Enable Javscript for better performance
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்

    By வி.என். ராகவன்  |   Published On : 22nd October 2021 05:00 AM  |   Last Updated : 21st October 2021 05:50 PM  |  அ+அ அ-  |  

    Thanjaipureeshwarar_amma_1

    இறைவன்: தஞ்சபுரீஸ்வரர் - இறைவி: ஆனந்தவல்லி அம்மன்


    பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி. இவருடைய மைந்தன் விஸ்வாரஸ் என்பவரும் ஒரு ரிஷி. இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கேகசி என்ற அரக்க குல மங்கையை மணந்து கொண்டார். இவர்களுக்கு முதலில் ராவணன், கும்பகர்ணன் என்ற மகன்களும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர். பின்னர், விபீஷணனும், குபேரனும் மகன்களாகப் பிறந்தனர்.

    ராவணனும், குபேரனும் தீவிர சிவ பக்தர்கள். விபீஷணன் விஷ்ணு பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். ராவணன் ஈசனிடம் தனக்கு மனிதரால் மட்டுமே மரணம் கிடைக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

    கோயில் முகப்பில் உள்ள ராஜகோபுரம்

    குபேரன் தன் தீவிர சிவ பக்தியால் பெரும் செல்வத்தையும் அரசையும் பெற்றான். அவனுடைய நகருக்கு அழகாபுரி என பெயர். அது, அளகை என்றும் அழைக்கப்பட்டது. தேவசிற்பி மயனால் மிக அழகான அரண்மனையும் அவனுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது. சில காலத்தில் அவன் அண்ணன் ராவணன் அவன் அரசைப் பறித்துக் கொண்டு அவனை விரட்டிவிட்டான்.

    இந்தக் கோயிலுக்கும் செல்லலாம்.. சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில்

    செல்வத்தை இழந்து குபேரன் மீண்டும் தன் பதவியைப் பெறுவதற்காகப் பல சிவத்தலங்களுக்குச் சென்று தவமிருந்தான். அவன் கடைசியாக இந்த தலத்துக்கு வந்து சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவபெருமானிடம், நீயே துணை! நான் உனது தஞ்சம்! என காலில் வீழ்ந்து கதறித் தவமிருந்தான்.

    ஐயப்பன்

    இந்தத் தலம் வராஹ புராணத்தில் சமீவன் ஷேத்திரம் என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவன் தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமான் அவனை வடதிசைப் பாலகனாகவும், நவநிதியையும் காக்கும் வரத்தையும் அளித்தார்.

    இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம் நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

    தஞ்சம் என்று தன்னை வந்தடைந்த குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் தஞ்சபுரீஸ்வரர் என்றும், குபேரபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார். இந்த நகரமும் குபேரன் வழிபட்ட ஞாபகமாக அழகாபுரி என்றும், அளகை எனவும் அழைக்கப்பட்டது. இந்தத் தலமும் குபேரன் பட்டணம் போலவே மிகச் சிறப்பாக விளங்கியது.

    மூலவர் சன்னதி முகப்பு

    இங்கே பராசர முனிவர் இந்தத் தலத்தின் மகிமையை உணர்ந்து, இங்கே தவசாலை அமைத்து அமைதியாக வாழ்ந்து வந்தார். அவர் சிவனையும், திருமாலையும் வழிபட்டார். மார்க்கண்டேய மகரிஷியும் இத்தலத்தில் பல காலம் வாழ்ந்துள்ளார்.

    இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்துதோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

    தஞ்சன், தாரகன், தண்டகன் என 3 அசுரர்களும் சிவனை வழிபட்டுப் பல வரங்களைப் பெற்றனர். தஞ்சன் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த அகந்தையால் இங்கே உள்ள மனிதர்களையும், ரிஷிகளையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். தாரகன் பெற்றிருந்த வரத்தின்படி அவனைக் கொல்ல முயன்று அவன் ரத்தம் கீழே சிந்தினால், மீண்டும் அவன் உயிர்பெற்று எழுந்திடுவான். பராசர ரிஷியும், தேவர்களும் சிவபெருமானிடமும், மகா விஷ்ணுவிடமும் சென்று முறையிட்டனர்.

