தொழில் வளர்ச்சி அளிக்கும் முசிறி சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்

குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி அளிக்கும் தலமாக முசிறி சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் விளங்குகிறது.
முசிறி அருள்மிகு சந்தரமௌலீசுவரர்- கற்பூரவள்ளி அம்மன்
முசிறி அருள்மிகு சந்தரமௌலீசுவரர்- கற்பூரவள்ளி அம்மன்

திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பூரவள்ளி அம்மன் உடனுறை சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் குழந்தைப்பேறு மற்றும் தொழிலில் அபிவிருத்தி அளிக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

தனது சாபம் நீங்குவதற்காக  சிவபெருமானை சந்திரன் வழிபட்டது, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது போன்ற பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டிருக்கிறது.

முசிறி அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்
முசிறி அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்

திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரியாற்றின் வடகரையில் முசிறி நகரில் அமைந்துள்ள சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சந்திரதிசை, சந்திரபுத்தி, சந்திராஷ்டமம் காலங்களில் இந்த திருக்கோயிலில் இறைவன், இறைவியைத் தரிசித்து வந்தால், சகல இடர்களும் நீங்கி செல்வங்கள் உண்டாகும் என்பது ஐதீகம்.

சாபம் நீங்க சந்திரமௌலீசுவரரை வழிபடும் சந்திரபகவான்
சாபம் நீங்க சந்திரமௌலீசுவரரை வழிபடும் சந்திரபகவான்

ஒருமுறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். இதனால் அவதியுற்ற சந்திரன், தனது சாபம் நீங்க முசிறி நகரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஆராதித்து, தனது சாப விமோசனத்தை நீங்கப் பெற்றார். சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததால்தான் இக்கோயில் இறைவனுக்கு சந்திரமௌலீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாம். கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயில்  நடைபாதை, வாத்திய மண்டபம்,  கொலு மண்டபம், உற்ஸவ மண்டபம், மகா மண்டபம், இதைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் என்ற வகையில் அமைந்துள்ளது. இந்த மண்டப நுழைவுவாயிலில் துவார பாலகர்கள் சுதை வடிவிலான திருமேனிகளாக எழுந்தருளப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கருவறை சன்னதி அமைந்துள்ளது.

இறைவன் சந்திரமௌலீசுவரர்

முசிறி சந்திரமௌலீசுவரர் சுவாமி
முசிறி சந்திரமௌலீசுவரர் சுவாமி

கருவறையில் மூன்றாம் பிறை சந்திரனைத் தனது தலையில் சூடியவாறு, கிழக்குத் திசை நோக்கிய சன்னதியில் லிங்கத் திருமேனியாக  எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அருள்மிகு சந்திரமௌலீசுவரர். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரனுக்கு ஏற்பட்ட சாப விமோனசத்தை நீக்கிய இறைவன் என்பதால், தன்னை நாடி வரும் பக்தர்களின்  சாப விமோசனங்களையும் நீக்கி அருளுபவராக சந்திரமௌலீசுவரர் திகழ்கிறார்.

சிறப்பு அலங்காரத்தில் கற்பூரவள்ளி அம்மன்-சந்திரமௌலீசுவரர் சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் கற்பூரவள்ளி அம்மன்-சந்திரமௌலீசுவரர் சுவாமி

இறைவி கற்பூரவள்ளி அம்மன்

கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் இறைவி அருள்மிகு கற்பூரவள்ளி அம்மன் சன்னதி தனியாக அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கற்பூரவள்ளி அம்மன் தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், கீழ் இருகரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். தன்னை நாடி, தேடி வரும் பக்தர்களின்  வேண்டுதல்களை நிறைவேற்றித் தந்தருளும் அன்னையாக அம்மன் திகழ்கிறார்.

திருக்கோயிலின் திருச்சுற்றில் சமயக் குரவர்களான நால்வர் சன்னதி, அருள்மிகு விநாயகர், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர், விசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் தனி சன்னதிகளைக் கொண்டு காட்சியளிக்கின்றனர். இவைத் தவிர தேவக்கோட்டத்தில்  விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கையம்மன் உள்ளிட்டோர்  எழுந்தருளியுள்ளனர்.

