குரு - சந்திரன் சேர்க்கை யோகமா? தோஷமா?

நாம் இன்று பார்க்கும் கிரகங்களான குருவும் சந்திரனும் சுபம் மற்றும் அசுபம் இரண்டுமே கலத்திருப்பவர்கள் என்று மனதில் கொள்ளவேண்டும்.
குரு - சந்திரன் சேர்க்கை யோகமா? தோஷமா?
குரு - சந்திரன் சேர்க்கை யோகமா? தோஷமா?
Published on
Updated on
4 min read

நாம் இன்று பார்க்கும் கிரகங்களான குருவும் சந்திரனும் சுபம் மற்றும் அசுபம் இரண்டுமே கலத்திருப்பவர்கள் என்று மனதில் கொள்ளவேண்டும். பாவத்தன்மையோடு கிரகங்கள் அமரும்பொழுதும் வெவ்வேறு சூட்சமங்கள் உண்டு. அவற்றை ஜோதிட விதியோடு பொருத்தி, பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து  பலன்களை கூறவேண்டும். 

குரு என்பவர் நீதிமான், ஆசை அற்ற ஒரு சுபகிரகம். இவரை இந்த கலியுகத்தில் நல்லவர் என்று கூறுவது கடினம். ஆனால் தேவ குருவின் ஆசீர்வாதம் பெற்றவன் எவனோ அவன் யோகவான் ஆவான். அவனுக்கு என்ன தேவையோ அவற்றை சரியாக யோகர்கள் வாயிலாக கொடுத்துவிடுவார். எல்லையற்ற தான தர்மம் செய்யும் மனிதனுக்கு என்ன தேவையோ, அவற்றை அளவுக்கு மேல் அதாவது அபரிமிதமான பணம், பொருள் சேர்க்கை, தொழிலில் லாப உயர்வு, மன அமைதி கலந்த சந்தோசம் என்று கொடுத்து விடுவார். 

சந்திரன் அதற்கு கொஞ்சம் மாறாக காரகத்துவத்தை செயல்படுத்துவார். இவர் ஒரு முழு சுபர் என்று கூறிவிட முடியாதவர். சந்திரன் ஆசையின் உச்சக்கட்டம், மனதை வெவ்வேறு கோணத்தில் செயல்படுத்துபவன். குரு தனித்து இருப்பதோடு மற்ற கிரகங்களுடன் சேரும்பொழுது தான் பல்வேறு யோகங்களும், தோஷங்களும் தர வல்லவர்.

குருவும் சந்திரனும் இணைத்தோ, பார்வை பெற்று இருந்தாலோ குரு - சந்திர யோகம் என்றழைப்பர். இதே கோணத்தில் புலிப்பாணி தன் பாடலில் கீழே குறிப்பிட்டுள்ளார்.

கஜகேசரி யோகம் : 
ஜோதிட சஸ்த்திரப்படி கேந்திர ஸ்தானத்தில் ஒன்பது கோள்களும் பழுதின்றி நின்றிந்தால் கேந்திர யோகம் எனப்படும். இந்த யோகம் கொண்டவர்கள் அறவழியில் செல்வம் சேர்க்கும், வேள்விகளுடன் கூடிய பாராட்டு, பாராட்டுக்கு உரிய மன்னவன் ஆவான். இந்த யோகம் அனைவருக்கும் கிட்டாது.  நாம் இன்று குரு - சந்திரன் சேர்க்கை பற்றிப்பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் சந்திர லக்கினத்திற்கு கேந்திரத்தில் அதாவது 1,4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். அதேபோல் ஜாதகர் எதிரிகளை துவம்சம் செய்யும் ஆற்றல், நீண்ட ஆயுள்,  புகழுடன் கூடிய செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள், எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். பல்வேறு  சாதனையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உயர்ந்த பதவிகளை அடைந்தவர்களுக்கு இந்த யோகம் வலுத்து இருக்கும். குருவும் சந்திரனும் இந்த யோகத்தில் முக்கிய காரண கர்த்தா. ஆனால் அவற்றிலும் ஜோதிட கூற்றை அப்படியே ஏற்காமல் ஆராய்ந்து பலன் கூறல் வேண்டும்.

