இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள 12 வகையான சிவலிங்கங்களையும் (துவாதச லிங்கங்கள்) திருச்சி மாவட்டம், திருப்பிடவூரில் (தற்போது திருப்பட்டூர் என அழைக்கப்படுகிறது) பிரதிஷ்டை செய்து, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வழிபட்டுள்ளார் படைக்கும் கடவுளான பிரம்மா.
இத்திருக்கோயிலில் சிவனை பிரம்மா வழிபட்டதால், இங்குள்ள ஈசுவரர் பிரம்மபுரீஸ்வரர் என்றும், அம்மன் பிரம்ம நாயகி எனப்படும் பிரம்ம சம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகின்றனர். பிரம்மா வழிபட்ட ஷோடசலிங்கம் தனி மண்டபத்தில் அமைந்துள்ளது. மேலும் பிரம்மா சாப விமோசனம் பெற சிவன் அருளிய திருக்கோயில் இது. மேலும், பிரம்மாவுக்கு பிரம்மாண்ட சிலையுடன் தனி சன்னதி அமைந்திருப்பதும் இங்குதான். இத்திருக்கோயில் திருச்சியிலிருந்து வடக்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரருளாளன் பிடவூரன்
நம்மானே தண்டமிழ் நூற்புலவாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே
என சுந்தரரால் பாடல்பெற்ற திருக்கோயில் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர்.
இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்
படைப்புத் தொழில் கடவுள் பிரம்மா
தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால், தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வல்லான் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்று பிரம்மா தனக்குள் செருக்குற்றார். ஆனால் பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணிய ஈசன் (சிவபெருமான்), ஐந்தில் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். இதனால் பிரம்மா நான்முகன் எனவும் வழங்கப்பட்டார். தனது ஒரு தலை கொய்யப்பட்டதை எண்ணி மிகவும் அவமானம் அடைந்து படைப்புத் தொழிலை பிரம்மா நிறுத்திவிட, அமரர் உலகத்தினர் அஞ்சி ஈசனிடம் முறையிட்டனர். ஈசனும் பிரம்மாவை அழைத்து சாபத்தை நீக்கி, படைப்புத் தொழிலைத் தொடர அருளினார்.
இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப் பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
அதன் பின்னர் ஸ்ரீபிரம்மபுரீசுவரர், ஸ்ரீபழமலைநாதர், ஸ்ரீ பாதாள ஈசுவரர், ஸ்ரீ சுத்தரத்தினேசுவரர், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ சப்தரிஷீசுவரர், ஸ்ரீ காளத்திநாதர், ஸ்ரீ சம்புகேசுவரர், ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீ ஏகாம்பரேசுவரர், மண்டுகநாதர் ஆகிய 12 வகையான லிங்கங்களை பிடவூரில் பிரதிஷ்டை செய்து, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தார் பிரம்மா. முக்கண்ணன் மலரோன் பக்திக்குத் திருவுள்ளம் கனிந்து, நான்முகா, என் மீதுள்ள பக்தியின் மிகுதியால் எம்மை வணங்கி வழிபட்டு, பூஜித்து மகிழ்வித்த உனது சிரேஷ்டான அன்பிற்கு யாம் உளம் மகிழ்ந்தோம். வேண்டும் வரம் கேள் என்றார் ஈசன்.
சகல லோகங்களுக்கும் பதியான சங்கர பகவானே, கைலாசபதியே, இந்த எளியோனுக்கு தேவரீர் மீது என்றும் குறையாத பக்தியையும், அன்பையும் நீடித்து நிலைத்திருக்க அருள்புரிய வேண்டும் என்று பிரம்மா கேட்க, அவ்வாறே அருளினார் ஈசன்.
இதைத் தொடர்ந்து, பிடவூரில் பிரம்மாவுக்கு ஈசனாம், புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் எனும் பஞ்சமூர்த்தி சொரூபத்துடன் கூடிய அற்புத தரிசனத்தைக் கொடுத்து, நீர் இனி பிடவூரில் இருந்து எம்மையும், உம்மையும் வந்து பிரார்த்திப்பவர்களுக்கு அவர்களுடைய தலையெழுத்தை மாற்றி, அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை உணர்த்தி அருள்புரிய வேண்டும் என்றார் ஈசன். அன்று முதல் பிடவூர் எனப்படும் திருப்பட்டூரில் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார் பிரம்மா.