    கோயில் பிரகாரம்

    முனிவர்களும், தேவர்களும் இத்தல ஈசனிடம் தஞ்சாசுரனிடமிருந்து தங்களைக் காக்க வேண்டும் என தஞ்சம் புகுந்ததாலும், அவர் தஞ்சபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் எனக் கூறப்படுகிறது. சிவபெருமான் ஆனந்தவல்லியாக இங்கே வீற்றிருக்கும் அம்மனை அசுரர்களைக் கொல்ல அனுப்பினார். மகா விஷ்ணுவும், அம்மனும் மூன்று அசுரர்கள் மீது போர் தொடுத்தனர்.

    தாரகன் என்ற அசுரனைக் கொல்ல அம்மன் பச்சைக்காளி என்ற நாமதத்தில் காளியாக மாறினாள். ஒவ்வொரு முறையும் தாரகனைக் கொல்லும்போதும் அவன் சிந்திய ரத்தத்தில் இருந்து அவன் மீண்டும் உயிர்த்தெழுந்து போரிட்டான். தாரகன் கோடி முறை மீண்டும், மீண்டும் உயிர்பெற்றுக் காளியுடன் போரிட்டான். முடிவில் அம்மன் பவளக்காளி என்ற ரூபத்தில் மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் தாரகனைக் கொன்று அவன் ரத்தம் கீழே சிந்தாமல் குடித்துவிட்டாள். தாரகனும் இறந்தான். அதனால் இந்த அம்மனுக்கு கோடி அம்மன் என்ற பெயருண்டு. கோடி அம்மனுக்கு இந்த கோயிலின் அருகே தனிக்கோயில் இருக்கிறது. பச்சைக்காளி, பவளக்காளி என்ற இரு காளிகளுக்கும் தனித்தனியே கோயில் இருக்கின்றன.

    பஞ்சமுக ஆஞ்சனேயர்

    மகாவிஷ்ணு தண்டகன் என்ற அசுரனை முதலில் கொன்றார். தாரகன், தண்டகன் என்ற இரு அசுரர்களும் மாண்டது கண்டு தஞ்சாசுரன் கலக்கமுற்றான். முடிவில் யானை வடிவெடுத்து தன்னோடு போர் புரிய வந்த தஞ்சன் என்ற அரக்கனை நரசிம்மராக மாறி மகா விஷ்ணு அழித்தார். அவன் உயிர் துறக்கும்போது, மகாவிஷ்ணுவிடமும், அம்மனிடமும் தன் பெயரால் இத்தலம் விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். அதனாலே இந்தத் தலம் முதலில் தஞ்சன் ஊர் என அழைக்கப்பட்டு, தஞ்சவூர் என மாறி இப்போது தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது. தாரகனைக் கொன்ற பவளக்காளியாகிய அம்மன் மீண்டும் இங்கே சிவனுடன் சேர்ந்து காட்சி அளித்தாள்.

    இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

    ராவணனால் தன் செல்வத்தையும், அரசையும் இழந்த குபேரனும், தஞ்சாசுர அரக்கனால் பெரும் கொடுமைக்கு ஆளான முனிவர்களும், தேவர்களும் இத்தல ஈசனிடம் தஞ்சம் என்று தஞ்சம் புகுந்ததனாலும், இத்தலம் தஞ்சம் புகுந்த ஊர் என பொருள்படும்படி தஞ்சம் ஊர் என முதலில் அழைக்கப்பட்டு, பின்பு மருவி இப்போது தஞ்சாவூர் என ஆகியிருக்கலாம்.

    கோயில் பிரகாரம்

    தஞ்சம் என்று தன்னிடம் வந்து குபேரனுக்குச் சிவபெருமான் பெரும்பேறளித்தார். அதேபோல, போரின் முடிவில் தஞ்சம் என்று சொல்லிமாண்ட தஞ்சாசுரனுக்கும் அவன் கேட்ட வரத்தை மகாவிஷ்ணுவும், அம்மனும் அளித்தனர். எனவே, இத்தலத்தில் தஞ்சம் என்று யார் வந்து சிவபெருமானையும், அம்மனையும், திருமாலையும் வழிபட்டாலும் அவர்களுக்குக் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இங்கே நிலவுகிரது.

    நரசிம்மராக மாறி மகா விஷ்ணு யானை உருவத்தில் இருந்த தஞ்சாசுரனைக் கொன்றதை நினைவுபடுத்தும் விதமாக இங்கே வீர நரசிம்மருக்கு கோயிலும் இருக்கிறது. அங்கே திருமகள் தஞ்சை நாயகி என்ற நாமத்தில் வீற்றிருக்கிறாள். மாமணிக்கோயில், மணிக்குன்றம், தஞ்சையாளிநகர் என்ற 3 கோயில்களும் ஒன்று சேர்த்து தஞ்சை மாமணிக்கோயில் என்று ஒரே திவ்யதேசமாக ஆழ்வார்களால் பாடப்பட்டிருக்கிறது.

