கண்நோய்களைத் தீர்க்கும் திருக்காரவாசல் கண்ணாயிர நாதர் கோயில்

கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிகாரத்தலமாக விளங்கும் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணாயிர நாதர் கோயில் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும்.
கண்ணாயிர நாதர் | கைலாய நாயகி
கண்ணாயிர நாதர் | கைலாய நாயகி

நீரானே நீள் சடை மேலோர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்தொழும்
சீரானே சீர் திகழுந்திருக் காறாயில்
ஊரானே யெந்பவ ரூனமி லாதாரே

என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருக்காரவாசல் கண்ணாயிர நாதர் கோயில்.

இது, தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 119 ஆவது ஆலயமாகத் திகழ்கிறது. மேலும், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 183 ஆவது தேவாரத் தலமாகும். புராண காலத்தில் இத்தலம் முழுவதும் 'காரகில்' எனும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்தன. எனவே, திருக்காரகில், திருக்காறாயில் என வழங்கப்பட்டு அதுவே மருவி திருக்காரவாசல் எனப் பெயர் பெற்றது. 

பிரம்ம தீர்த்தத்துடன் கோயில் வெளிப்புறத் தோற்றம்
பிரம்ம தீர்த்தத்துடன் கோயில் வெளிப்புறத் தோற்றம்

இங்கு மூலவராக கண்ணாயிரநாதர் உள்ளார். அம்மனுக்குக் கைலாச நாயகி என்று பெயர். தல விருட்சமாக பலா மரம் இருக்கிறது.

கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிகாரத் தலமாக விளங்கும் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணாயிர நாதர் கோயில் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும்.

சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல், தானே உருவான இயற்கை வடிவங்களை சுயம்பு அல்லது விடங்கம் என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சப்த விடங்கத் தலம்

ஒரு காலத்தில் அசுரர்களால், இந்திரனுக்கு பேராபத்து வர இருந்தது. அந்த ஆபத்தை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியுடன் வெற்றி கொண்ட இந்திரன், தன்னுடைய வெற்றிக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும் என்று கேட்டார் இந்திரன். 

அதற்கு முசுகுந்தன், இந்திரன் பூஜை செய்து வரும் விடங்க லிங்கனைத் தரும்படி கூறினார். அந்த லிங்கத்தைத் தர விருப்பமில்லாத இந்திரன், தேவ சிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப் போலவே 6 லிங்கங்களைச் செய்து அவற்றை, முசுகுந்த சக்கரவர்த்தியிடம் காட்டினார்.

கவசமிட்ட கொடிமரம்
கவசமிட்ட கொடிமரம்

அவற்றில் இந்திரன் வணங்கிய லிங்கத்தை முசுகுந்த மன்னன் சரியாகக் கண்டறிந்தார். இதையடுத்து ஆறு லிங்கங்களுடன் தன்னிடம் உள்ள விடங்க லிங்கத்தையும், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டார். அந்த ஏழு சிவலிங்கங்களையும், 7 இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முசுகுந்த சக்கரவர்த்தி. இவையே சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அவை திருவாரூரில் உள்ள வீதி விடங்கர், திருநள்ளாற்றில் உள்ள நகர விடங்கர், நாகப்பட்டினத்தில் உள்ள சுந்தர விடங்கர், திருக்குவளையில் உள்ள அவனி விடங்கர், திருவாய்மூரில் உள்ள நீல விடங்கர், வேதாரண்யத்தில் உள்ள புவனி விடங்கர் மற்றும் திருக்காரவாசலில் உள்ள ஆதி விடங்கர் ஆகியவை. 

தல வரலாறு

ஒருமுறை பிரம்மாவுக்கு, தான் எல்லோரையும்விட பெரியவன் என்ற கர்வம் ஏற்பட்டதால் சிவபெருமானை வழிபடாமல் அலட்சியம் செய்தார். இதை உணர்ந்த சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அகற்ற வேண்டி, அவரின் படைக்கும் தொழிலைப் பறித்தார். பதவி பறிபோன பிரம்மா உண்மையை உணர்ந்து, மனம் திருந்தி, விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காரவாசல் வந்து தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்து அருள் புரிந்தார். எனவே, சிவபெருமான் கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். 

குக்குட நடனத்தில் தியாகராஜர்

கண்ணாயிரநாதருக்கு பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சன்னதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்றுகொண்டிருக்கிறது. இங்குள்ள ஆதிவிடங்க தியாகராஜர், வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள் புரிகிறார்.

திருவாரூரில் வீதிவிடங்க தியாகராஜரின் அஜபா நடனத்தைக் கண்ட பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டியருள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டியபோது, திருக்காறாயில் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூறினார். அதன்படி பதஞ்சலி முனிவருக்கு 7 வகைத் தாண்டவங்களை ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல். 

தியாகராஜர் நீலோத்பலாம்பாளுடன்
தியாகராஜர் நீலோத்பலாம்பாளுடன்

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. முதல் வாயிலைக் கடந்து உள் சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய கோபுரம் உள்ளது. கோபுர வாயிலைத் தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, சுந்தரர், உற்சவர் சன்னதி, தியாகராஜ சபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுக சுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சன்னதிகள் உள்ளன. 

கொடிமரம், பலிபீடம் 
கொடிமரம், பலிபீடம் 

இத்தலத்தில் இறைவியின் பெயர் கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும் வகையில் சன்னதி அமைப்புகள் உள்ளன. மூலவருக்குப் பக்கத்தில் தியாகராஜ சபை உள்ளது.

பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. இந்த உற்சவத் திருமேனிகளில் காட்சி தந்த நாயனார் திருமேனி தரிசிக்கத் தக்கது. பின்னால் நந்தியுடனும் அருகில் உமையும் கூடியவாறு காட்சி தருகிறார். 

மகாவிஷ்ணு, பிட்சாடனர், அகஸ்தீஸ்வரர், கைலாசமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர், எல்லையம்மன், சுப்ரமண்யர், கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி, துர்க்கை, பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கின்றனர். 

 துர்க்கை | சுப்பிரமணியர் |  தெஷிணாமூர்த்தி | மஹாவிஷ்ணு 
 துர்க்கை | சுப்பிரமணியர் |  தெஷிணாமூர்த்தி | மஹாவிஷ்ணு 

சொர்ணாகர்ஷண பைரவர்

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள மூன்று பைரவர்கள் சன்னதிகளாகும். காலை, மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே உள்ளனர். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். 

மூன்று பைரவர்கள்
மூன்று பைரவர்கள்

இந்தத் திருத்தலத்தில் குக்குட நடனம் ஆடியபடி தரிசனம் தரும் சிவபெருமானை, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் தரிசனம் செய்து பேறு பெற்றுள்ளனர்.

பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இந்த திருத்தலத்தில் இருக்கின்றன. பிரம்மதேவர், தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, இங்கு ஒரு குளம் உண்டாக்கி ஈசனை வழிபட்டுள்ளார். அவர் உண்டாக்கிய குளமே பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 

உள் பிரகாரம்
உள் பிரகாரம்

அதேபோல் ஆதிசேஷன், இங்குள்ள கிணற்றின் வழியாக கோவிலுக்குள் சென்று, இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். எனவே அந்த கிணற்றுத் தீர்த்தத்துக்கு, சேஷ தீர்த்தம் என்று பெயர் வழங்கப்படுகிறது. இது இந்திர தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பெüர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி கடுக்காய் விநாயகரை பூஜிப்பதாக ஐதீகம்.

பிரமோத விநாயகர் 

பிரமோத விநாயகர் சன்னதி
பிரமோத விநாயகர் சன்னதி

பிரமோதம் என்றால் பெருமகிழ்ச்சி என்று பொருள். இந்தத் தலத்தில் மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், நினைத்த காரியம் நிறைவேறி, வாழ்வில் பெரும் மகிழ்ச்சி வந்தடையும் என்பதால், இந்த விநாயகருக்கு, பிரமோத விநாயகர் என்று பெயர்.

கடுக்காய் விநாயகர் 

கடுக்காய் விநாயகர் கோயில்
கடுக்காய் விநாயகர் கோயில்

இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான், கடுக்காய் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். 

ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை, மூட்டைகளாகக் கட்டி ஏற்றிக்கொண்டு தன்னுடைய ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இரவு நேரம் என்பதால் இந்த ஆலயத்தில் தங்கி ஓய்வெடுத்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், வண்டியில் இருப்பது என்ன என்று கேட்டார். ஜாதிக்காய் என்று கூறினால் அதிக வரி கட்ட வேண்டியது இருக்கும் என்பதால், வண்டியில் உள்ள மூட்டைகளில் கடுக்காய் இருப்பதாக வணிகன் பொய் கூறினான். 

கடுக்காய் விநாயகர் கோயில்
கடுக்காய் விநாயகர் கோயில்

அந்த நபர் மூட்டைகளை திறந்து காண்பிக்க கூறியபோது, அந்த மூட்டைகளில் கடுக்காய்களே இருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட வணிகன் கோவிலில் அமர்ந்து பொய் கூறியதை நினைத்து வருந்தினான். பின்னர் இத்தல விநாயகரை வழிபட்டு வேண்டியதை அடுத்து, கடுக்காய் முழுவதும் ஜாதிக்காய்களாக மாறின. இதனால் இத்தல விநாயகருக்கு கடுக்காய் விநாயகர் என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். 

கண்நோய் தீர்க்கும் கண்ணாயிர நாதர் 

கண்ணாயிர நாதர்
கண்ணாயிர நாதர்

இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாகத் தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தைப் பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும்.

மேலும் மூலவர் கண்ணாயிரநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டாலும் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பதும், தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள், பௌர்ணமி நாட்களில் கோவிலில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. 

கைலாய நாயகி
கைலாய நாயகி

இத்தல இறைவனிடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

விசேஷ நாள்கள்

ஆலயத்தில் வைகாசி விசாகம் அன்று பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ் மாதப் பிறப்பு, தியாகராஜர் அபிஷேகம், நடராஜர் அபிஷேகம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, வியாழன்தோறும் குரு வழிபாடு, கார்த்திகையில் முருகன் வழிபாடு, காலாஷ்டமி பைரவர் பூஜை, அமாவாசை, பௌர்ணமி ஆகியவை விசேஷமாக நடைபெறுகின்றன. தினசரி ஆறு கால பூஜைகள் நடக்கின்றன. காலை 7 மணிக்கு திருவனந்தல், காலை 9 மணிக்கு கால சந்தி, பகல் 12 மணிக்கு உச்சி காலம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, இரவு 7.30 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜைகளும் நடைபெறுகின்றன. 

உள் பிரகாரம்
உள் பிரகாரம்

எப்படி செல்வது?

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருக்காரவாசல் திருத்தலம். திருவாரூரிலிருந்தும், திருத்துறைப்பூண்டியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு கண்ணாயிரநாதர் உடனுறை கைலாச நாயகி திருக்கோயில், திருக்காரவாசல் -610202 என்ற முகவரியில் அணுகலாம்.

தொடர்புக்கு: 04366 - 247824.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com