ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்!

மனிதனின் குறிக்கோள் எதை நோக்கிச் செல்கிறது, அவற்றில் அவன் வெற்றி பெறுவானா, லாபம் உண்டா அவற்றில் திருப்தி அடைகின்றானா  என்று தெரிந்துகொள்ள அவரவர் ஜாதகம் கொண்டு சொல்ல முடியும்.
ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்!

மனிதனின் குறிக்கோள் எதை நோக்கிச் செல்கிறது, அவற்றில் அவன் வெற்றி பெறுவானா, லாபம் உண்டா அவற்றில் திருப்தி அடைகின்றானா  என்று தெரிந்துகொள்ள அவரவர் ஜாதகம் கொண்டு சொல்ல முடியும். ஒவ்வொருவனுக்கும் சந்தோசம் என்பது வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் என்பது உலக நியதி. முக்கியமாக ஒருவன் அதற்காக பல தொழிலை செய்து முன்னேற பார்க்கிறான். அதனால் வரும் லாபம் நன்மையே. ஜாதக கட்டத்தின் முக்கிய பாவம் பதினொன்று. பதினோன்றம் பாவம் பல்வேறு காரகத்துவத்தை கொண்டது அவற்றில் முக்கியமாக லாபம், திருப்தி, மகிழ்ச்சி, மூத்த சகோர /சகோதரி, மருமகள் மருமகன் பற்றிய விவரம், அரசாங்க கடன், ஒருவரின் நோய் சரியாகும் நிலை, தாயாரின் ஆயுள், முழங்கால் பாதிப்பு, நல்லவர்கள் நட்பு, விவசாயம் என பலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.

லக்கினம் (1) பலம் முக்கியம் என்பர் அதற்கு அடுத்து பூர்வ புண்ணியம் ஸ்தானம் மற்றும் பாக்கியம் ஸ்தானம் (5,9) என்று நல்ல பாவங்களாக சொல்லப்படுகிறது. கடைசியில் அவர் வெற்றி பெறுவாரா, சந்தோசமாக இருப்பாரா? அந்த சந்தோஷம் எதில் கிடைக்கும் என்பதை பதினொன்றாம் பாவம் உணர்த்தும். இன்று 11ம் பாவத்தின் நுணுக்கங்களை விரிவாகப் பார்ப்போம். ஒருவரின் வெற்றி  எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரின்  முக்கிய பாவங்கள் சொல்லிவிடும். அதனால் ஏற்படும் நிறைவு என்பதைப் பார்க்க ஒவ்வொருவரின் ஜாதகத்தில் நல்லது செய்யும் பாவத்தில் முக்கியமான 11ம் பாவத்தைப் பார்க்க வேண்டும்.

ஜாதகத்தில் திரிகோணத்தோடு 11ம் பாவம் சம்பந்தம் பெரும்பொழுது, அவன் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு மிகப்பெரிய செல்வந்தன் ஆவான். வாழ்க்கையில் திருப்தியுடன் சந்தோஷம் என்பது அவசியம் தேவை. முக்கியமாக 11ம் அதிபதி ஏழுடன் தொடர்புகொள்ளும்பொழுது திருமண உறவில் சந்தோஷமான வாழ்க்கை அமையும். 11ம் அதிபதி 7ல் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சி, உயர்வு பெறுவார். ஆனால் அதுவே 11ம் பாவம் என்பது இரண்டாவது திருமணத்தையும் குறிக்கும். அதனால் ஜாதகத்தில் பார்த்து பலன் சொல்ல வேண்டும். பதினோராம் பாவம் அசுப சேர்க்கை, சுக்கிரனோடு பாவி மற்றும் அயன பாவம் தொடர்பு பெரும்பொழுது, ஒருவன் மது மற்றும் மாது என்று சந்தோஷத்தை நோக்கிச் செல்வான். இந்த ஜாதகருக்கு திரிகோண அதிபதிகளும் கெட்டுப் போயிருப்பார்கள்.