    சூரியன், பைரவர், சனீஸ்வரர்

    வீரநரசிம்மர் குடி கொண்டிருக்கும் கோயில் தஞ்சையாளிநகர் என ஆழ்வார்களால் பாடப்பட்டிருக்கிறது. திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் இந்த திவ்யதேசத்தின் மீது பாடி இருக்கின்றனர். இவர்களில் பூதத்தாழ்வார் 7 ஆம் நூற்றாண்டையும், திருமங்கை ஆழ்வாரும், நம்மாழ்வாரும் 9 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவர்கள். எனவே, இந்த வீர நரசிம்மர் கோயில் குறைந்தது கி.பி. 900-க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், இரு கோயில்களிலும் தஞ்சை சரபோஜி மன்னர் செய்த திருப்பணிகள் பற்றித்தான் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜசோழனும் இந்த கோயிலில் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில் எப்படியும் 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக இருக்கும்.

    விஷ்ணு துர்க்கை

    திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரின் காலமும் ஏறத்தாழ கி.பி. 630-இல் இருந்து கி.பி. 700 வரை இருக்கும். சுந்தரரின் காலம் கி.பி. 750-இல் இருந்து கி.பி. 800 வரை இருக்கும். பாடல் பெற்ற சிவத்தலங்களில் இந்தக் கோயில் வராததால் சுயம்புவாக இருந்த சிவபெருமானுக்கு ஏறத்தாழ கி.பி. 800-க்கு மேல்தான் கோயில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். பல்லவர்கள்தான் பல நரசிம்மர் கோயில்களைக் கட்டி இருக்கின்றனர். அப்போது பல்லவர்கள்தான் ஆட்சி செய்து வந்ததால், இந்தக் கோயிலையும், வீர நரசிம்மர் கோயிலையும் பல்லவர்கள்தான் கட்டியிருக்க வேண்டும். இந்தக் கோயில் 3 அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து அமைந்திருக்கிறது.

    இறைவன் தஞ்சபுரீஸ்வரர்

    இறைவன் தஞ்சபுரீஸ்வரர்

    இறைவன் சுயம்பு லிங்கமாகும். மூலவர் லிங்கத் திருமேனி சற்றே அளவில் பெரியதாகும். இறைவன் சன்னதிக்கு வெளியே துவாரபாலகர்கள் இருக்கின்றனர். வெளி பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கஜலஷ்மி, சரஸ்வதி, பஞ்சமுக ஆஞ்சனேயர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இருக்கின்றன. சனீஸ்வரனும், பைரவரும் முக மண்டபத்தில் காட்சியளிக்கின்றனர்.

    இறைவி ஆனந்தவல்லி அம்மன்

    இறைவி ஆனந்தவல்லி அம்மன்

    ஆனந்தவல்லி அம்மன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் அஷ்டலஷ்மி சுதை சிற்பங்கள் தூண்களில் தட்சிணாமூர்த்தி, நடராஜர் வீற்றிருக்கின்றனர். இந்தக் கோயில் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் தஞ்சாவூரிலிருந்த 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

    கஷ்டங்களை நீக்கும் குபேர வழிபாடு

    ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்து, சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. எனவே இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்றும் குபேர யாகம் நடைபெறுகிறது. இப்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று குபேர பூஜையும், குபேர வழிபாடும் செய்யப்பட்டு வருகிறது.

    சிவபெருமானை தன் மனைவியுடன் வழிபடும் குபேரன்

    இது, குபேரன் வழிபட்ட தலம் என்பதால், பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம் நீங்க இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். லஷ்மி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. தீபாவளி நாளில் நடைபெறும் குபேர யாகம் மிகவும் பிரபலமானது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

    நடை திறப்பு

    காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
     

    நவக்கிரகங்கள்

    எப்படிச் செல்வது?
    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, பாபநாசம் வழித்தடத்தில் செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறினால் வெண்ணாற்றங்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லலாம். வெளியூரிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி, பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று நகரப் பேருந்துகள் மூலம் செல்லலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி, சாலை வழியாக இக்கோயிலை அடையலாம்.

    கோயில் முகவரி

    அருள்மிகு தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்,
    வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர்.
    தொடர்புக்கு: 96003 60499.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp