நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

நவக்கிரகத் தோஷம், திருமணத்தடை, கல்வி யோகம், மன சஞ்சலம், சித்த பிரமை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடச் செய்பவர் இத்தலத்து இறைவன்.
சுதர்சன வல்லி, விஜய வல்லி சமேதராக எழுந்தருளிய சக்கரத்தாழ்வார்
சுதர்சன வல்லி, விஜய வல்லி சமேதராக எழுந்தருளிய சக்கரத்தாழ்வார்

தஞ்சாவூர் வடக்கு வீதியிலிருந்து எல்லையம்மன் கோயில் தெருவுக்குச் செல்லும் ராஜகோபால சுவாமி கோயில் தெரு, வடக்கு வீதியுடன் இணையும் இடத்தில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இருக்கிறது ராஜகோபால சுவாமி கோயில்.

தற்போது கோயிலின் கருவறையில் ராஜகோபாலன் திருமேனிக்குப் பதிலாக சக்கரத்தாழ்வார் திருமேனியே உள்ளது. இது பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தத் திருக்கோயில் கருவறை அழகிய கற்றளியாகவும், நந்தவனங்களும், பிற்காலத்தில் எடுக்கப்பெற்ற மண்டபங்களும் சூழ்ந்ததாகவும் ஒரே கோபுர வாயிலோடு திகழ்கிறது. கருவறையின் அதிட்டானத்தில் இரண்டு நீண்ட கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று தமிழில் கிரந்தம் கலந்தும், மற்றொன்று தனிக்கிரந்தத்திலும் காணப்படுகின்றன.

திருமலையம்மன் பேட்டை என்ற பெயர் குறிப்பால் 1538 ஆம் ஆண்டில் இந்தக் கோயில் உள்ள இடம் வணிக மையமாகத் திகழ்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

செவ்வப்ப நாயக்கர் காலத்திலும், பின் வந்த அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் காலத்திலும் இத்திருக்கோயில் மிகவும் போற்றப்பட்டது. ரகுநாதர் மற்றும் விஜயராகவர் காலத்தில் இக்கோயிலின் உயர்ந்த ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. இந்த ராஜகோபுரம் முதல்நிலை வரை கருங்கற்பணியாகவும், அதற்கு மேல் செங்கற்பணியாகவும் எடுக்கப்பட்டுள்ளது. கோபுர நிலைக் கால்களில் ரகுநாதர் மற்றும் விஜயராகவ நாயக்கரின் உருவச்சிலைகள் உள்ளன. சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் இக்கோபுரம் திகழ்கிறது. மேல் தளங்களில் செங்கற்களின் மேல் சுதை வேலைப்பாடுகள் இல்லை.

இத்திருக்கோயில் வாயில் அருகில்தான் விஜயராகவ நாயக்கரை, பீஜப்பூர் முகமதியத் தளபதிகள் இருவரும், அவரது வீரர்களும் மராட்டிய ஏகோஜியும் சேர்ந்து கடுமையாகத் தாக்கிய இடம் உள்ளது. இங்குதான் விஜயராகவ நாயக்கர் உயிர் நீத்தார். 1675 பிப்ரவரி 3-ஆம் நாளில் நடந்த இப்போரின்போது பிஜப்பூரின் முகமதியப் படையினரால் இத்திருக்கோயில் சூறையாடப்பட்டிருக்கலாம். இந்த நிகழ்வுக்குப் பிறகு மராட்டியர் ஆட்சிக் காலம் முழுவதும் இராஜகோபால சுவாமி அல்லது மதன கோபால சுவாமி பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

மராட்டிய ஆட்சி முடிவு பெற்றதும் கடைசி மன்னரான சிவாஜியின் மனைவி காமாட்சி பாய் சாகேப் கி.பி. 1881-இல் இந்தக் கருவறையில் சக்கரத்தாழ்வாரை நூதனமாகப் பிரதிஷ்டை செய்தார். இதுபற்றிய தகவல் வெண்ணாற்றங்கரையிலுள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயில் முக மண்டபத்துத் தூணில் உள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது கோபுரம்
இரண்டாவது கோபுரம்

இக்கோயிலைக் கட்டிய அச்சுத தேவராயர், திருமலாம்பா உருவச்சிலைகள் உள்ளே இடம்பெற்றிருந்தன. தற்போது கோபுர வாயிலை ஒட்டி அமைந்துள்ள சியாமளாதேவி கோயிலுக்குள் உள்ளன.

