

108 வைணவத் தலங்களின் தலைமையிடமாகவும், முதன்மையாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் பல்வேறு அதிசயங்களையும், சிறப்புகளையும் கொண்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில். பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்றது. பூலோக வைகுந்தம் எனவும், போக மண்டபம் எனவும், 108 வைணவ திருக்கோயில்களில் முதன்மையானதுமாகவும் திகழ்கிறது. இத்திருக்கோயில் ஏழு திருச்சுற்றுகளையும், 52 உப சன்னதிகளும், ஓம் என்னும் பிரணவ வடிவிலான தங்க விமானம், தெற்கு ஆசியாவிலேயே 236 அடி உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
திருக்கோயிலின் இருபுறமும் கங்கையைப் போல புனித ஆறான காவிரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவு என்ற தீவு பகுதியில் அமைந்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டின் அநேக நாள்களைத் திருவிழாக்களைக் கொண்ட சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமம் பாரமேஸ்வர சம்ஹிதைபடி பூஜை முறைகள் நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலில் வைணவப் பெருந்தகை ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத் திட்டம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. ராம பிரானால் பூஜிக்கப்பட்ட திருவரங்கப் பெருமாள் விக்ரகம் எனப் பெருமை பெற்ற திருத்தலமாகும்.
திருவரலாறு
ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான் தான் பூஜித்து வந்த அரங்கநாதர் சிலையைப் பரிசாக அளித்தார். அப்போது, விபீஷணன் இலங்கை திரும்பும் வழியில் சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். அரங்கநாதரை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால், அந்த சிறுவன், அரங்கநாதரை கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையிலிருந்து மீண்டும் அரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை. கலங்கிய மனநிலையிலிருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார்.
அரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கிப் பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்றும் கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். அரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாகக் கூறப்படுகிறது. மன்னர் தர்ம சோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு.
கோயில் சிறப்புகள்
சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்களைக் கொண்டுள்ளது.
'ஓம்' என்ற பிரணவ வடிவிலான தங்க விமானத்தை 24 கி.மீ. தொலைவைச் சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும் இறைவனின் திருவடியை அடையக்கூடிய முக்தி நிச்சயம் என்பது ஐதீகம். ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தை வணங்கி, உயர்ந்து நோக்கினால், கொடிமரம் அசைவதுபோல தெரியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ராமானுஜர் உடல் இன்றும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சியளிக்கிறது. அரங்கநாதர் அணிந்துள்ள காலணிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்வதாகக் கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை அரங்கநாதரின் திருப்பாதத்திலிருந்து காலணிகள் கழற்றப்படும்போது, அவரே பயன்படுத்தப்பட்டவை போலத் தேய்ந்து காணப்படும்.
ஏழு அதிசயங்கள்
உலக அதிசயங்களைப் போன்று இக்கோயிலுக்கும் ஏழு அதிசயங்கள் உள்ளன. கோயிலின் 7 மதில் சுற்றுகள் 7 உலகங்களாகக் கருதப்படுகிறது. பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற 7 பெருமைகளைக் கொண்டது. ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார் என்று 7 நாச்சியார் உள்ளனர்.
ஆண்டுக்கு 7 முறை குதிரை வாகனத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார். 7 முறை கோயிலைவிட்டு வெளியே வருவார். 7 முறை நெல் அளவு கண்டருளும் வைபவம் நடைபெறும். நாச்சியாருக்கு ஆண்டுக்கு 7 உற்சவங்கள் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கண்டுகளிக்கும் 7 சேவைகளும் உள்ளன. நவராத்திரி 7ஆம் திருநாளில் ரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களின் 7ஆவது மாதமான ஐப்பசியில் 30 நாள்களும் தங்கக் குடத்தில் காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்து யானை மீது அமர்ந்தபடி வலம் வருவது வழக்கம்.
இக்கோயிலில் வளரும் நெற்கதிர்கள், அசையும் கொடிமரம், ராமானுஜரின் திருமேனி, தேயும் அரங்கனின் காலணிகள், அரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள், ஐந்து குழி-மூன்று வாசல், ரங்க விமானம் ஆகிய 7 அதிசயங்களும் இக்கோயிலின் கூடுதல் சிறப்புகள்.
விசேஷ வைபவங்கள்
ஆடிப்பெருக்கு உற்சவத்தின்போது பெருமாள் அம்மாமண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். காவிரித் தாய்க்கு அரங்கன் சார்பில் பட்டுப் புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை போன்றவை சீதனமாக அளிக்கப்படும். வைகுந்த ஏகாதசி 21 நாள் வைபவம், சித்திரை, தை, பங்குனி மாதங்களில் நடைபெறும் 3 பிரம்மோற்சவ விழா, மாசி மாத தெப்பத் திருவிழா உள்ளிட்டவை சிறப்பு நாள்களாகும். இவைத்தவிர, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவரங்கம் (சுக்கிரன்) பரிகாரத் தலம் பற்றித் தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?
