சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி 2)

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர்.
சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி 2)
Published on
Updated on
4 min read

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர். தமிழ்நாட்டிலுள்ள பெரிய கோவில்களில் திருவாரூர் கோவிலும் ஒன்றாகும். எல்லா வித தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக இருக்கும் சிறப்புடைய தலம் திருவாரூர். 

இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த சில சந்நிதிகளைப் பற்றியும், திருவாரூர் கோவிலின் சில சிறப்புகளைப் பற்றியும் நாம் முந்தைய பகுதியில் (பகுதி 1)  பார்த்தோம். கோயிலில் உள்ள மேலும் சில சந்நிதிகளையும், சிறப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம். இறக்க முக்தி தரும் தலம் காசி. பிறக்க முக்தி தரும் தலம் திருவாரூர். திருவாரூரிலுள்ள வான்மீகநாதர் ஆலயத்தில் சந்நிதிகளுக்கு குறைவே இல்லை. அவ்வளவு சந்நிதிகள் இவ்வாலயத்தில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.

ரௌத்திர துர்க்கை சந்நிதி 

அருள்மிகு ரௌத்திர துர்க்கை அம்பாள், திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களும், ஆண்களும் திருமணத் தடையைப் போக்கிக்கொள்ள ராகு கால நேரத்தில் செய்யும் அர்ச்சனையை ஏற்று அவர்களின் குறைகளைத் தீர்த்து அருள்பாலிக்கிறாள். ரௌத்திர துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள் கிடைக்கும். வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் அர்ச்சனை செய்து விஷேச பலனை அடையலாம்.

ரண விமோசனர் சந்நிதி

ரண் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத/வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்குத் தீர்த்துவைப்பதால் ரண விமோசனர் என அழைக்கப்படுகிறார். இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுதல் மிகவும் பலனைக் கொடுக்கும். பக்தர்களின் உப்பு காணிக்கையினால் பிராகாரம் சற்று அரிக்கப்பட்டிருந்தாலும், லிங்கம் எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கிறது.

அசலேஸ்வரர் சந்நிதி 

நமிநந்தி அடிகள் நாயனார், தண்ணீரால் விளக்கேற்றி வைத்து வழிபட்ட திருவாரூர் அரநெறி, இத் தலத்தில்தான் உள்ளது. இச்செய்தியை, திருநாவுக்கரசர் இத்தலத்தின் மீது தான் இயற்றியுள்ள ஒரு பதிகத்தில் (4-ம் திருமுறை 102-வது பதிகம் 2-வது பாடல்) குறிப்பிடுகிறார். 
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரார் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே. 

பொழிப்புரை

அடியார்களின் அன்புமிக்க உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித் தொண்டனும், தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பிநந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர் எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி நடத்தியதையும், நீரை வார்த்துத் திருவிளக்குக்களை எரியவிட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.

*

இக்கோவில் திருவிசைப்பா பதிகம் பாடிய கண்டராதித்த சோழதேவரது மனைவியாகிய செம்பியன் மாதேவியால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. இதற்கு அப்பர் அருளிய பதிகங்கள் இரண்டு உள்ளன. திருவாரூர் அரநெறி என்னும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் கோயிலுக்குள்ளேயே இரண்டாம் பிராகாரத்தில் தென் கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. 

இங்கு, சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அரநெறியப்பர், அசலேஸ்வரர் என்ற பெயர்களுடன் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தான கோபுரத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை என்ற தனி மகிமை வாய்ந்தது. ஆறு மாதத்துக்குள் இறப்பவர் நோக்கினால், அந்த நிழலும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அரநெறியப்பர் கோயிலை செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு, நாள்தோறும் பூஜைக்கும் கோயிலைப் பழுது பார்ப்பதற்குமாக 234 பொற்காசுகளைக் கொடுத்ததையும் இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஒரு மன்னருடைய வேண்டுகோளை ஏற்று இறைவன் சலியாது எழுந்தருளியிருப்பதால் அசலேஸர் எனப் பெயர் பெற்றார். அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாகக் கருதப்படுகிறது.

தண்ணீரில் எரிந்த விளக்கு

63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாகக் கருதியவர் இவர். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்யவந்த நமிநந்தி அடிகள், கோயில் விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்கத் தொடங்கியது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் எடுத்து வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமிநந்தி அடிகள், கோயில் வாசலில் இருந்த வீட்டுக்குச் சென்று விளக்குக்காக சிறிது நெய் கேட்டார். 

அந்தக் காலத்தில், கோயிலைச் சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட வீட்டில் இருந்த சமணர்கள், கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று என்று பரிகாசம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள், கோயிலுக்கு வந்து இறைவனிடம் மனமுருகி வேண்ட, இறைவன் அசரீரியாக அவர்கள் கூறியபடி அங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று என்று கூறினார். 

இதைக்கேட்டு, நமிநந்தி அடிகள் மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பைவிட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன், அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால் தண்ணீரால் கோவில் விளக்கெல்லாம் எரியச்செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார் நமிநந்தி அடிகள்.

நவக்கிரக சந்நிதி

சதயகுப்தன் என்னும் அசுரன் நவக்கிரகங்களை அழிக்க நினைத்து அவர்களின் மீது போர் தொடுத்தான். அசுரனுடன் நடந்த போரில் தோற்று தங்கள் பதவிகளை இழந்த நவக்கிரகங்கள், திருவாரூர் சென்று தியாகராஜரை சரணடைந்தனர். அப்போது சிவபெருமான் நவக்கிரகங்களிடம், திருவாரூருக்கு வருவோருக்கு நல்லதே செய்து தருவதாக உறுதியளித்தால், அவர்கள் இழந்த பதவியை மீட்டுத் தருவதாகக் கூறினார். அதற்கு நவக்கிரகங்களும் சம்மதம் தெரிவிக்கவே, சதயகுப்தனை தியாகராஜர் வென்று நவக்கிரகங்களுக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். அதனால்தான், நவக்கிரகங்கள் இங்கே சிவனை ஒரே வரிசையில் நின்று வணங்குகின்றனர். அத்துடன், இத்தலத்தில் தியாகராஜரை வழிபடுவதால் நவக்கிரகங்களினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும், இன்னல்களும் விலகி வாழ்வில் வளம் ஏற்படும்.

(தொடரும்)

சுந்தரர் மற்றும் நாவுக்கரசர் அருளிய பதிகங்கள் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com