லக்கினம் 5,11 மற்றும் சுபர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது குழந்தைகளுக்காக பணம் ஈட்டுவதே அவனுக்கு சந்தோஷத்தை தரும். எடுத்துக்காட்டாக கும்ப லக்கினம் 5ல் புதன் சனி அவரோடு 11ம் பாவ அதிபதி லக்கினத்தில். இவரின் 5ம் பாவத்தில் ஆட்சி பெற்ற புதனுடன், லக்கினாதிபதி சனி சேர்க்கை பெற்று 11ம் அதிபதி பார்வையில் உள்ளார். இந்த ஜாதகர்  தன் தொழில் மூலம் ஈட்டிய பணத்தைக் குழந்தைக்காக சந்தோஷமாக செலவு செய்து வெற்றி வாகையும் சூடுவார்.    

பதினொன்றாம் பாவதிபதி லக்கினதோடு தொடர்பு கொண்டால், அந்த ஜாதகர் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார். ஆனால் மற்றவர்களால் அவருக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது. எடுத்துக்காட்டாக லக்கினாதிபதி ஆட்சி மற்றும் சுப நிலையில் இருந்து, 11ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால், இந்த ஜாதகர்  மற்றவர்களுக்கு  என்றும் கனிகொடுக்கும் மரமாக இருப்பார் என்பது ஜோதிட  சூட்சுமம்.ஒருவர் தன் கூட்டுத் தொழிலை செவ்வனே செய்து லாபம் ஈட்டுவாரா என்பதை  7,11 தொடர்புகள் சொல்லுகின்றன. அதோடு சொந்த தொழில் செய்து வருமானம் ஈட்டிய பணத்தை நல்ல வழியில் செலவு செய்பவரா? என்பதை ஆராய்ந்து சொல்ல வேண்டும். இவற்றில் எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனுக்கு வேலை மற்றும் செல்வமும்  ஊக்கத் துணையாக இருக்க வேண்டும். அதற்கு கர்மகாரகன் சனி மற்றும் 10ம் பாவம் நல்ல முறையில் இருக்க வேண்டும்.

வெளிநாட்டில் சென்று லாபம் ஈட்டுவாரா என்றால் நீர் / காற்று ராசி தொடர்பு, ராகு, குரு, கிரகங்கள், 11,12 பாவங்களின் தொடர்புகள் இருக்கவேண்டும். முக்கியமாக அன்றைய  கோச்சாரம் மற்றும் தசா புத்தி வேலை செய்ய வேண்டும். லக்கினாதிபதி 11-ல், 11ஆம் அதிபதி லக்கினத்தில், 2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால் ஜாதகர் சுகபோக வாழ்வு மற்றும் இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள். அந்த பணத்தை சேமித்து வைப்பாரா என்றால் 2ம் பாவத்தையும், வீடு வாகனம் சொத்து வாங்குவாரா என்று 4ம் பாவத்தையும் பார்க்க வேண்டும்.குழந்தைக்காக அனைத்தையும் கொடுத்து ஏமாந்து விடுவாரா என்று 5ல் பாவிகளின் கூட்டமைப்பு கொண்டு பார்க்க வேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் 11ல் உள்ள கிரகம் நமக்கு ஏணி, அங்கு கிரகங்கள் இல்லை என்றால்  11ம் அதிபதிகள் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவத்தை நல்லவிதமாக  செயல்படுத்தும், கும்ப லக்கினம் 11ம் அதிபதி குரு இரண்டில் இருந்தால் குடும்ப உறவால் சந்தோஷம் அதுவே அவருக்கு லாபமாக இருக்கும். அதே சமயம் சர லக்கினங்களுக்கு பதினொன்றாம் இடம் பாதகம் இருந்தாலும் லாபத்தையும் கருத்தில் கொண்டு முதலில் லாபத்தைத் தந்துவிடுவார். பின்பு கர்மாவிற்கு ஏற்ப பாதகத்தையும் செய்து விடுவார்.

மகர  லக்கினத்திருக்கு 11ம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய், அவரே 4ம் வீட்டுக்கும் அதிபதி ஆவார். இந்த இரண்டு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட செவ்வாய் எந்த வீட்டின் வேலையை முதலில் செய்வார் என்று ஆராய்ந்து சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக 4ம் வீட்டில் வேறு கிரகம் இருந்தால் செவ்வாய் 11ம் வீட்டின் வேலையைத் தனித்து செய்வார். 4ம் வீட்டின் வேலையை செய்யமாட்டார். அதுவே 4ம் வீட்டில் செவ்வாயே இருந்தால் 4ம் வீட்டின் வேலைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார். ஜோதிட முக்கிய விதி: கிரகம் நின்ற வீட்டின் வேலையை முதலில் கையில் எடுப்பார். அடுத்து அந்த பாவத்தில் உள்ள கிரகங்கள் இல்லை என்றால் அந்த பாவத்தின் அதிபதி இருக்கும் வீட்டின் வேலையைச் செய்வார்.

