சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்

இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும் திருத்தலங்களாக வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள் திகழ்கின்றன.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் நரசிம்மர்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் நரசிம்மர்

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகேயுள்ள வெண்ணாற்றங்கரையின் தென் கரையில் அருகருகே வரிசையாக மூன்று திருமால் கோயில்கள் கிழக்கு நோக்கி உள்ளன. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில்கள் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்றவை. ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும் இந்த மூன்று கோயில்களையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன.

நரசிம்ம பெருமாள் கோயில் முகப்பு
நரசிம்ம பெருமாள் கோயில் முகப்பு

இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் ஏறத்தாழ அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவுக்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்துக்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

நரசிம்மர்
நரசிம்மர்

மேலச் சிங்க பெருமாள் கோயில்

இதில், முதலாவதாக அமைந்திருப்பது மேலச்சிங்க பெருமாள் கோயில். கருவறையில் சிங்கப்பெருமாள் திருமேனி ஏறத்தாழ 6 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில், தாயார் இருவருடன் அமைந்துள்ளது. இத்தலத்து தாயார் தஞ்சை நாயகி என அழைக்கப்படுகிறார். இத்திருமேனிகளுக்கு முன்பாக நின்ற கோலத்தில் ஆழியும் சங்கும் ஏந்திய திருமால், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறைய செப்புத் திருமேனிகளாகக் காட்சி அளிக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் நரசிம்மர்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் நரசிம்மர்

இவற்றில் ஒருவகைத் திருமேனிகள் சோழர் காலப் படைப்பாகத் திகழ்கிறது. மூலவராகத் திகழும் சிங்க பெருமாளும், தாயார் இருவரும் விசயநகரக் காலத்துக் கலை அமைதியோடு காணப்படுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்பெறும் தஞ்சை நாயக்கர்களின் சிற்பப் படைப்புகளை ஒத்தே இத்திருமேனிகள் உள்ளன.

தாயார்
தாயார்

சிங்கப்பெருமாளான நரசிம்ம மூர்த்தியின் கருவறைக்குத் தென்புறம் உள்ள தாயார் சன்னதியும் கற்றளியாகவே அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் அதிட்டான வர்க்கத்தில் சுமார் ஓர் அடி உயரமுடைய தஞ்சை நாயக்க மன்னர் ஒருவரின் உருவச்சிற்பம் உள்ளது. இது அச்சுதப்ப நாயக்கரின் பிற உருவச்சிலைகளை ஒத்துக் காணப்படுகிறது.

மணிக்குன்ற பெருமாள் கொடிமரம்
மணிக்குன்ற பெருமாள் கொடிமரம்

முன்னொரு காலத்தில் மேலவெளியிலுள்ள சிங்க பெருமாள் குளக்கரையில் இத்திருக்கோயில் செவ்வப்ப நாயக்கர் மற்றும் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் (கி.பி. 1635 - 1690) இடம்பெயர்ந்ததாகச் சில தரவுகளின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பின்னர் வந்த மராட்டியர் ஆட்சிக் காலத்தில் மன்னர்களான சகஜி, சரபோஜியும், இரண்டாம் சிவாஜியின் மனைவி காமாட்சிபாய் சாகேபும் இக்கோயிலில் திருப்பணிகள் செய்தனர். இத்திருக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

மணிக்குன்ற பெருமாள் முகப்பு
மணிக்குன்ற பெருமாள் முகப்பு

மணிக்குன்ற பெருமாள் கோயில்

மேலச் சிங்க பெருமாள் கோயிலுக்கு பின்புறம் அருகிலுள்ள மற்றொரு திருக்கோயில் மணிக்குன்ற பெருமாள் கோயில் என்கிற மாமணிக்கோயில். இக்கோயிலும் முன்னொரு காலத்தில் மேலவெளி ஊராட்சிக்கு உள்பட்ட களிமேடு கிராமத்தின் கிழக்கில் அமைந்திருந்ததாகவும், பிற்காலத்தில் வெண்ணாற்றங்கரைக்கு இடம்பெயர்ந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோயிலிலும் காமாட்சிபாய் சாகேப் திருப்பணிகள் செய்தார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணிக்குன்ற பெருமாள்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணிக்குன்ற பெருமாள்