குரு பரிகாரத்தலம்
ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளிலும் பிரம்மா சன்னதியில் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குருதோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் இக்கோயிலில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் பிரம்மா மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். யாருக்குத் தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மா பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.
திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜன்ம நட்சத்திர நாள்களில் பக்தர்கள் பிரம்மாவை வணங்குவது விசேஷ பலனைத் தரும். திருமணத் தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார விருத்திக்காக பிரம்மாவிடம் வேண்டி வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். படைத்தல் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மா தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால், குழந்தைப்பேறு வேண்டுவோருக்கான பிரார்த்தனைத் தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்
கோயில் அமைப்பு
ராஜகோபுரத்திலிருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தொலைவில் பிரம்மபுரீசுவரர் சன்னதி உள்ளது. சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படி கோயில் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளைக் கடந்து தினமும் பிரம்மபுரீசுவரரைத் தரிசிப்பதாக ஐதீகம். பங்குனி மாதம் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சிவலிங்கம் மீது சூரியவொளி விழும் ஐதீக நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஏழு நிமிஷங்கள் இந்த ஒளி இருக்கும். இது சூரிய பூஜை என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதே நாளில் அடுத்த 7 நிமிஷங்களுக்கு அம்மன் மீதும் சூரிய ஒளிபடும் ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது. இக்கோயிலில் பிரம்மா வழிபட்ட ஷோடசலிங்கம் (16 பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இங்குள்ள ஈசுவரர் பிரம்மபுரீசுவரர், சுயம்புலிங்க மூர்த்தி.
இக்கோயிலை வலம் வரும்போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனி சன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன் பின்னர் மூலவர் பிரம்மபுரீசுவரர் (மகேசுவரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பானது மிகவும் விசேஷமானது. மற்ற கோயில்களில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கும் காலபைரவர், இக்கோயிலில் மேற்கு நோக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சண்முகநாதர் சன்னதி
இக்கோயிலிலுள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்றழைக்கப்படுகிறார். அருள்மிகு வள்ளி, தெய்வசேனா சமேதராய் (கிரியா, இச்சா சக்திகளாக) இக்கோயிலில் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்திருக்கோயிலில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன் பின்னர் படை திரட்டிச் சென்றாராம். இதனால் திருப்படையூர் எனப்பட்ட இத்திருக்கோயில் திருப்பட்டூர் என மருவியதாகக் கூறுவர். முருகன் வழிபட்ட சிவன், கந்தபுரீசுவரர் என்ற பெயரில் இந்த திருக்கோயிலில் உள்ளார்.
இதையும் படிக்கலாம்: நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்
12 சிவலிங்கங்களும், பிரம்ம தீர்த்தமும்
பிரம்மா பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிரம்மபுரீசுவரர், பழமலைநாதர், பாதாள ஈசுவரர், சுத்தரத்தினேசுவரர், தாயுமானவர், சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், சம்புகேசுவரர், கைலாசநாதர், அருணாச்சலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டுகநாதர் என 12 சிவலிங்கங்கள்.
பிரம்ம தீர்த்தம் கோயில் உள்ளேயும் மற்றும் வெளி வளாகப் பகுதியிலும் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த சிவலிங்கங்களை வழிபட்டுச் செல்கின்றனர்.
எல்லாமே மஞ்சள் நிறம்
மங்கலம் தந்து வாழ்க்கையைச் சிறக்கச் செய்பவர் பிரம்மா என்பதால், இக்கோயிலில் பூஜையின்போது பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர்.
பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி
சோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் 10 இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக தகவல் உண்டு. இந்த 10-இல் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலும் ஒன்று.
எலும்பு நோய்க்குப் பூஜை
பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இந்த இடத்தில் லிங்கமும் ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்துக்குத் தயிர் சாதம் படைத்து பூஜை நடைபெறும். வைகாசி மாத சதய நட்சத்திரத்தன்று பதஞ்சலி மகரிஷி குரு பூஜை நடைபெறுகிறது. மன அமைதி கிடைக்க, எலும்பு சம்பந்தமான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.