கேசரி யோகம் பற்றி ஜாதக அலங்காரத்தில் விரிவாக கூறப்படுகிறது.  சசி கேந்திரத்தில் மன்னவன் நிற்க, அரசன் தன் கேந்திரத்தில் அம்புலி தானும் நிற்கில் என்று கூறுவது போல குருவும் சந்திரனும் யோகத்தை தரவல்லவர். சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு, குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பதும் இயல்பு. இருவருக்கும் சமசப்தம பார்வை மட்டுமே அந்த ஜாதகரை உயர்த்தும்.

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு நின்றிருக்க,  குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் நின்றிருக்க அது கேசரி யோகம் ஆகும். கேசரி யோகம் ஒரு ஜாதகத்தில் அமையப் பெற்றிருந்தால் அது இதர கிரகங்களால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்களெல்லாம்  சிங்கத்தைக் கண்ட யானைக் கூட்டம் சிதறி ஓடுவதைப் போல விலகிப் போய்விடும்.

அங்கிச யோகம் :
கடக ராசியில் குரு உச்சம் பெற்றிருந்து, சந்திரனை பார்வையிட்டால் அதனை அங்கிச யோகம் என்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் நடைபெறும். ஐஸ்வர்யங்கள் அநேகம் பெற்றிருப்பார்கள். பெண்கள் பலரை விவாகம் செய்துகொண்டு, ஜாதகர் ஆயுள் பலத்தோடு  இந்த பூமியில் வாழ்ந்திருப்பார்  என்று புராதன ஜோதிட நூல்கள் கூறப்படுகிறது. குரு தம் வீட்டில் இருந்து 5, 7, 9ம் வீடுகளைப் பார்வையிடுகிறார்.  விருச்சிகத்தில் சந்திரன் நீசம் பெற்றாலும் குருவின் பார்வை பெற்றால் இந்த யோகம் சிறிது செயல்படும்.

யோகம் தோஷமாக காரணிகள்
ஒருவரது  ஜாதகத்தில் குருவும் சந்திரனும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்தால் யோகம் என்றாலும், பாவதிபதியாக செயல்படும்பொழுது பலன்கள் மாறுபடும். அதாவது குரு - சந்திரன் ஆகிய இருவரும் இரண்டாமிடத்திலோ ஐந்தாமிடத்திலோ இணைந்திருந்தால் அது கத்தரி தோஷம் என்று கூறலாம்.  ஜாதகருக்கு எந்த முயற்சியோ / காரியமோ சரிவர நடத்தவிடாமல் தடைபடுத்துவார்.

"குருவும் சந்திரனுடன் கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால், 'ஆகா  இருசுபர்கள்' என்று அமைந்து மகிழ்ச்சியடைந்து  விடாதே" என்று மணிகண்ட கேரளம் எச்சரிக்கிறது. இவை மனைவிக்கு உயிராபத்து, வம்ச நாசம், தரித்திரம் முதலிய கெடுபலன்கள் நடக்கும் என்று கூறுகிறது.    

யோகம் என்றாலும் அது பாவத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதற்கு ஏற்ப புலிப்பாணி தன் பாடலில்

"பாரப்பா இன்னமொரு புதுமைகேளு
பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை
செந்திருமால் தேவியுமோ விலகியுருப்பாள்”

"பாரப்பா பால் மதியும் பரம குருவும் 7ல் இருவரும் கூடி நின்றாள் திருமணம் பாவம் மற்றும்  குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும், திருமகள் அவனை சேரமாட்டால் என்கிறார் புலிப்பாணி.

சகட யோகம்:  
குருவும் சந்திரனும் யோகம் என்றாலும், பாவத்திற்கு ஏற்ப மாறுபடும். யோகம் தோஷமாக செயல்படும். ஜாதக அலங்காரத்தில் 365 பக்கத்தில் கூறப்படுகிறது.