சிறப்பு அலங்காரத்தில் கற்பூரவள்ளி அம்மன்-சந்திரமௌலீசுவரர் சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் கற்பூரவள்ளி அம்மன்-சந்திரமௌலீசுவரர் சுவாமி

வழிபாட்டின் சிறப்பு

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள், திங்கள்கிழமை மற்றும் 2,11,20,29-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், சந்திர திசையோ, சந்திர புத்தியோ நடப்பவர்கள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சந்திர ஹோரை காலமான காலை 6 மணி முதல் 7 மணி வரை  இக்கோயிலில் சந்திரமௌலீசுவரர் பெருமானுக்கு  நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று,  அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாத அமாவாசை முடிந்த மூன்றாம் நாளில் அருள்மிகு சந்திரமௌலீசுவரரருக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து, பின் மூன்றாம் பிறை சந்திரனைத் தரிசனம் செய்து வந்தால் தொழில், கல்வி, வியாபாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். தேய்பிறை, வளர்பிறைத் திங்கள் ஆகிய நாள்களில் தவறாது பூஜையில் பங்கேற்றுக் கொண்டால், ஜாதக ரீதியாக சந்திர தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, நலம் பெற்று வாழலாம். மேலும் சந்திராஷ்டம நாள்களில் இறைவன் சந்திரமௌலீசுவரரை மனமுருகி வழிபட்டால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்பு நீங்கி, மன நிம்மதி பெறலாம் என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் மாதந்தோறும் முருகன் சன்னதியில் நடைபெறும் சஷ்டி வழிபாட்டில் பங்கேற்று மக்கட்பேறு, வேலைவாய்ப்பு பெற்றவர்கள் ஏராளம். இதுபோல, காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டிலும் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இந்த வழிபாட்டில் பங்கேற்பதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி
வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரத் தெய்வம்

முசிறி அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவி கற்பூரவள்ளி அம்மன்.  மிருகசீரிஷநட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரத் தெய்வமாக விளங்குகிறார். தாமரைப்பூவில் அகல் வைத்து, நெய் தீபமேற்றி திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து, அம்மன் சன்னதியில் வைத்து வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்  நாள்பட்ட, தீராத பிரச்னைகளுக்கு நல்ல தீர்வும், பரிகாரமும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இத்திருக்கோயில் இறைவன் சந்திரமௌலீசுவரர், இறைவி கற்பூரவள்ளி அம்மனை ஆராதிப்பதால் கடன் நிவாரணம் பெறலாம் எனவும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தொழில் அபிவிருத்தி அடையலாம் என்பதை பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். வளர்பிறை சோமவாரத்தன்று (திங்கள்கிழமை)  அருள்மிகு சந்திரமௌலீசுவரரை வழிபட்டால் மனசஞ்சலங்கள், மனநலன் பாதிப்பு போன்றவற்றுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், சஷ்டி, கார்த்திகை தீபம், ஆரூத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி மகம் போன்ற நாள்களில் இறைவனும், இறைவியும் வீதியுலா வருதல் உண்டு. ஐப்பசி மாத பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காணத் திரளான பக்தர்கள் கூடுவர். இதைத் தவிர,  பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் தேதியிலும், அமாவாசை நாளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது அஸ்திரதேவரை காவிரியாற்றில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரியும், மாலையில் சந்திரசேகரப் பெருமான் உள்பிரகாரப் புறப்பாடு வருதலும் நடைபெறும்.

சிறப்பு அலங்காரத்தில் நடராச பெருமான்
சிறப்பு அலங்காரத்தில் நடராச பெருமான்

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் முசிறி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மதுரை, தேனி,திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற தென் மாவட்டங்கள்,  சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள்,  தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வர வேண்டும் எனில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி, முசிறி வந்தடையலாம்.

கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குளித்தலையில் இறங்கி, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலமாக முசிறி வரலாம், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நெ.1 டோல்கேட் வந்து, அங்கிருந்து நாமக்கல், சேலம் மார்க்கத்தில் செல்லும் புறநகர்ப் பேருந்துகளிலும், தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை, மேட்டுப்பாளையம் போன்ற புறநகர்ப் பகுதிகளிலுக்குச் செல்லும் பேருந்துகளிலும் ஏறி முசிறி வந்தடையலாம்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்தும், விமான நிலையத்திலிருந்தும் முசிறிக்கு வருவதற்கு கார், வேன் போன்ற வாகனங்கள் வசதி உண்டு.

கோயில் நடை திறப்பு நேரம்

இக்கோயில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் இந்த நேரம் மாறுபடலாம்.

தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் சிவஸ்ரீ மாணிக்கசுந்தர சிவாச்சாரியார் 94435 15974, சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார்  94437 65385, சந்திரமௌலி குருக்கள் 75982 61264  ஆகியோரை மேற்கண்ட கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு கற்பூரவள்ளி அம்மன் உடனுறை சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்,
முசிறி,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com