Enable Javscript for better performance
மங்கள வாழ்வு அருளும் கூகூர் குகேசுவரர் திருக்கோயில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மங்கள வாழ்வு அருளும் கூகூர் குகேசுவரர் திருக்கோயில்

    By கு.வைத்திலிங்கம்  |   Published On : 29th July 2022 05:00 AM  |   Last Updated : 30th July 2022 12:48 PM  |  அ+அ அ-  |  

    koogursivan2-horz

    கல்யாணசுந்தரி அம்மன் உடனுறை குகேசுவரர்

     

    ராமபிரானால் சகோதரனாக ஏற்கப்பட்ட குகனுக்கு இறைவன் காட்சியளித்த சிறப்புக்குரியது, சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, பிரிந்த உறவு, சுற்றம், நட்பை மீண்டும் மலர செய்தல், மங்கள வாழ்வை அருளுதல் போன்றவற்றின் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கூகூரிலுள்ள அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் உடனுறை குகேசுவரர் திருக்கோயில்.

    மேற்குத் திசை நோக்கி சன்னதி கொண்டுள்ள இறைவன் குகேசுவரருக்கு மாதந்தோறும் சதய நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுவது, மாத சிவராத்திரி நாள்களில் மகரிஷிகளால் வழிபடப் பெற்ற பெருமை போன்றவற்றை  இக்கோயில் கொண்டுள்ளது.

    தல வரலாறு

    ராமாயணக் காலத்தில் ஸ்ரீராமபிரான் படகோட்டியாக வாழ்ந்த குகனை நால்வருடன் ஐவரானோம் என்றும், வானர அரசன் சுக்கிரனை ஆரத்தழுவி நாம் ஆறுவறானோம் என்றும்,  விபீசேனனை அரவணைத்து எழுவரானோம் என்று கூறினார்.

    இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

    ஆனால், ஸ்ரீராமபிரானுக்கு  அடிமனதில் ஒரு சிறு குறை இருந்தது. அந்த ஏழு பேரில் ஆறுபேர் அரசர். குகன் மட்டும் படகோட்டி. எனவே ராமபிரான் குகனை அரசராகப் பார்க்க ஆசைப்பட்டார். மறுபிறவியில் நீ எங்களைப் போன்று மன்னராக வாழ்வாய் என்று வரம் அருளினார். அதன் பயனாக, படகோட்டியான குகன் மறுபிறவியில் மன்னராகப் பிறந்தார். அவர் கொள்ளிடக் கரையின் வடபுறத்தில் மன்னராக ஆட்சி செய்தார். 

    நுழைவுவாயில்

    குகன் ஆட்சி செய்த தலமே குகேசுவரபட்டிணம் என்றழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் கூகூராக மறுவியுள்ளது. இவ்விடம் பெரும்பட்டிணமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக கூகூரைச் சுற்றியுள்ள இடங்களில் இடிந்த நிலையில் மதில் சுவர்கள் இன்றும் காணப்படுகின்றன. 

    திருக்கோயிலின் சிறப்பு 

    குமரன், குருபரன், முருகன், சரவணன், குகன் என பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆறுமுகப் பெருமான்,  ஐந்து முகங்களைக் கொண்ட தந்தை சிவபெருமானை வழிபட்டது இத்திருக்கோயிலில்தான். முருகனின் திருநாமங்களில் குகன் என்பதும் ஒன்று. ஆன்மாவின் இதய குகையில் உறைபவர் என்ற காரணத்தால் இவர் குகன் என்றழைக்கப்படுகிறார். இதனால் இங்குள்ள இறைவன் குகேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

    ராமாயணக் காலத்திலும் சிறப்பு பெற்றிருந்த திருக்கோயில் கூகூர். மாத சிவராத்திரிதோறும் மகரிஷிகளால் வழிபடப்பெற்ற திருக்கோயில்களில் குகேசுவரர் கோயிலும் ஒன்று. இங்குதான் ஸ்ரீராமரிடமிருந்து பாதரட்சைகளை தம்முடைய  தினசரி பூஜைக்காக குகன் பெற்றார்.