எத்தனை கோடி இன்பம் வைத்தான் இவ்வையகத்தில். ஆனால் பெற்ற பாக்கியங்களை அனுபவிப்பவர் எத்தனை பேர்?
வாழ்க்கை தரும் சுகங்களை அனுபவிப்பதற்கு ரசிகத் தன்மை - ரசிக்கும் மனோபாவம், கலையுள்ளம் வேண்டும். இகம் அளிக்கும் இன்பங்களை இருக்கும்போதே அனுபவிக்காவிடில் வாழ்வே சுவையற்றதாகிவிடும் அல்லவா?
மிகச் சிறிய வீடானாலும், அழகுறச் சுத்தமாகக் கண்கவர் பொலிவுடன் வைத்திருப்பவர் சிலரே. விசாலமான வீட்டையும் அலங்கோலமாக அக்கறையின்றி விட்டிருப்பவர் பலர்.
அழகான மனைவி அற்புதமாக வீணை இசைக்கிறாள். அடைவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் அனைவரும். ஆனால் கணவனுக்கோ அந்த அழகிலும், இசையிலும் ஈடுபாடு இல்லை. மனம் ஒடிந்து போகிறாள் மனைவி.
ஒரு சிறிய பாராட்டு? ஊஹும். எதுவுமில்லை. தன் கணவனுக்கு ஏன் இந்த அலட்சியம்? ஏன் தனிமையில் கண்ணீர் வடிக்கிறாள். அப்பெண்?
இத்தகைய கணவனது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை ஆராய்ந்தால், ரசிக்கும் தன்மையும், கலை உணர்வும் இல்லாதது தெளிவாகப் புலப்படும்.
ஆம், நவக்கிரகங்களில் வாழ்வை ரசிக்கும் மன இயல்பை அளிப்பவர் சுக்கிரனே.
பிள்ளைக்கோ அல்லது பெண்ணிற்கோ வரனை நிர்ணயிக்கும் முன் இருவர் ஜாதகங்களிலும் சுக்கிரன் சுபமாக இருக்கிறாரா என்பதையும் ஆராய்ந்து, அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
வாழ்க்கை சுகங்களைச் சுவைப்பதற்கு ஜெனன கால ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாகவும், பலமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். சுக்கிரன் பலமிழந்தோ அல்லது தோஷம் நீச்சத்துவம் ஏற்பட்டோ இருப்பின் அதற்கான பரிகார க்ஷேத்திரம் சென்று தரிசித்து விட்டு வருவது தக்க சாந்தியாக அமையும்.
சுக்கிர தோஷம், பலஹீனம் ஆகியவற்றிற்குப் பரிகாரத் தலங்களில் முதன்மையானது அரங்கன் அணி செய்யும் திருவரங்கத் திருத்தலமாகும்.
வேத சாஸ்திரங்கள், மந்திரம், தவம் அனைத்திலும் ஈடிணையற்று விளங்கியும், தேவ குருவுமான பிரகஸ்பதிக்குச் சமமான அந்தஸ்தும், மதிப்பும், ஒளியும் தனக்கு ஏன் கிடைக்கவில்லை என ஒரு சமயம் அசுர குருவான சுக்கிரனுக்கு வேதனை ஏற்பட்டது. ஆதலால் இமயத்தில் தன்னிகரற்றுப் பிரகாசிக்கும் மானஸத் தடாகக் கரையில் நிஷ்டையில் அமர்ந்து, இறைவனைத் தியானித்தார். அப்போது வானிலிருந்து அசரீரி வாக்கு எழுந்தது.
"பார்க்கவரே! அதர்மம் புரிவோரும் அதற்குத் துணை இருப்போரும் - இருவருமே தவறு செய்தவர்கள்தான். அதர்மத்தில் ஈடுபட்ட அசுரர்களுக்கும், தீயவர்களுக்கும் தாங்கள் தங்கள் சக்திகளை அளித்து உதவியதால் தங்களது ஒளி குன்றியது. ஆதலால் மனம் திருந்தி, பரம்பொருள் பூவுலகில் எழுந்தருளியுள்ள திவ்யத் தலம் சென்று அவனை வழிபடுங்கள்" என்றது அசரீரி. (பிருகுவின் புத்திரர் ஆதலால் பார்க்கவன் என்ற பெயர்).