ராஜகோபால சுவாமி கோயில் வாளகத்தில் இரண்டு தனித்தனி மண்டபங்கள் உள்ளன. மேல் திசையில் உள்ள மண்டபம் சிவேந்திரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இதற்குள் மராட்டியர்களின் வழிபாட்டுத் தெய்வமான சிவேந்திரர் உருவம் தேவியருடன் உள்ளது. ஒவ்வொரு சிற்பத்துக்குப் பின்புறமும் மிகப் பெரிய அறுகோணம் ஒவ்வொன்று உள்ளது. இம்மண்டபத்துக்குள் ஒரு முதியவரின் உருவமும் கற்சிலையாக ஆளுயரத்தில் உள்ளது. இது மராட்டிய மன்னர்களின் குருநாதரின் உருவச்சிலை எனக் கூறப்படுகின்றது. கோபுர வாயிலுக்கு உட்புறமாக வடதிசையில் உள்ள மண்டபத்தில் காளி கோயிலும், அணி அணியாகக் கல் உருவச் சிலைகளும் உள்ளன.

கோயில் பின்புறம்
கோயில் பின்புறம்

சக்கரத்தாழ்வார்

இக்கோயிலில் சுதர்சன வல்லி, விஜயவல்லி சமேத சக்கரத்தாழ்வார் மூலவராக அருள்புரிந்து வருகிறார். சக்கரத்தாழ்வாரை முன்னிலைப்படுத்தும் விதமாக இக்கோயில் இருக்கிறது. பொதுவாக சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்மர் உருவம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சுதர்சன வல்லி, விஜயவல்லி சமேதராக எழுந்தருளி உள்ளதால், சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்மர் உருவம் இல்லை. அதே நேரத்தில் கிழக்கு ராஜகோபுரத்தின் பின்புறம் வலதுபுறத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பங்களாகக் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளனர்.

சக்கரத்தாழ்வார் சன்னதி முகப்பு
சக்கரத்தாழ்வார் சன்னதி முகப்பு

இவ்விரு நரசிம்மர்களும் நேர்கொண்ட பார்வையாகச் சக்கரத்தாழ்வாரை நோக்கிய வண்ணம் உள்ளனர் என்பதே இக்கோயிலின் தனித்தன்மையைக் காட்டுகிறது. மூலவர் 16 கரங்களுடனும், அதுபோன்றே உற்சவர் 16 கரங்களுடனும் அமையப்பெற்றுள்ளனர். இக்கோயிலின் உள்புற சுவாமி புறப்பாட்டுக்காக அஷ்டபுஜத்துடன் சக்கரத்தாழ்வார் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.

சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார்

ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திரம் அன்று கருவறையில் மூலவர், உற்சவர், புறப்பாட்டு உற்சவர் என மூன்று சக்கரத்தாழ்வார்களும் ஒருசேர பக்தர்களுக்குத் தரிசனம் அருள்வர். இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சனர், சக்கரபாணி என்கிற நாமமும் உண்டு.

நவக்கிரக தோஷம் போக்க வல்லவராக இங்குள்ள சக்கரத்தாழ்வார் திகழ்வதால் பக்தர்கள் இவரை நவக்கிரக தோஷ சக்கரத்தாழ்வார் என அழைக்கின்றனர்.

கிழக்கு நோக்கிய வண்ணம் கட்டப்பட்டுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் மற்றொரு சிறிய கோபுரம் காணப்படுகிறது. அக்கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கருடாழ்வார் சன்னதி உள்ளது. சக்கரத்தாழ்வாரை நோக்கிய வண்ணம் கருடாழ்வார் காணப்படுகிறார். எங்குமே காண இயலாத வகையில் அற்புதமான தோற்றத்துடன் கருவறையில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார்.

சிவேந்திரர் சன்னதி முகப்பு
சிவேந்திரர் சன்னதி முகப்பு

சிவேந்திரர்

இக்கோயிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது. இக்கோயிலின் மேற்குப் புறமாக அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் மராட்டியர்களின் வழிபாட்டுத் தெய்வமான சிவேந்திரர் தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

சிவேந்திரர்
சிவேந்திரர்

வடக்குப் புறத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களின் இஷ்ட தெய்வமான ஸ்ரீபகுளாமுகி காளியம்மன் சன்னதி உள்ளது. சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, கோலாலம்பூர் மகாலட்சுமி சிலைகள், சப்த கன்னிகள் சிலைகள், பைரவர், மார்த்தாண்ட பைரவர் சிலைகளும் உள்ளன.