லக்கினாதிபதி வலுத்து இருக்கவேண்டும். அதுவும் உப ஜெய ஸ்தனங்களான  3, 6, 10, 11 தொடர்புகொண்டால் எதிரிகளை ஆட்கொள்ளும் தைரியம், கர்மமே தொழிலாக கொண்டு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு. சூரியனுக்கு இருபுறமும் சுபக் கிரகங்கள் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் தன் இருபுறமும் வெண் சாமரங்கள் வீசப்பட வேந்தனாக அரசாள்வான்.

பணபர ஸ்தானம் என்பது 2,5,8,11 என்று நான்கு முக்கிய பாவ கூறுகள் ஆகும். இந்த பாவத்தில் பதினோராம் பாவம் என்பது சுப தொடர்பு ஒருவனை லாபத்தையும் வெற்றியையும் குறிக்கும். முக்கிய தூண்களாக கூறப்படும் கேந்திரங்கள் 1,4,7,10 பாவங்கள் ஆகும். இவற்றோடு 11ம் பாவம் தொடர்புகொண்டால் பணம் வரும் வழிகளான 2,5,8,11 பாவங்கள் தெரியும். பணம் வரும் வழி மற்றும் பணபர ஸ்தானம்  2,5,8,11 மற்றும் கேந்திர தொடர்பு எவ்வாறு என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக வீடு, வாகனம், சுகம் என்று கூறப்படும் கேந்திர ஸ்தானமான 4ம் பாவத்தை செயல்படுத்த - ஜாதக கட்டத்தில் நான்குக்கு பதினொன்று என்பது லக்னத்திற்கு இரண்டாம் பாவம் ஆகும். இவை பல்வேறு வழி சேர்த்துவைத்த செல்வத்தைத் தெரியப்படுத்தும் ஸ்தானம். 

மனைவி மற்றும் எதிர்முனையில் இருப்பவரை குறிக்கும் மற்றொரு கேந்திரம் 7ம் பாவத்திற்கும், 11ம் பாவம்  என்பது லக்னத்திற்கு ஐந்தாம் பாவம் ஆகும். இது எதிராளிக்குக் கொடுக்கும் பூர்வ புண்ணிய சேமிப்பை குறிக்கும் இந்த 5ம் பாவ பணபர ஸ்தானம். தொழிலை, கர்மாவை குறிக்கும் 10ம் பாவம், அதற்கு 11 என்பது லக்னத்திற்கு எட்டு என்பது மறைமுக வருமானம் மற்றும் தொழிலின் வெற்றியை நோக்கிய பாதையைக் குறிக்கும்.

லக்கினம் என்று கூறப்படும் 1ம் பாவத்திற்கு 11ம்  பாவம் ஜாதகருக்கு சந்தோஷத்தையும், லாபத்தையும் கொடுக்கும் முக்கிய பணபர ஸ்தானம். ஒருவரின் முக்கிய தூண்களான கேந்திரங்களோடு பணம் லாபம் பெரும் வழிகளும் தென்படும். ஆனால் அதுவே 6,8,12 தொடர்பிலிருந்தால் நஷ்டத்தைத்  தரவல்லது.

எந்த ஆசையும் அளவுக்கு மீறி இருக்கக்கூடாது. முக்கியமாக பணம், பொன், பெண் என்பது நிரந்தர சந்தோஷம் இல்லை. அதிகமாக இருப்பதை இல்லாதவருக்கு கொடுப்பது என்பது ஒரு முக்கிய திருப்தியான சந்தோஷம். பதினோராம் பாவத்திற்கு 2ம் பாவம் மோட்ச ஸ்தானம், ஒருவர் போகும் நல்ல வழியைக் காட்டும் கலங்கரை விளக்கம்.இதுவே நம் ஜாதகத்தின் கடைசி பாவம் ஆகும்.

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com