"அந்தத் திருத்தலத்தை நான் எவ்வி கண்டு கொள்வது?" என்று வினவினார் சுக்கிரன். "எந்த க்ஷேத்திரத்தில் குரு பகவானுக்கு ஈடாகத் தங்கள் ஒளி கூடுகின்றதோ அதுவே தங்கள் தவறுகளுக்கு விமோசனம் அளிக்கும் தலம் என்று தெரிந்து கொள்ளுங்கள்” என்றது மீண்டும் அசரீரி.
உடனடியாக ஒவ்வொரு திருத்தலமாக, சுக்கிரன் தரிசித்து வரும்போது திருவரங்க திவ்ய தேசம் அடைந்து தென் திருக்காவிரியில் நீராடி எழுந்ததுமே மூவுலகங்களையும் ஈர்க்கும் ஒளிமயமான பிரகாசத்தை அடைந்தார். தான் தேடி வந்த திருத்தலம் அந்தத் திவ்ய தேசமே என மகிழ்வுடன் உணர்ந்து, அரங்கனையும், அரங்க நாச்சியாரையும் தரிசித்து வானமண்டலம் சேர்ந்து வியாழனுக்கு ஈடான ஒளியுடன் விளங்கி வரலானார்.
அரங்கனின் உட்பிராகாரமான ‘திருவண்ணாழி பிரதட்சிணத்தில் நவக்கிரகங்களும் உள்ளன. கீழே சாளக்கிராமங்கள் உள்ளதால் முழங்காலால் தவழ்ந்தே வலம் வந்தனர் ஆழ்வார்களும், ஆன்றோர்களும்."
சுக்கிரனின் தோஷத்தால் சுகம் இழந்து வேதனை அடைவோர் அரங்கனின் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வணங்கிட அந்தத் தோஷம் நீங்கி வாழ்வு ஒளிமயமாகும். (மீள்பிரசுரம்)
வசதிகள் என்னென்ன?
தங்கும் வசதி: கோயில் நிர்வாகத்தின் சார்பில் கொள்ளிடம் பஞ்சக்கரையில் யாத்ரி நிவாஸ் அமைந்துள்ளது. இங்கு 171 அறைகள் உள்ளன. இவற்றில் ஒரே நாளில் 886 பக்தர்கள் தங்க இயலும். கட்டண தொகை குறைந்தபட்சம் ரூ. 500 முதல் ரூ. 2000/- வரை உள்ளது. தொடர்புக்கு: 9486482246.
பொருள்கள் வைப்பு அறை: ரங்கா ரங்கா கோபுரம் அருகே பொருள்கள் வைப்பு அறை உள்ளது.
தகவல் மையம்: கார்த்திகை கோபுரம் அருகில் தகவல் மையம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தில் இத்திருக்கோயில் தல வரலாறு, பூலோக வைகுண்டம், ஸ்ரீரங்கம் கலை மற்றும் கட்டடக்கலை, பூமியில் சொர்க்கம், ஜீனைன் அபோயர் எழுதிய ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சக்கர நாற்காலி வசதி: தகவல் மையம் அருகில் 15 சக்கர நாற்காலிகள் இலவசமாக உள்ளது. 94428 75011, 9865390851, 78250 98125 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மிதியடி பாதுகாப்பு இடம்: ரங்கா கோபுரம், கிழக்கு வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு நுழைவு வாயில் ஆகிய மூன்று இடங்களில் மிதியடி பாதுகாப்பு இடம் உள்ளது.
மருத்துவ உதவி மையம்: ரங்கா கோபுரம் மற்றும் ரெங்க விலாஸ் மண்டபம் அருகில் மருத்துவ உதவி மையம் உள்ளது. இங்கு ஒரு மருத்துவர், செவிலியர் உள்பட உதவியாளர்கள் உள்ளனர்.
அன்னதானம்: பக்தர்கள் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. தினமும் குறைந்தது 3,000 பக்தர்கள் உணவு அருந்திச் செல்கின்றனர். 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ரூ. 3,500 செலுத்த வேண்டும். மேலும் 100 நபர்களுக்குக் கட்டளை ஏற்படுத்த ரூ. 70,000- வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். இதன் மடங்கில் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் செய்ய விருப்பமோ அதனைக் கணக்கிட்டுச் செலுத்த வேண்டும். தொடர்புக்குப் பொறுப்பாளர்- 9629328521.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை. மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி
அருள்மிகு அரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டம் - 620006
தொலைபேசி - 0431 - 243 2246
கோயிலுக்குச் செல்வது எப்படி?
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நகரப் பேருந்து மூலம் வந்து சேரலாம். இதேபோல, சந்திப்பு ரயில் நிலையம், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரும் பயணிகளும் நகரப் பேருந்துகள் மூலம் கோயிலுக்கு வரலாம். திருச்சி நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.