    கோயிலின் உள் பிரகாரப் பகுதி

    பண்டையக் காலங்களில் நவநாத சித்தர்கள், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்களை அளித்திட, அந்த புராண பாத்திரங்களையே இறையருளில் நேரில் தரிசித்து, வரவழைத்து விளக்கங்களைப் பெற்றனர். அந்த திருக்கோயில்களில் அதர்வண வேதசக்திகளை நிறைந்த கூகூர் திருக்கோயிலும் ஒன்றாகும். ஸ்ரீராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்கன், கிருஷ்ண பரமாத்மா போன்ற பல தெய்வ மூர்த்திகளும், புராண விளக்கங்களைக் கூற விழைந்த சித்தர்களும், மகரிஷிகளும் நவநாத சித்தர்களை நேரில் தரிசித்து வழிபட்ட திருக்கோயில் கூகூர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

    கோயிலின் அமைப்பு

    மிகவும் பழைமையான இக்கோயில் மேற்குத் திசை நோக்கி அமைந்துள்ளது. தென்திசையிலுள்ள முகப்பைத் தாண்டியதும் விசாலமான பிரகாரமும், நந்தியெம்பெருமானும், பலிபீடமும் அமைந்துள்ளன. கோயிலின் தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீபாலசுப்ரமணியரும் எழுந்தருளியுள்ளனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் தென்புறத்தில் பைரவரும், அதன் அருகில் சண்டிகேசுவரரும், மேற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். பிரதோஷ நந்தியெம்பெருமான் மிக அற்புதமாக ஈசனை நோக்கி எழுந்து ஓடுவது போலக் காட்சியளிக்கிறார்.

    அருள்மிகு குகேசுவரர் சுவாமி சன்னதி விமானக் கோபுரம்

    கூவி அழைத்தால் குகன் வருவான் 

    பண்டையக் காலத்தில் பிரளய சிருஷ்டிக்காக வானியல் மின் சக்திகளை அளித்த இத்திருக்கோயில் இதுவாகும். மகா பிரளயத்துக்கு முன்னர் சர்வேசுவரன் (ஈசுவரன்) ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்தார். சிருஷ்டிக்காக அவர் விழித்தெழ வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சர்வேசுவரனோ ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவரது யோக நிலையை எப்படி கலைப்பது எனத் தேவர்கள் யோசித்தனர். அனைவரும் திருமாலை வேண்டினர்.

    குகேசுவரர் திருக்கோயில் - உள்நுழைவுவாயில் பகுதி

    உடனடியாக மத்ஸ்ய அவதார மூர்த்தியாக சாந்த குணங்களுடன் தங்கக்கவசம் போல ஒளிவிடும் பெருமாள் தோன்றினார்.  அவர் அருகே காமதேனு தனது நான்கு புதல்விகளுடன் வந்து நின்றார். தொடர்ந்து சகலவிதமான அலங்காரங்களுடன் கல்யாண சுந்தரியாய் அம்பிகை தோன்றினார். பின்னர் அம்பிகை தனது மெல்லிய குரலில் கூ... கூ.. என வேத நாதங்களை ஓதிட, இறைவன் ஞான யோகத்திலிருந்து மீண்டார். சிருஷ்டி பரிபாலனத்துக்கு பிரம்மாவுக்குத் துணை புரிந்தார் கல்யாணசுந்தரியான அம்பிகை. கூவி அழைத்தால் குகன் வருவான் என்பது இதிலிருந்துதான் பிறந்தது. இதனால் இத்திருக்கோயிலுக்கு வந்து குகேசுவரரை வணங்கினால், அவர் சகல சௌபாக்கியங்களையும் அருளுவார் என்பது ஐதீகம்.

    இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

    நந்தியெம்பெருமான்

    இறைவன் குகேசுவரர்

    மேற்கு நோக்கிய சன்னதியில் இறைவன் குகேசுவரர் எழுந்தருளியுள்ளார். குகன் என்ற திருநாமம் கொண்ட முருகப்பெருமான் இத்திருக்கோயிலில் தந்தையை வழிபடுவதால்,  இத்திருக்கோயில் இறைவன் குகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனே சந்தன மரமாகி, சந்தனக்கட்டையாக விளங்குகிறார். சந்தனம் அரைக்க அரை மணம் தருவது போல, இங்குள்ள இறைவனை வழிபட வழிபட அனைத்து நன்மைகளையும் அருளுகிறார் குகேசுவரர்.

    இதையும் வாசிக்கலாம்: சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்

    குகனுக்கு  ஈசுவரன் அருளிய தினம்  சதய நட்சத்திர நாளாகக் கருதப்படுவதால், ஒவ்வொரு மாதமும் இத்திருக்கோயில் இறைவன் குகேசுவரர் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்  செய்யப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைவனை வழிபடுவோர் சகலவித நன்மைகளையும் பெறுகின்றனர். 

