சிறுநீரக நோய்களைப் போக்கும் ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்
By கு. வைத்திலிங்கம் | Published On : 09th July 2021 05:00 AM | Last Updated : 08th July 2021 05:51 PM | அ+அ அ- |

சிறுநீரக நோய்களைப் போக்கும் ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்
சோழவளத் திருநாட்டில் ஒவ்வொரு சிவாலயமும் ஒரு சிறப்பைப் பெற்று விளங்குகிறது. அந்த வகையில் சமயக் குரவர்களில் ஒருவரான அப்பரால் பாடல் பெற்றுத் திகழ்கிறது ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் திருக்கோயில்.
மேலும் இத்திருக்கோயிலில் சிவகாமசுந்தரியுடன் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீபஞ்சநதன நடராஜர் சிறுநீரக நோய்களைப் போக்கும் பரிகாரக் கடவுளாகத் திகழ்கிறார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (திருச்சியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில், பாடாலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில்) அமைந்துள்ளது ஊட்டத்தூர். இந்த ஊரில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சுத்தரத்தினேசுவரர் திருக்கோயில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டுக்குள்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.

தலச்சிறப்பு
இத்திருக்கோயில் பிரம்மா பூஜித்து தனது சாபம் நீங்கப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பிரம்ம தீர்த்தம் உடல் பிணிகளைப் போக்கும், குறிப்பாக சிறுநீரக நோய்களைப் போக்கும் தீர்த்தமாகத் திகழ்கிறது. சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டோர் இக்கோயிலுக்கு வந்து பஞ்சநதன நடராஜருக்கு வெட்டிவேரை 48 துண்டுகளாக்கி மாலையாக அணிவித்து, இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தை எடுத்துவந்து சன்னதி முன் வைத்து, அர்ச்சனை செய்து வெட்டிவேரை அபிஷேக நீருடன் கலந்து, தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால் நோய்ப் பாதிப்பிலிருந்து மீளலாம் என்பது நம்பிக்கை.
இத்தலத்துக்கும் செல்லலாம்.. ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர் திருக்கோயில்
மூலவர் மகா மண்டபத்தின் எதிரில் இயற்கையாகத் தோண்டப்பட்ட பிரம்ம தீர்த்தம், கோடைக் காலத்திலும், மழை இல்லாத காலத்திலும் நீர் வற்றாமல் இருப்பது இறைவனின் திருவருளால் நடக்கும் அற்புதமாகும். இந்த தீர்த்தமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு
மாமன்னர் ராஜராஜ சோழர் ஊட்டத்தூரின் மேற்குப் பகுதியில் சோழேசுவரர் என்ற மேட்டுக்கோயில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அவ்வாறு ஒருமுறை அவரது வருகையையொட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி குதிரைக்குப் புல் செதுக்கும் பணி நடைபெற்றது.
அந்தத் தருணத்தில் ஒரு இடத்தில் மண் வெட்டியால் தரையைச் செதுக்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ரத்தம் பீரிட்டது. உடனடியாக மன்னரிடம் பணியாளர்கள் தகவலைத் தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீரிடுவது நின்று, வெட்டப்பட்ட தழும்போடு பழைய சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது. அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே மன்னர் கோயில் கட்ட ஏற்பாடு செய்தார்.
இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்
இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்ட திருக்கோயில் ஊட்டத்தூர் அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சுத்தரத்தினேசுவரர் திருக்கோயில். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியைப் பார்த்தால் மண்வெட்டியால் வெட்டப்பட்ட வடு உள்ளது.