இக்கோயில் கருவறையில் அமர்ந்த ஆழியும், சங்கும் ஏந்திய திருமாலும், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி இருவரும் மிகப்பெரிய திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளனர். இத்திருக்கோயிலைத்தான் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

அம்புஜவல்லி தாயார்
அம்புஜவல்லி தாயார்

இத்திருமேனிகள் விஜய நகரக் கலை அமைதியுடன் செய்யப்பட்டுள்ளது. கருவறையை ஒட்டி ஸ்ரீஅம்புஜவல்லி தாயார் சன்னதியும் உள்ளது.

மணிக்குன்ற பெருமாள் உற்சவர்
மணிக்குன்ற பெருமாள் உற்சவர்

நீலமேக பெருமாள் கோயில்

மாமணிக் கோயிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது நீலமேக பெருமாள் கோயில். இதில், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி என்கிற உபய நாச்சியார்களுடன் நீலமேக பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

நீலமேக பெருமாள் கோயில் - ராஜகோபுரம்
நீலமேக பெருமாள் கோயில் - ராஜகோபுரம்

மற்ற கோயில்களில் எம்பெருமானின் இடது கால் சேவைதான் கிடைக்கும். ஆனால், இக்கோயிலில் இடது காலை மடித்து, வலது கால் சேவை தருகிறார். இது மிகவும் விசேஷமானது. அர்ச்சாவதாரமாகக் காட்சியளிக்கும் கருங்கல் திருமேனிகளே கருவறையை அலங்கரிக்கின்றன.

நீலமேக பெருமாள் கோயில் முகப்பு
நீலமேக பெருமாள் கோயில் முகப்பு

பெருமாளுக்கு அருகே பராசர மகரிஷியின் திருவுருவமும் உள்ளது. தாயாருக்கு செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதி உண்டு. இத்திருக்கோயிலைத்தான் பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தஞ்சை மாமணிக்கோயில் எனப் போற்றுகின்றனர்.

நீலமேக பெருமாள் சன்னதி முகப்பு
நீலமேக பெருமாள் சன்னதி முகப்பு

மூலவராகத் திகழும் நீலமேகப் பெருமாள் விஜய நகரச் சிற்பக்கலை அமைதியுடன் திகழ்கிறது. ஆனால், இக்கோயிலுள்ள செப்புத் திருமேனிகளில் பெரும்பாலானவை சோழர் காலத்தைச் சார்ந்தவை. கருவறை கட்டுமானம் நாயக்கர் காலத்தைச் சார்ந்துள்ளதால், அவர்களுடைய காலத்துக் கோயிலாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் நீலமேக பெருமாள்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் நீலமேக பெருமாள்

இக்கோயிலில் மகா மண்டபத்துடன் இணைந்துள்ள முக மண்டபம் செங்கற் தல வளைவு ஓட்டுக் கூரையுடன் உள்ளது. இதன் முகப்பில் பெரிய திருவடியின் திருவுருவம் உள்ள மண்டபம் உள்ளது. முக மண்டபம் 1870 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

வலது கால் சேவை
வலது கால் சேவை

திருச்சுற்றின் வடமேற்கு மூலையிலுள்ள தேசிகன் சன்னதி 1886ஆம் ஆண்டு மராட்டிய மன்னர் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. மகா மண்டபத்தில் வராக மூர்த்தி, லஷ்மி நரசிம்மர், ஆண்டாள், சேனை முதலியார் ஆகியோரின் திருமேனிகள் கருங்கல்லில் உள்ளன. இவற்றில் சுமார் 3 அடி உயரமுள்ள லஷ்மி நரசிம்மர் சிற்பம் மட்டும் சோழர் காலத் திருமேனி. சுகாசனத்தில் நரசிம்ம மூர்த்தி அமர்ந்திருக்க, அவரது தொடை மீது தேவி உள்ளார்.