நான்குத் தூண்களில் நரசிம்மர்
நரசிம்மர் அவதாரம், இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதானுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் இக்கோயிலின் கொடிமரம் அருகே நான்கு தூண்களில் எழிலுற வடிவமைக்கப்பட்டு காணப்படுகிறது.
இந்த பகுதி நரசிம்மர் மண்டபம் என அழைக்கப்படுகிறது. நாத மண்டபத்தில் ராவணன் அகந்தையில் மேருமலையை சிவன், பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் கோயிலுக்கு முந்தைய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுர வடிவமைப்பு போன்றே இக்கோயிலின் ஒரே பகுதியில் 7 சிவலிங்கங்கள் அமைந்த பகுதியில் கைலாசநாதர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் கோபுர வடிவமைப்பு தஞ்சாவூர் பெரியகோயில் போன்றே உள்ளது.
அதனால் தஞ்சைக்கு முந்தைய கோயில் எனக் கூறப்படுகிறது. இச்சன்னதிக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது.
இந்த கோயிலுக்கும் செல்லலாம்: நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருவிழாக்கள்
திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். இதிலும் பங்குனி மாத பூரம் நட்சத்திரத்தன்று திருத்தேரோட்டம் நடைபெற்று, சுவாமி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சித்திரை மாத முதல் தேதியான தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைபெறும். இதையொட்டி பிரம்மபுரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதுபோல, ஆடிமாத பூரம் நட்சத்திரத்தன்று பிரம்ம சம்பத் கௌரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, ஐப்பசி மாத பௌர்ணமியன்று பிரம்மபுரீசுவரருக்கு அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார திங்கள்கிழமைகளில் சங்காபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.
இதுவரை நடைபெற்ற குடமுழுக்கு விவரங்கள்
இக்கோயிலில் 20.6.1935, 08.02.1985, 17.03.2006 ஆகிய தேதிகளில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
பூஜைகள்
இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலசாந்தி பூஜை காலை 8.30 மணி முதல் 9.30, உச்சிக்கால பூஜை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12, சாயரட்சை பூஜை மாலை 6 மணி முதல் 6.30, அர்த்தசாம பூஜை இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இந்த கோயிலையும் பார்க்கலாம்: ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர் திருக்கோயில்
இக்கோயில் வார நாள்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1, மாலை 4 மணி முதல் இரவு 8 வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கும், மற்ற நாள்களில் காலை 8 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.
அரங்கேற்றம்
சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்றழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான்.
அரங்கேற்ற அய்யனார்
பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு திருப்பட்டூரில் அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார்.
பல்வேறு காலகட்டத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டி, பின்னர் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். இக்கிராமத்தின் காவல் தெய்வமாக பூர்ணபுஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் ஜீவ சமாதி
திருப்பட்டூரில் காசி விசுவநாதர் சமேத விசாலாட்சி கோயிலில் வியாக்ரபாதர் ஜீவ சமாதி உள்ளது. சிவபெருமான் அருளால் வியாக்ரபாதர் காலால் அடித்துக்கொண்டு வரப்பட்ட கங்கைக்குளம் இன்றும் புலிக்கால்களைப் போல காட்சியளிக்கிறது.
இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
எப்படிச் செல்வது
திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மசம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியிலிருந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. விமானம் மற்றும் ரயில் மூலமாக வருபவர்கள் திருச்சி வந்து சமயபுரம், சிறுகனூர் வழியாக இக்கோயிலைச் சென்றடையலாம்.
பேருந்து மூலமாக வருபவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பட்டூர் வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் செல்லலாம். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் பெரம்பலூர் தடத்தில் செல்லும் புறநகர்ப் பேருந்துகளில் சென்று சிறுகனூர் இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் மூலமாக கோயிலைச் சென்றடையலாம்.
முகவரி
அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருப்பட்டூர், மண்ணச்சநல்லூர் வட்டம்
திருச்சி மாவட்டம் - 621105
அலுவலகத் தொலைபேசி எண் : 0431-2909599
படங்கள்: எஸ். அருண்