ராஜராஜ சோழன் உடல்நலன் குன்றியபோது இத்திருக்கோயிலுக்கு வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து, ஈசனை வழிபட்டுக் குணமடைந்ததாகக் கூறுவர். இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தத்தை அருந்தி, உடல் நோய், மனநோய் நீங்கப் பெற்று நலம் பெற்று வருகின்றனர்.
சூரிய பூஜை
சுயம்பு மூர்த்தியான சுத்தரத்தினேசுவரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் மாசி மாதம் 12, 13, 14 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி, சுவாமி மீது படும் அரிய நிகழ்வான சூரிய பூஜை பெருவிழா இக்கோயிலில் இன்றளவும் நடைபெறுகிறது.
ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர்
சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வல்லவராக இத்திருக்கோயிலில் உள்ள பஞ்சநதன நடராஜர் திகழ்கிறார். சுமார் எட்டு அடி உயரமாக காட்சியளிக்கும் நடராஜருக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அபிஷேகம் நடைபெறும்.
_.jpeg)
ஆசிய கண்டத்திலேயே அற்புதமான மிகப் பெரிய கல்லால் ஆனவர் நடராஜர். ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என ஐந்துவகை நதனக்கற்கள் இருப்பதாக மூப்பு ரகசியம் எனப்படும் சித்புருஷர்களின் சிலாக்கிரந்தங்களில் சிற்பக் கலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை கற்களிலும் குறிப்பாக சூரிய பிரகாசிப்புத் தருகின்ற பஞ்சநதனக் கல்லில் அருள்மிகு நடராஜ மூர்த்தியின் சிற்பம் அமைவது லட்சத்தில் ஒரு கோயிலில் மட்டுமே ஆகும்.
பரிகாரத் தலங்களின் வரிசையில்.. தோஷம் போக்கும் வல்லம் ஏகௌரியம்மன் திருக்கோயில்
அத்தகு சிறப்பு தமிழகத்தில் இத்திருக்கோயிலுக்கு மட்டுமே உள்ளது. எட்டு அடி உயர பஞ்சநதனக் கல்லில் ஆன நடராஜர் சிலை இங்கு மட்டும்தான் உள்ளது. எத்தனையோ இந்திரமூர்த்திகள் தாங்கள் இழந்த இந்திர பதவிகளை இந்த நடராஜரை வழிபட்டு, மீண்டும் பெற்றார்களாம்.
சிறுநீரகத்தில் கல் உருவாகி பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரகம் செயலிழந்து ரத்தம் சுத்திகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்கள், ஒரு கிலோ வெட்டி வேரை வாங்கி 48 துண்டுகளாக்கி மாலையாகக் கட்டி, நடராஜருக்கு அர்ச்சனை செய்து, இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தை எடுத்துச் செல்ல வேண்டும். வெட்டி வேரைத் தினமும் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து, அதன் சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சிறுநீரக நோய் பாதிப்பு குறைகிறது என்றும் பாதிக்கப்பட்ட பலர் இக்கோயிலுக்கு வந்து பூஜை செய்து பலன் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து, நடராஜருக்கு அபிஷேகம் செய்து குணமடைந்த பின்னர், மீண்டும் இங்கு வந்து அர்ச்சனை செய்தும் சென்று வருகின்றனர்.
கிழக்கு நோக்கி நந்தியாறு நந்திகேசுவரர்
பொதுவாக சிவாலயங்களில் நந்திகேசுவரர் சுவாமியைப் பார்த்து மேற்கு நோக்கித்தான் காட்சியளிப்பார். ஆனால், இத்திருக்கோயிலில் நந்தியாறு நந்திகேசுவரர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இதற்கும் தனிச் சிறப்பு இருக்கிறது.