நீலமேக பெருமாள் - தஞ்சை நாயகி உற்சவர்
நீலமேக பெருமாள் - தஞ்சை நாயகி உற்சவர்

முக மண்டபத்து தூண்கள் இரண்டில் முறையே அனுமன் பர்வதம் ஏந்தும் கோலமும், அவன் தன் வால் சுருளின் மீது அமர்ந்துள்ள கோலமும் செதுக்கப்பட்டுள்ளன. தேசிகன் சன்னதியில் உள்ள இராமானுஜர், கூரத்தாழ்வார் மற்றும் ஆழ்வார் பதின்மர் சிலைகளும் பிற்காலத்தவை.

மணவாள மாமுனிகள்
மணவாள மாமுனிகள்

இக்கோயிலில் நர்த்தன கிருஷ்ணன், திருமங்கையாழ்வார், லஷ்மி ஹயக்ரீவர், நம்மாழ்வார், இராமானுஜர், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார், விஷ்வக்சேனர் ஆகிய செப்புத் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன.

இத்திருக்கோயிலில் நித்திய நைமித்திக பூசைகள் வைகானச ஆகம விதிப்படி நடைபெறுகின்றன. பெருமாளுடைய சான்னித்யம் ஐந்து வகைத் திருமேனிகளாகப் பிரிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. மூல பேரம் எனும் மூலவர் கருவறையில் அருள்பாலிக்கிறார். கௌதுக பேரம் எனும் திருமேனி திருமஞ்சனத்துக்காகவும், உற்சவ பேரம் திருவிழாக்களுக்காகவும், யாக பேரம் வேள்வி வழிப்பாட்டுக்காகவும், தீர்த்த பேரம் வம்புலாம்சோலை சென்று தீர்த்தவாரி கொடுப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளதால், இத்திருக்கோயில் பஞ்சபேர சன்னதி என அழைக்கப்படுகிறது.

ரெங்கநாதர்
ரெங்கநாதர்

பராசர சேத்திரம்

பராசர முனிவருக்கும், மார்க்கண்டேய முனிவருக்கும் காட்சி தந்ததால், இத்தலம் பராசர சேத்திரம், மார்க்கண்டேய சேத்திரம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு முறை பராசர முனிவர் தவம் புரிய சிறந்த இடமாக இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே வந்தார். தஞ்சகன், தண்டகன், தாரகன் போன்ற அரக்கர்களின் கொடுமைக்கு உள்பட்டிருந்தது இத்தலம். இந்தக் கொடிய நிலையை மாற்ற நினைத்த பராசர முனிவரின் வேண்டுகோளால் நீலமேக பெருமாள் இத்தலத்தில் அவதாரம் செய்தார்.

தஞ்சகனுடன் போரிடும்போது தஞ்சகன் யானை உருவெடுக்க, தானும் நரங்கலந்த சிங்கமாகி அவனை மாய்த்தார். இதைக் கண்டு அஞ்சிய தண்டகன் பூமியைப் பிளந்தோட, எம்பெருமான் வராக உருவெடுத்து தண்டகனையும் அழித்தார். தாரகனை காளிகாதேவி மாய்த்ததால் ஏக வீரா எனப் புகழ்ந்தார் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் என்பது இந்தத் தஞ்சபுரித்தலத்தின் மான்மியமாகும்.

நரசிம்ம பெருமாள் கோயில் - பரமபத வாசல்
நரசிம்ம பெருமாள் கோயில் - பரமபத வாசல்

தஞ்சகனுடன் போரிட்ட நீலமேகன் தன்னுருவைச் சிங்க உருவாய் மாற்றிப் போரிட்ட தலம் தஞ்சை ஆளிநகர் ஸ்ரீவீர நரசிங்கப்பெருமாள் கோயில். மலையே திரு உடம்பு என்பதாயும், மணியாணவாருயிராம் என்பது போன்று மணியான ஒரு சிறு குன்றின் மீது காட்சி தரும் பெருமாள் கோயில் ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் தலமாகும்.

தஞ்சகன் மாண்டதைக் குறித்து அஞ்சியோடும் இடம் தஞ்சை மாமணிக் கோயிலான ஸ்ரீநீலமேக பெருமாள் கோயில். இந்த ஸ்ரீவராகப் பெருமாள் வெண்ணாற்றங்கரை ஸ்ரீநீலமேக பெருமாள் கோயிலின் முக மண்டபத்தில் வலவெந்தை ஸ்ரீலஷ்மி நரசிம்மஸ்வாமியின் அருகில் சேவை சாதிக்கிறார். நீலமேகர், வராகர் உருக்கொண்டு தண்டகனை மாய்த்தால் இத்தலத்துக்கு வராக சேத்திரம் என்ற மற்றொரு பெயருமுண்டு.