அகடி மன்னனுக் ஆறெட் டொடுவியத்[து]   
இகடி லாமதி எய்தியிருந்திடின்
சகடயோகம் இதில்பிறந் தார்க்கெலாம்
விகட துன்பம் விளையும் அரிட்டமே !   (கலிவிருத்தம்)

குரு இருந்த வீட்டில் இருந்து 6, 8, 12 இடங்களில் ஒன்றில் சந்திரன் அமர்ந்து விட்டால் அதனை சகட யோகம் என்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருக்கும்படியாக அவமானம், துன்பங்கள், உயிர் ஆபத்து ஏற்படும்.

ஒரு சிலர் இந்த சகட யோகத்தில் பிறந்தவர்களுக்கு துன்பங்களும்  துயரங்களும் மட்டுமே வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். மற்றொரு ஜோதிட வல்லுனர்கள் கூறுவது சகடயோகத்தில் பிறந்தவர்கள் சிலகாலம் நன்மையும் பின்பு சில காலம் கெடுதலையும் மாறி மாறி அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. சகடம் என்றால் வட்ட சக்கரம் என்று பொருள். சக்கரம் எப்படி கீழ் மேலாக; மேல் கீழாக செயல்படுகிறதோ அதே போல இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏற்றங்களும் இறக்கங்களும் உடையதாக அமைந்திருக்கும் என்பது கூற்று.

சீரே நீகுருவுக்கு வியமாறெட்டில்
    செழுமதியும் மதிலிருக்க சகடயோகம்
ஆரே நீ அமடுபயம் பொருளும் நஷ்டம்
    அப்பனேபேர் விளங்கும் நிதியுமுள்ளோன்
கூறே நிகுருவுக்கு கேந்திரகோணம்
    குழவிக்கு நிதி கல்வி மெத்தவுண்டு
பாரே நீபோகருட கடாக்ஷத்தாலே
    பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே

குருபகவானுக்குப் 6,8,12ல்  ஆகிய இடங்களில் சந்திரன் வீற்றிருக்க   ஏற்படுவது சகடயோகம் ஆகும். அதனால் ஏற்படும் பலன்கள் என்னவெனின் அமடு, பயம், பொருட்சேதம், எனினும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும். இன்னுமொன்று குரு 1,4,7,10 மற்றும் 1,5,9 ஆகிய இடங்களில் இருக்க அச்சாதகனுக்கு கல்விச்சிறப்பு உண்டாகும். 

இதுதவிர ஜென்ம லக்கினத்திற்கு 6-8ல் அதிக வாழ்நாள் முழுவது இருக்கும் நமக்கு கிட்டும் செல்வம், புகழ், குலம் சார்ந்த தொண்டு, சுற்றம் சூழ அனைவரும் நம்மை கண்டு வெறுக்கவும் வைக்கும். ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் 'ஷஷ்டாஷ்டகம்'  எனப்படும் 6, 8- ம் இடங்களில் அமர்ந்தால், இந்த தோஷம் வாழ்க்கையில் அதிக போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால், வாழ்க்கையின் ஒருபாதி - கர்மாவிற்கு ஏற்ப தோஷத்தை கொடுக்கும். தோஷத்தை கட்டுப்படுத்த ஜோதிட சூட்சமத்தில் ஒரு சில விளக்குகள் உண்டு. தோஷம் பெற்ற கிரகம் புஷ்கர நவாம்ச நட்சரத்தில் அமர்ந்தாலோ, வக்கிரம் பெற்றாலோ அல்லது மறைவு பெற்ற கிரகங்கள் நீச்சம் பெற்றாலோ தோஷமானது தன்மை குறைக்கப்படும்.

தோஷம் உள்ளது என்று மனதில் குழப்பம் இல்லாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடவுளின் துணையுடன், அறிவை திறம்பட செயல்படுத்தினால் தோஷம் கூட யோகமாக செய்யப்படும்.  கோச்சரா சுப கிரகங்கள் ஒருசில குறிப்பிட்ட நாட்கள் நமக்கு நன்மை கட்டாயம் தரும், அவற்றை நாம் நல் வழியில் செயல்படுத்தலாம் என்பது என் கூற்று.   அனைத்தும் நம் நடமாடும் தெய்வம் காஞ்சி மஹா பெரியவாவிற்கு  சமர்ப்பணம்.

ஜோதிட சிரோன்மணி தேவி 
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.