நதிகளில் யார் பெரியவர் என்ற போட்டி கங்கை, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளுக்குள் ஏற்பட்டதாம். அதனால் சிவபெருமான், நந்தியெம்பெருமானிடம் அனைத்து நதிகளின் நீரையும் குடித்துப் பார்க்க வேண்டும். குடிக்க முடியாத நதிதான் பெரிய நதி என்று கூறினாராம். அதன்படி ஒவ்வொரு நதியின் நீரையும் குடித்த நந்தியெம்பெருமானால் கங்கை நதியின் நீரைக் குடிக்க முடியவில்லையாம். அதனால் பெரிய நதி கங்கை நதி என அறிவிக்கப்பட்டதாம்.
இதையும் படிக்கலாம்: வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்
இறந்தவரின் அஸ்தியை இத்திருக்கோயிலுக்கு அருகிலுள்ள ஆற்றில் கரைத்த போது அது புஷ்பமாக மாறியதாலும், அந்த அஸ்தியை கங்கையில் கரைத்த போது அங்கு எலும்புக்கூடாக இருந்ததாலும், காசியைவிட வீசம் அதிகம் உடையது நந்தியாறு என்று சிவபெருமான் கூறியதாகவும், அதன்படி கோயிலுக்கு அருகில் நந்தியாறு சென்றதாகவும் ஐதீகம். அதனாலேயே நந்தியாறு செல்லும் கிழக்கு நோக்கி நந்திகேசுவரர் இத்திருக்கோயிலில் காட்சியளிக்கிறார்.
_.jpeg)
சிற்பத்திலும் சிறப்பு
இக்கோயிலின் கொடிமரத்துக்கு அருகில் மேல்விதானத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 15 நதிகள், 9 கிரகங்களைக் கொண்ட சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பாகும்.
மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத இந்தச் சிறப்பு இக்கோயிலில் அமைந்திருப்பதால், இங்கு 60, 70, 80 - ஆண்டுத் திருமணங்களைச் செய்வது சிறப்பாகும்.
அகிலாண்டேசுவரி அம்மன்

இக்கோயிலில் சுவாமி சன்னதிக்கு இடதுபுறத்தில் தனி சன்னதி கொண்டு விளங்குகிறார் அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன். சுவாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் அம்மனுக்கும் நடைபெறுவது சிறப்பாகும்.
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக வில்வம் திகழ்கிறது. தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தம் உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடும், வளர்பிறை அஷ்டமியில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிறப்பாகும். மற்ற திருக்கோயில்களில் உள்ளது போன்று குரு தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விஷ்ணு, துர்கை, விநாயகர், முருகப்பெருமான் சன்னதிகள் இங்குள்ளன.
திருவிழாக்கள்
வைகாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும் வைகாசி பிரம்மோத்ஸவம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆனி மாதத்தில் திருமஞ்சனம், ஆடியில் ஆடிப்பூரம், ஆவணி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் திருக்கார்த்திகை தீபம், மார்கழியில் திருவாதிரைப் பெருவிழா, மாசி மாதத்தில் மகாசிவராத்திரிப் பெருவிழா போன்றவை வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்கலாம்: நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்
கோயில் நடை திறக்கும் நேரம்
காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
பூஜை காலங்கள்
காலசாந்தி - காலை 8.30 - 9.30 மணிக்குள்
உச்சிக்காலம் - முற்பகல் 11.30 - 12 மணிக்குள்
சாயரட்சை - மாலை 6 - 6.30 மணிக்குள்
அர்த்த சாமம் - இரவு 7.30 - 8 மணிக்குள்

போக்குவரத்து வசதி
விமானத்தில் வருபவர்கள்: திருச்சி விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் சென்று, அங்கிருந்து கோயிலைச் சென்றடையலாம்.
கார், வேன் மூலம் வருபவர்கள் : மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி வந்தும்,
சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1. டோல்கேட் வந்து சமயபுரம், சிறுகனூர் வழியாக வந்தும்,
வட மாவட்டங்களிலிலிருந்து வருபவர்கள் பெரம்பலூர் வழியாக பாடாலூர் வந்தும் கோயிலைச் சென்றடையலாம்.
பேருந்து மூலம் வருபவர்கள் : திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பெரம்பலூர் வழித்தடப் பேருந்துகளில் பாடாலூர் சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம். அல்லது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகளிலும் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் திருக்கோயில்,
ஊட்டத்தூர்,
லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்.
படங்கள்: எஸ். அருண்.