பேறு அருளும் பெருமாள் புஷ்கரணி!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ளது வழூர்அகரம் எனப்படும் வழூர்.
பேறு அருளும் பெருமாள் புஷ்கரணி!
Published on
Updated on
2 min read

நன்னீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து’ என்று சேக்கிழார் பெருமான் போற்றிய தொண்டை வளநாட்டில் பச்சை பசேல் என்று இயற்கை எழில் சூழ, அமைதியான கிராமமாக விளங்குகிறது வழூர். ஆன்மீகக் கருவூலமாகத் திகழும் இதன் சிறப்பை அறிவோம்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ளது வழூர்அகரம் எனப்படும் வழூர். மேல்மருவத்தூர்-வந்தவாசி சாலையில் மருதாடு என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தூரம். 

ஊர் பெயர்க்காரணம்: சிவபெருமானின் அடி முடியைக்காண திருமாலுடன் நடந்த போட்டியில், பொய்யுரைத்ததால் தனக்கு ஏற்பட்ட ‘வழு’ நீங்கிட பிரம்மன் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. (வழு என்றால் குற்றம், தவறு என்ற பொருளும் உண்டு.) அதனால் இதற்கு வழூர் என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மன் வழிபட்டதால் இப்பதி அயனீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இவ்வூரில் காணப்படும் சோழர்கால கல்வெட்டுகளில் ‘புலியூர்க் கோட்டத்து இரும்பேடு கூற்றத்து வழுதாவூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவன் கோயில்: ஒரு சிவனாயத்திற்குரிய அனைத்து சன்னதிகளும் அமையப்பெற்று, கொடிமரம், குளம், தலவிருட்சம், விழாக்கால சிறப்புகள் என அனைத்து அம்சங்களுடன் ஊரில் வடபால் சாலையை ஒட்டி தோரண வாயிலுடன் நாற்புறமும் உயர்ந்த மதில்களோடு பிரம்மாண்டமாகத் திகழ்கின்றது அருள்மிகு காமரசவல்லி உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். எல்லையில்லா பேரழகுடன் கரங்களில் தாமரைமலர், நீலோத்பல மலர்களை தாங்கி கருணை மேலிட, பக்தர்கள் விரும்பி வேண்டுவதை வரமாக (காம- விருப்பம்) அருளுவதால், அன்னை இங்கு காமரசவல்லி என்று புக ழப்படுகின்றாள். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவத்திரு பசுமலை சுவாமிகள் இங்கு வருகை தந்து, தங்கியிருந்து,

திருப்பணிகள் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக 2014 ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தேறியது.

பெருமாள் கோயில்: ஸ்ரீ சுந்தரவதனப் பெருமாள் என்று திருநாமம் கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி மார்களுடன் சன்னதி கொண்டு அருளுகின்றார். அனைத்து சன்னதிகளுடன், ஒரு சிறிய ஆலயமாக பழம் பெருமையை சாற்றும் விதமாக அமைந்துள்ளது இந்த ஆலயம். கடைசியாக 2012-ல் சம்ப்ரோஷணம் நடந்துள்ளது. இதர கோயில்கள்: ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயம், ஸ்ரீ முத்து நாயகி அம்மன், ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயங்கள் மக்களின் வழிபாட்டில் உள்ளது.

மணிமண்டபம்: இவ்வூருக்கு மேலும் பெருமையும், புகழும் சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது, மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் கற்திருமேனி பிரதிஷ்டையுடன் மகத்தான மணிமண்டபத்துடன் கூடிய கற்கோயில். மகானின் அவதார கிரகத்திலேயே கட்டப்பட்டுள்ள இதன் கும்பாபிஷேக வைபவம் கடந்த 2022 ஏப்ரல் மாதம் சிறப்பாக நடந்தேறியது. இதில் ஒரு சிறப்பு அம்சம், மகானின் தாயார் தினசரி பூஜித்து வழிபட்டு வந்த அதே துளசி மாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்திற்கு வரும் பக்தர்கள் தற்போது இந்த துளசி மாடத்தை பிரத்யேகமாக பிரதட்சணம் செய்து தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் வழூர் வாசியாக இருந்த காலத்தில் தன் நேரங்களின் பெரும் பகுதியை சிவன் கோயிலிலும், பெருமாள் ஆலயத்திலும் கழிப்பாராம்.

புஷ்கரணியின் பெருமை: பெருமாள் கோயிலை ஒட்டியுள்ள மிகப்பெரிய தாமரைக் குளம் சுந்தரவதன புஷ்கரணி என்றும், படித்துறை 'காமகோடி படித்துறை' என்றும் அழைக்கப்படுகிறது. அக்குளத்துக்குள்ளேயே இன்னொரு குளமும் இருக்கிறதாம். அதனை ஒளவையார் குளம் என்கின்றனர். மேலும் கங்கை, யமுனை, கோதாவரி, சிந்து, நர்மதை, காவிரி போன்ற முக்கிய புண்ணிய நதிகளும் அந்தர்வாகினியாக (கண்ணுக்குப் புலப்படாமல்) தங்கள் நீர் வளத்தை பரப்பி இப்புஷ்கரணியில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இதில் நீராடுதல் மிகவும் புண்ணிய செயலாகும். இதில் நீராடினால் ஒரு புத்துணர்வு பெறுவதாக பக்தர்கள் அனுபவரீதியாக கூறுகின்றனர். எக்காலத்திலும் குளம் வற்றுவதில்லை என்பது சிறப்பு.

ஒரு நாள், குழந்தை பாலப்பருவத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை நீண்ட நேரம் காணாததால், தாய் மிகவும் தவிப்புடன் தேட, மாலைப் பொழுதில் குளத்திலிருந்து குழந்தை வெளியே வந்தான். எங்கே காணவில்லை எனக் கேட்டதற்கு கண்ணனுடன் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக பதில் அளித்தாராம் சுவாமிகள்.

புனித நீராடுதலின் சிறப்பு: இங்கு புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அவதரிப்பதற்கு காரணமாக இருந்த பெருமாளையும், பிரம்மபுரீஸ்வரரையும், அம்பிகையையும் தரிசித்து மகானிடம் வேண்டிக் கொண்டால் திருமணப் பேறு, மகப்பேறு கிடைப்பது உறுதி என்பது பக்தர்களின் ஏகோபித்த நம்பிக்கை.

ஜெயந்தி விழா: மகானின் 153 வது ஜெயந்தி வைபவம் வழூர் மணிமண்டபத்தில் பிப். 10ம் தேதி (தை – ஹஸ்தம்) சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், புஷ்கரணியில் தீர்த்தவார் போன்ற நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது. தீர்த்தவாரி சமயத்தில் சிவன், பெருமாள், கிராம தேவதைகள் உற்சவமூர்த்திகளும் அலங்காரத்துடன் வீற்றிருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப். 14ம் தேதி மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் வழூருக்கு விஜயம் செய்து, மணிமண்டபத்தில் காஞ்சி மகானின் பெரிய திரு உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அன்று ஸ்ரீ கிருஷ்ணனை தொட்டில் இடும் வைபவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. 

விழா சம்பந்தமான மேலும் தகவல் தொடர்பிற்கு 9840053289 / 9962019172

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com