பகுளாமுகி காளியம்மன்
பகுளாமுகி காளியம்மன்

மிக உயரமான துர்க்கை சிலை

இங்குள்ள துர்க்கை தஞ்சாவூரிலேயே மிக உயரமானவர். துர்க்கை வழிபாடு செய்பவர்களுக்கேற்ற கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. ஆண்டுக்கொரு முறை மகா சண்டி யாகம் நடைபெறுகிறது. ஆடி மற்றும் தை மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதன் அருகில் சுமார் 100 தெய்வச் சிலைகள் அணி, அணியாக உள்ளன. தஞ்சாவூரில் இதுபோன்று ஒரே இடத்தில் இவ்வளவு தெய்வச் சிலைகள் இங்கு மட்டுமே உள்ளன.

விஷ்ணு துர்க்கை
விஷ்ணு துர்க்கை

ஸ்ரீபகுளாமுகி காளியம்மனைச் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலம் மற்றும் பெளர்ணமி, அமாவாசை நாள்களில் தரிசனம் செய்து வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறுவது உறுதி என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

சக்கரத்தாழ்வாரைத் தரிசனம் செய்ய பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம என்ற மந்திரத்தை ஒன்பது முறை சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜபித்தால் நவக்கிரகத் தோஷங்கள் விலகும்.

மண்டபம்
மண்டபம்

பாவங்கள் நீங்கும்

பக்தர்கள் நவக்கிரகத் தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரைத் தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றும் அல்லது 9 வியாழக்கிழமைகள் அல்லது 9 சனிக்கிழமைகளில் 9 அகல் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, கற்கண்டு, உலர்ந்த திராட்சைகளை நிவேதனமாக வைத்து அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது இக்கோயிலின் ஐதீகம்.

முற்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் ஏற்படும் கெடுதிகள், யாவும் நீங்கும். நவக்கிரகத் தோஷம் போக்கும். திருமணத் தடைகள் விலகும்.

இவர், கல்வி தொடர்பான தடைகளை நீக்கிச் சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். மனச் சஞ்சலம், சித்தப் பிரமை, பேய் பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளிலிருந்து விடுபடச் செய்வார்.

பைரவர்
பைரவர்

குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் ஏற்படும் தடைகள், சிரமங்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்ற குறைபாட்டை நிவர்த்தி செய்ய வல்லவராகச் சக்கரத்தாழ்வார் திகழ்கிறார். இவரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் எட்டாத கல்வியும் எளிதில் கிட்டும். வெளிநாடுகளில் கல்வி பயிலும் யோகம் கிடைக்கும்.

வாழ்விலும், செய்யும் தொழிலிலும் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும், பணிபுரியும் இடத்திலும் எதிரிகளால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளிலிருந்து விடுபடச் செய்பவர் சக்கரத்தாழ்வார். இவரை ஒருமுறை தரிசனம் செய்தால் போதும் எதிரிகள் தொல்லைகள் இனி இல்லை என்ற நிலை ஏற்படும்.

மன நலனுக்குத் தீர்வு

மன நலன் தொடர்பான சிகிச்சை பெறுபவர்கள் அவசியம் ஒருமுறை அவரவர் ஜன்ம நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வாரை 9 மாதங்கள் வழிபட்டால் மனச் சஞ்சலங்களிலிருந்து விடுபட்டு, மன நிம்மதியைப் பெறலாம். மாதந்தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று காலை 8 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்குச் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சிறப்புப் பரிகார அர்ச்சனை மற்றும் ஒன்பது முறை திருக்கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசக்கரத்தாழ்வார் மற்றும் பகுளாமுகி காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மன்களைத் தரிசனம் செய்தும், அவரவருக்கு வேண்டிய பரிகாரங்கள் செய்தும் வாழ்வில் வளம் பெறலாம்.

கோயில் அமைந்துள்ள இடம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. தெற்கு வீதி, எல்லையம்மன் கோயில் வழியாக நடந்தோ, ஆட்டோ அல்லது காரிலோ செல்லலாம்.

ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று இக்கோயிலைச் சென்றடையலாம். விமானத்தில் வருவோர் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக வரலாம்.

தொடர்புக்கு: உதவி ஆணையர் - 04362 - 223384

தொடர்பு முகவரி

ராஜகோபால சுவாமி திருக்கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்,
மேல வீதி, தஞ்சாவூர் - 9

படங்கள்: எஸ்.தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com