பெரிய நம்பிகள்
பெரிய நம்பிகள்

ஒரு சேர தரிசித்தால் பலன்

பொதுவாக நரசிம்மர் தனித்து இருப்பார். மேலச் சிங்கபெருமாள் கோயிலில் மட்டுமே  கருவறையில் வீர நரசிம்மர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இங்கு உற்சவருக்கு மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

நீலமேக பெருமாள் கோயில் பராசர முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்த இடம். மாமணிக் கோயில் மார்க்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்த தலம். இங்கு உள்ள மூன்று கோயில்களையும் ஒரு சேர தரிசனம் செய்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும்.

கருடன் சன்னதி
கருடன் சன்னதி

பஞ்ச நரசிம்ம தலம்

இங்கு 5 நரசிம்மரை ஒரு சேர தரிசனம் செய்ய பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

1. வீர நரசிம்மர், 2. முன்மண்டபத்தில் யோக நரசிம்மர், 3. நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், 4. கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், 5. தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என 5 நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்தால் பஞ்ச நரசிம்மர்கள் அருள் கிட்டும்.

பிரதோஷம் சிறப்பு வழிபாடு

ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் பிரதோஷ காலத்தில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து வந்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம். நரசிம்ம ஜெயந்தி பிரதோஷ காலத்தில் நிகழ்ந்தது. எனவே பிரதோஷ காலத்தில் வீர நரசிம்ம வழிபாடு நடைபெறுகிறது.

சுவாதி நட்சத்திரத்தில் இக்கோயிலில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்வது சிறப்பு. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.

நில பிரச்னைக்கு தீர்வு

நிலம், இடம், வீடு என மண் தொடர்பான பிரச்னைகளுக்கு மேலச் சிங்க பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தீர்வு கிடைக்கும். மேலும், மாங்கல்ய தோஷம், திருமண தோஷம், ஆச்சார்ய தோஷம், சர்ப தோஷம், பிதுர் தோஷம், பிராமண தோஷம் உள்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி பெறலாம். இக்கோயிலுக்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் சென்று தேங்காய், பழம், துளசி, பூ, கற்கண்டு என தங்களது வசதிக்கேற்ப கொண்டு சென்று வழிபட்டால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா, ஆனி மாத கருட சேவை, ஆடி மாதம் ஆஷாட ஏகாதசி, வைகுந்த ஏகாதசி ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

உயர் பதவி பெற..

சனி திசை, ஏழரை சனி, அஷ்டம சனி உள்ளோர் நீலமேக பெருமாள் கோயிலுக்குச் சென்று நீல நிறப் புடவை சாத்தி எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். மேலும், உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நிலவும் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். ஆண் குழந்தை பிறக்கும். திருமணம், சொந்த வீடு அமையாதவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் நல்லபடியாக அமையும். இங்கு தல விருட்சம் மகிழ மரம். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இக்கோயிலிலுள்ள தாயாரை சேவித்தால் ஆச்சார்ய தோஷத்திலிருந்து விடுபடலாம். இதேபோல, மாமணிக் கோயிலிலும் பல தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

எப்படிச் செல்வது?

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாற்றங்கரையில் இக்கோயில்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், திட்டை, திருவையாறு வழித்தடப் பேருந்துகளில் ஏறி வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில் எனக் கூறி இறங்கலாம். ரயிலில் வருவோர் ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று இக்கோயிலுக்குச் செல்லலாம். விமானத்தில் வருவோர் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக இக்கோயிலுக்கு வரலாம்.

கோயில் நடை திறப்பு

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி

மேல சிங்கபெருமாள் கோயில், மணிக்குன்ற பெருமாள் கோயில், நீலமேக பெருமாள் கோயில்,
வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர்.

தொடர்பு எண்கள்: 9791948622 (சம்பத் பட்டர்), 04362 - 223384

படங்கள் - எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com