     கல்யாணசுந்தரி சன்னதி கருவறை விமானக் கோபுரம்

    இறைவி கல்யாணசுந்தரி அம்மன் 

    கோயிலின் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சிவன் சன்னதியின் வலதுபுறத்தில் தெற்கு நோக்கியவாறு அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் எழுந்தருளியுள்ளார். நின்ற கோலத்தில் இளநகை தவழும் முகத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அம்மனுக்கு நான்கு கரங்கள். தன் மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் எழுந்தருளியுள்ளார். கல்யாண குணங்களைக் கொண்டு, மங்களகரமான சௌபாக்கிய, அனுக்கிரக சக்தி கொண்டு இறைவி விளங்குகிறார். 

    திருமணக் கோலத்தில் 

    நாள்தோறும் மணக்கோலத்தில் இறைவன் குககேசுவரரும், இறைவி கல்யாணசுந்தரி அம்மனும் எழுந்தருளி, தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு சகல-சௌபாக்கியங்களையும் அளித்து வருகின்றனர். மேலும் இவர்களை வழிபடுவதால் மாங்கல்ய தோஷங்கள், புத்திர தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.

    வள்ளி-தேவசேனா சமேத ஆறுமுகப்பெருமான் சன்னதி

    பிரிந்த உறவு, சுற்றம், நட்பை மீண்டும் மலரச் செய்ய 

    சித்திரை மாதத்தில் சதய நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வந்து குகேசுவரர் சுவாமிக்கு சந்தனக் காப்பிட்டு, வழிபடுவது மகத்தான நல்வரவுகளைத் தரும் என்பது ஐதீகம். பெற்றோர்- பிள்ளைகள், ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையே நல்லுறவைப் பேண அருளும் திருக்கோயிலாக கூகூர் விளங்குகிறது. திருமணம் ஆகாமல் அல்லது மனைவியை இழந்து வயதாகிவிட்டதால் விரக்தியுடன் வாழ்வோர் நல்ல மன உறுதி, நல்ல மன வைராக்கியம் பெற்று, குடும்பத்தை கட்டிக்காத்திட உதவும் திருக்கோயிலாக கூகூர் உள்ளது. மேலும் பிரிந்த உறவு, சுற்றம், நட்பை மீண்டும் மலரச் செய்ய உதவும் கோயில் என்பதால், ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவன்-இறைவியை வழிபட்டுச் செல்கின்றனர்.

     நவக்கிரக நாயகர்கள், பைரவர் சன்னதி

    சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்

    ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரத்தன்று இறைவன் குகேசுவரருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் சித்திரை மாதத்தில் இந்த அலங்கார விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. எனவே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் மங்கள வாழ்வைப் பெறுவர்.

    தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் இறைவன், இறைவிக்கு வஸ்திரங்கள் அணிவித்து, பூஜைகளை செய்து பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். மேலும், சந்தனக்காப்பு அலங்காரமும் செய்து வழிபடுகின்றனர்.

    திருவிழாக்கள்

    இத்திருக்கோயிலில் சஷ்டி, கார்த்திகை,  பிரதோஷம், மாசி மாத மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், சித்திரை மாதத்தில் சதய அபிஷேகம்,பங்குனி மாதத்தில் தீ மிதி விழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

    எப்படிச் செல்வது?

    இக்கோயில் திருச்சியிலிருந்து சுமார் 31 கி.மீ. தொலைவில் உள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் எனில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1 டோல்கேட், வாளாடி, மாந்துறை, லால்குடி வழியாக கூகூருக்கு வர வேண்டும். மேலும் கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், வாளாடி, மாந்துறை, லால்குடி வழியாக கூகூர் வரலாம்.

    நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நெ.1. டோல்கேட், வாளாடி, மாந்துறை, ஆங்கரை, லால்குடி வழியாக கூகூருக்கு வந்து சேரலாம்.

    டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பூண்டி, செங்கரையூர், அரியூர், அன்பில், மணக்கால், லால்குடி வழியாக கூகூர் வரலாம்.  இந்த வழித்தடத்தில் வர இயலாதவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், நெ.1 டோல்கேட், வாளாடி, மாந்துறை, ஆங்கரை, லால்குடி வழியாக கூகூர் கோயிலுக்கு வந்தடையலாம். மேலும் லால்குடியிலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் கூகூருக்கு பேருந்து உள்ளிட்ட வாகன வசதிகள் உள்ளன.

    இக்கோயிலுக்கு வருபவர்கள்  கோயில் பரம்பரை அறங்காவலர் கே.ஜெயகிருஷ்ணனை 99446 14666, 99654 43367 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் உடனுறை குகேசுவரர் திருக்கோயில்,
    கூகூர்,
    லால்குடி வட்டம்,
    திருச்சி மாவட்டம்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp