன் அருளால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தையும் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.

இந்திரன், விருத்தாசுரனைக் கொன்ற பாவத்துக்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால், பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் எனத் தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும். 

மாடக் கோயிலுக்குச் செல்லும் வழி
மாடக் கோயிலுக்குச் செல்லும் வழி

இழந்த செல்வத்தையும், இழந்த பதவியையும் மட்டுமின்றி சூரிய தோஷம் உள்ளவர்களும் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இங்கு இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர் வரும் என்று எண்ணுபவர்கள், ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. இதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தேவூர் தலத்து இறைவனை திங்கள்கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் பலன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com